search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசனம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
    • கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.

    குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. 

    • குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

    அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

    மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    • கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
    • ரூ.3.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    இந்நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 70,158 பேர் தரிசனம் செய்தனர்.24,801 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர்.
    • பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    மகரவிளக்கு பூஜை நடந்த கடந்த 15-ந்தேதி மாலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. சன்னிதானம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் பொன்னம் பலமேட்டில் தெரியும் மகரஜோதி கையாலேயே ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இந்த முறை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை குறித்த காவல்துறையின் கணிப்பு சரிதான்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பலர் பதிவு செய்யாமல் வருகின்றனர். மாலை அணிந்து வருபவர்களை தடுக்க முடியாது. வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றவர்களைப்போன்று பதினெட்டாம்படியில் வேகமாக ஏற முடியாது.

    நெரிசல் ஏற்படும் போது போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பது இயல்பான ஒன்று தான். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் கூறுவதை தேவசம்போர்டு ஏற்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது சரியல்ல. சபரிமலைக்கு எதிரான பொய் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது.

    அதேபோல் தேவசம் போர்டு பணத்தை அரசு எடுக்கிறது என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது. தேவசம்போர்டு வருமானம் கோவில்களின் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது. பழங்குடியின தலைவர்களால் மகரஜோதி ஏற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.

    தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
    • படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.


    இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது. 

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் மற்றும் முதியோருடன் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.

    மேலும் குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதியில் நேற்று 76,058 பேர் தரிசனம் செய்தனர். 22, 543 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×