search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"

    • மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    • வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி முடிவடைந்தது.

    மொத்தம் 290 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவற்றில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 10 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருவனந்தபுரம் தொகுதியில் 12 பேர், அட்டிங்கல் தொகுதியில் 7பேர், கொல்லம் தொகுதியில் 12 பேர், பத்தினம்திட்டா தொகுதியில் 8 பேர், மாவேலிக்கரை தொகுதி யில் 9 பேர், ஆலப்புழா தொகுதியில் 11 பேர், கோட்டயம் தொகுதியில் 14 பேர், இடுக்கி தொகுதியில் 7 பேர், எர்ணாகுளம் தொகுதியில் 10 பேர், திருச்சூர் தொகுதியில் 9பேர், சாலக்குடி தொகுதி யில் 11பேர், ஆலத்தூர் தொகுதியில் 5 பேர், பாலக்காடு தொகுதியில் 11 பேர், பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதியில் 8பேர், கோழிக்கோடு தொகுதியில் 13 பேர், வயநாடு தொகுதியில் 9பேர், வடகரா தொகுதியில் 10 பேர், கண்ணூர் தொகுதியில் 12 பேர், காசர்கோடு தொகுதியில் 9 பேர் என 20 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர்களில் 25 பேர் பெண்கள், 169 பேர் ஆண்கள் ஆவர். வடகரா தொகுதியில் 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, கோட்டயம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடவில்லை.

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசியலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா 16 தொகுதிகளிலும், பி.டி.ஜே.எஸ். 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.


    அனைத்து தொகுதிகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால் கேரளாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரச்சாரத்தில் குதித்தனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து கேரள மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்கள் மற்றும் பிற மாநில தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களின் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. இந்த நிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதி கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், ஓட்டுப் பதிவு வருகிற 26-ந்தேதி நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்காக 25 ஆயிரத்து 177 வாக்குச்சாவடிகளும், 181 கூடுதல் வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    வாக்காளர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 045பேரும், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் 5 லட்சத்து 34 ஆயிரத்து 394 பேரும் உள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் 89 ஆயிரத்து 839 பேர்.

    கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
    • தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை வெளியிட்டது.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்கு பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மறுநாள் வாக்கு சதவீதத்தை வெளியிட்ட தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.94 சதவீதம் பதிவானதாக அறிவித்தது. இது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது.

    வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிவாக குறைந்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 3-வது முறையாக இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை நேற்று வெளியிட்டது.

    அதில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் மாறி மாறி வாக்குப் பதிவு சதவீதத்தை தெரிவித்து வந்ததால் ஏன் இந்த குளறுபடி என்று மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.


    இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    செல்போன், செயலி வருவதற்கு முன்பு வாக்குச் சாவடி வாரியாக 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவாகும் வாக்கு விவரம் மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த வாக்குச்சாவடி அலுவலர்களும் மண்டல அளவில் உள்ள அதிகாரிகளும் சரியான புள்ளி விவரங்களை மேலிடத்துக்கு தெரிவிக்காமல் குத்து மதிப்பாக வாக்கு சதவீதத்தை பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    இதனால் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடைசியாக அனுப்பிய செய்தி குறிப்பில், அனைத்து தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு விவரம் பெற முடியாத நிலையில், மாதிரி விவரம் தோராயமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக கூறி இருந்தார்.


    இதுபற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சதவீத மாறுபாடு என்பது வழக்கமாக நடக்க கூடியதுதான். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெரிய அளவில் நாடு முழுவதும் இதே போல் வாக்கு சதவீத வித்தியாசம் ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் அதே போல் இப்போதும் குளறு படி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதீத ஆர்வம் தான். ஒவ்வொரு மணிக்கும் எத்தனை ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கேட்பதால் வரும் பிரச்சனை. ஏனென்றால் ஒவ்வொரு பூத்திலும் உள்ள அலுவலர்கள் அங்கு உள்ள பணியை டென்ஷனுக்கு மத்தியில் பார்க்கும் போது மேலிடத்துக்கு தகவல் சொல்லும்போது பதற்றத்தில் தவறுதலாக புள்ளி விவரங்கள் சொல்வது உண்டு. எனவே இந்த முறையை முதலில் ஒழிக்க வேண்டும்.

    அதற்கு பதிலாக மதியம் 12 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஓட்டுப்பதிவு விவரங்களை சேகரித்தாலே போதுமானது. தேவையில்லாத டென்ஷன் குறையும்.


    வாக்காளர் பட்டியலில் இருந்து நிறைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வரும் குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கிறது. இதை தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும்.

