search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன.
    • ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தினந்தோறும் விதவிதமான அறிவிப்புகளை அறிவித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

    ஸ்ரீகாக்குளம் பகுதியில் பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த தனி பஜார் நிறுவப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு 3 சென்ட நிலத்தில் வீடுகள் கட்டித் தரப்படும்.

    மேலும் முதியோர் ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றார். ஏற்கனவே ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.

    மாதந்தோறும் உதவித் தொகை என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு மேலும் பெண்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் பெண்களின் கவனம் ஒட்டுமொத்தமாக தெலுங்கு தேசம் கட்சி பக்கம் திரும்பி இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    • கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார்.
    • திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தனது வாக்கை பதிவு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தேர்தல் எப்போது ஒரே மாதிரி இருப்பதில், எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மாற்றம் வரவேண்டும். ஒரே மாதிரியான வடிவத்தில் ஆட்சியிருந்தால் நன்றாக இருக்காது. திருவனந்தபுரத்தில் 15 ஆண்டுகளாக என்ன மாதிரியான ஆட்சி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.

    புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

    தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை. இதுவரை பிஜேபி கேரளாவில் வந்ததில்லை என்றும், இந்த முறை பிஜேபி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். பத்து முறை கீழே விழுந்த பிஜேபி இந்த முறை கண்டிப்பாக கேரளாவில் தனது ஆட்சியை பிடிப்பார்கள். கண்டிப்பாக திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சுரேஷ் கோபி கண்டிப்பாக வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
    • திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.

    நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

    ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.

    திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    மேற்கு வங்காளம்:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 11 மணி நிலவரப்படி அசாம் 27.43%, பீகார் 21.68%, சத்தீஸ்கர் - 35.47%, ஜம்மு-காஷ்மீர் - 26.61%, கர்நாடகா - 22.34%, கேரளா - 25.61%, மத்தியபிரதேசம் - 28.51%, மகாராஷ்டிரா - 18.83%, மணிப்பூர் - 33.22%, ராஜஸ்தான் - 26.84%, திரிபுரா - 36.42%, உ.பி.யில் 24.31%, மேற்கு வங்காளம் - 31.25% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானில் பாகிடோரா தொகுதியில் 31% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது
    • டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய ஐடி விதிகளை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் செயல்பட விரும்பும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையை உடைக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவில் இருந்து வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.




    "வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால், நாட்டை விட்டே இச்செயலி வெளியேற நேரிடும்" என டெல்லி உயர்நீதி மன்றத்தில் அந்நிறுவனம் வாதம் செய்தது.

    எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது யூசர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதாகவும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

    இந்த சட்டத்திற்கு இணங்குவது என்பது என்க்ரிப்ஷன் பிராசஸை அர்த்தம் இல்லாமல் செய்துவிடும் என்றும் அது தனியுரிமையை மீறும் ஒரு செயல் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதம் செய்யப்பட்டது.




    ஆபத்தான மெசேஜ்களை கண்டறிந்து ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மெசேஜ்ஜை அனுப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது.

    தவறான தகவல்களை பரப்புபவர்கள் , வன்முறையை தூண்டுபவர்களை அடையாளம் காண உதவும் பொறுப்பு சமூக வலைத்தளங்களுக்கு இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.

    • முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
    • மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இன்று 2-ம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

    வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





     


    • வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது வாக்கினை செலுத்தினார்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது.

    இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்தது. 2-ம் கட்டமாக 13 மாநிலங்கள்-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. மத்திய பிரதேச மாநிலம் பைதூல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் திடீரென மரணம் அடைந்ததால் அந்த தொகுதி தேர்தல் 3-ம் கட்ட ஓட்டுப்பதிவின் போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) 88 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடந்து வருகிறது. இதில் கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

    இதுதவிர ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அசாம், பீகாரில் தலா 5, சத்தீஸ்கர், மேற்குவங்காளத்தில் தலா 3, மணிப்பூர், திரிபுரா, காஷ்மீரில் தலா ஒரு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    88 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. 88 தொகுதிகளிலும் 1,202 வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:-

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி வாக்களித்தார்.

    * திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது வாக்கினை செலுத்தினார்.

    * திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான டொவினோ தாமஸ் திருச்சூர் இரிங்கலக்குடாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    * திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இஸ்ரோ தலைவர் சோமநாத் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

     * கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன் கோழிக்கோட்டில் வாக்களித்தார்.

    * கர்நாடக முதல்வர் சித்தராமையா சாமராஜநகர் சித்தராமனா ஹண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    * கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வாக்களித்தார்.

    * கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகுல் டிராவிட் வாக்களித்தார்.

    * கர்நாடக முன்னாள் முதல்வரும், மாண்டியா மக்களவைத் தொகுதியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான குமாரசாமி தனது மகன் நிகில் குமாரசாமியுடன் ராமநகராவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

    * முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே மனைவியுடன் சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.


    * ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா கோட்டாவின் சக்தி நகர் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்.

    * மத்தியப் பிரதேச துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா ரேவாவில் வாக்களித்தார்.

    • காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார்.
    • தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

    கேரளா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கை பதிவு செய்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் பன்மைத்துவத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க இங்கே வந்துள்ளேன்.

    தொகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நல்லிணக்கத்தை கண்டதால் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். மூன்று தேர்தல்களிலும் மக்கள் எனக்கு அளித்த அதே உற்சாகத்தையும், ஆதரவையும், நல்லெண்ணத்தையும் எனக்கு அளித்துள்ளனர். நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.


    • தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.
    • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்ற நிலையில், கேரள மாநில மக்களவை தேர்தலில் அந்த கட்சிகள் தனித்தனியாக களம் காணுகின்றன. இதனால் அந்த கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணியே ஆட்சி செய்து வருகிறது. இதனால் அங்கு பலம் பொருந்திய கட்சியாகவே கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்து வருகின்றன.

    அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு தான் மக்களவை தொகுதிகள். இங்குள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்தவர்கள் தான் எம்.பி.க்களாக உள்ளனர். அதிலும் 16 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழலில் தற்போதைய மக்களவை தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. மக்களவை தொகுதிகளில் ஏற்கனவே செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடும் அதே நேரத்தில், பாரதிய ஜனதாவையும் கம்யூனிஸ்டு கட்சிகள் சமாளிக்க வேண்டிய நிலைக்கு இந்த தேர்தலில் தள்ளப்பட்டுள்ளது.

    ஏனென்றால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு பெருகி வருவது தான் அதற்கு காரணம். 2014 தேர்தலின் போது பாரதிய ஜனதாவுக்கு 10 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

    அந்த வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் அதிகரித்தது. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 13 சதவீத வாக்குகளும், அதன் தலைமையிலான கூட்டணிக்கு 16 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிக சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போது அதன் செல்வாக்கு கேரளாவில் மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.அதனை வைத்து கேரளாவில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி அங்கு கால்பதித்துவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல் பட்டது. அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா களமிறக்கி இருக்கிறது.

    இதன் காரணமாக தற்போதைய தேர்தலில் கேரளாவில் சில தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் கேரள மக்களவை தேர்தலில் களம் காணுகின்றன.

    மாநிலத்தில் தங்களின் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கை அதிகரித்து மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் வகையில் ஆனி ராஜா உள்ளிட்ட வேட்பாளர்களை கம்யூனிஸ்டு கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    மேலும் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தன. சில மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது.

    தேசிய அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேரள உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வந்தபிறகே அந்த கேள்விக்கான பதில் தெரியவரும்.

    • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வெளியாகி உள்ளன.

    கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

    • வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • சின்னங்களை பதிவேற்றிய பிறகு அந்த யூனிட்டை சீல் வைக்க வேண்டும் என உத்தரவு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த எந்திரங்களில் பொத்தானை அமுக்கி வாக்களித்ததும் அந்த வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காக விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டுகளை உறுதி செய்யும் எந்திரம் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் முதல் பயன்படுத்தப்படுகிறது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றப்படுவதாக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதே இதற்கு காரணமாகும்.

    குறிப்பாக எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு அளிக்கும் வகையில் மின்னணு எந்திரங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியமான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பான வழக்கில் முதலில் ஒரு சட்டசபை தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கில் ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

    அதன் பேரில் தற்போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாடிகளின் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

    இந்த நிலையில் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். விவிபாட் எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டு அறிந்தனர்.

    அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "விவிபாட் எந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் சிஸ்டம் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் ஒரு முறை செயல்படுத்தக்கூடியவை. அவற்றை மாற்றி அமைக்க முடியாது. இந்திய மின்னணு கழக நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவை இவற்றை தயாரித்து கொடுக்கின்றன" என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வசதியாக விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு முதலில் உத்தரவிட்டது. பின்னர் மற்றொரு தீர்ப்பில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்யும் நடைமுறையை 5 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உத்தரவிட்டது. இவை அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திர நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளாகும்.

    ஆனால், நீங்கள் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது.

    இந்த எந்திரங்களின் செயல்பாடுகளில் சில சந்தேகங்கள் இருந்ததாலேயே, அது குறித்து தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் திறன் குறித்து 2-வது முறையாக தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க முடியாது.

    தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அதற்கான தனி தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சி கிடையாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை இன்று வழங்கினார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இருப்பதாக கூறிய நீதிபதிகள் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணையும், ஆலோசனையும் நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கட்சியின் சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கும் நடைமுறை தொடர வேண்டும்.

    வாக்காளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க விவிபாட் ஒப்புகை சீட்டுகளை கூடுதலாக எண்ணுவதற்கான முடிவை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

    வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி வேட்பாளர்கள் யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்.

    மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியை ஆய்வு செய்யலாம்.

    எந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் ஸ்டிராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும்.

    மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியில் பயன்படுத்தும் சிப், பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்.

    மின்னணு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பகத்தன்மை உள்ளது. எனவே விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    • சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் ராமுலம்மா தரிசனத்திற்காக வந்தார்.
    • சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).

    இவர் நேற்று சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் தரிசனத்திற்காக வந்தார். தரிசனம் முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார். சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலை பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

    அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற போலீஸ்காரர் மூதாட்டியின் பரிதாப நிலையை கண்டார்.

    இதையடுத்து மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார். போலீஸ்காரர் மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    போலீஸ்காரரின் மனிதாபிமானத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    ×