    அதற்கு ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் கார்டையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆனால் இதை செய்ய முற்பட்ட போது தேர்தல் ஆணையத்துக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டது. அதனால் இதை கட்டாய மாக்காமல் விட்டு விட்டனர். இதனாலேயே பாதி பிரச்சனை நடக்கிறது.

    வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் நீக்கப்பட்டால் அந்த விவரங்களை அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும்.

    ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் என்றெல்லாம் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகிறது என்றால் அது அவர்களின் தவறு என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அதுவும் 6 மாதத்துக்கு முன்பே கொடுக்கிறார்கள்.

    அதை அரசியல் கட்சிகள் சரிபார்க்காமல் இருந்து விட்டு இப்போது குற்றம் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும்.
    • எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது தற்போது விவாதமாகி வருகிறது.

    என்ன காரணத்தால் மக்கள் ஓட்டு போட வரவில்லை? வெயில் அதிகமாக இருந்ததால் ஓட்டு போட வரவில்லையா? அல்லது யார் ஜெயித்தால் நமக்கென்ன என்ற அலட்சியமா? அல்லது தேர்தல் கமிஷன் பூத் சிலிப் நிறைய வீடுகளுக்கு கொடுக்காதது ஒரு காரணமா? என பல்வேறு காரணங்களை முன் வைத்து மக்கள் பேச தொடங்கி விட்டனர்.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும். எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    இது பற்றி முக்கிய அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:- தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு அப்படியே வந்து விடும். தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பது எங்களது கணிப்பு.

    வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் வந்திருந்தால் வெற்றி வாய்ப்புக்கான லீடிங் அதிகமாக இருக்கும். இப்போது பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் 'லீடிங்' கொஞ்சம் குறைவாக அமையும். மொத்தத்தில் வெற்றி எங்களுக்குத்தான்.

    அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:-

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க.-பாரதிய ஜனதா ஆகிய கூட்டணிகளுக்கிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேதான் கடும் போட்டி உள்ளது. காரணம் இந்த இரு கட்சிகளுக்கு மட்டும்தான் ஒவ்வொரு தெருவிலும் கட்சிக்காரர்கள் உண்டு. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்கள் கிடையாது.

    கிராம அளவில் கிளை கழகம் முதற்கொண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வில் ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அந்த அளவு தொண்டர்கள் கிடையாது.

    வாக்குப்பதிவு சதவீதம் இப்போது குறைந்துள்ள நிலையில் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறாது.

    நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஓட்டு வாங்குவதால் அதை போட்டியாக கருதவில்லை. அந்த கட்சிக்கு கிடைக்கும் வாக்கு விழலுக்கு இறைத்த நீர் போன்ற கதைதான். அவர்கள் எதுக்கு போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே சீமானை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    வாக்குப்பதிவு சதவீதம் பல தொகுதிகளில் குறைந்திருந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டிருப்பார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. அணியின் வாக்கு வங்கி குறையுமா? என்று தெரியவில்லை. எங்கள் அணியில் அரசியல் ரீதியாக ஊசலாட்டத்தில் யாரும் இல்லை. எனவே ஒரு தெளிவான கொள்கையோடு, தெளிவான சிந்தனையில் இருப்பதால் எங்கள் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பில்லை.

    பி.ஜே.பி. அ.தி.மு.க.வுக்குதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. ஆர்வம் இல்லை. அவர்களிடம் திட்டமிட்ட தேர்தல் வியூகம் இல்லை. அதனால் பாதிப்பு என்று பார்த்தால் பி.ஜே.பி., அ.தி.மு.க.வுக்குதான்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    வாக்குப்பதிவு குறைந்திருந்தாலும் எங்கள் அணியை பொறுத்தமட்டில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்தான் வெற்றி பெறும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளதால் எதிர்காலத்தில் அதை சரி செய்வதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

    சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் வடசென்னையில் 60.13 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு 64.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 4 சதவீதம் அளவுக்கு அங்கு வாக்குகள் குறைந்துள்ளன. தென் சென்னையில் 54.27 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    இதில் தென் சென்னையில் 3 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 5 சதவீத ஓட்டுகளும் கடந்த தேர்தலைவிட குறைவாக பதிவாகியுள்ளன. திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் 68.31 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

    கடந்த தேர்தலில் இங்கு 72.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 71.55 சதவீத ஓட்டுகளும் ஸ்ரீபெரும்புதூரில் 60.21 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 4 சதவீதம் அளவுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சதவீத வாக்குகளும் குறைந்துள்ளன.

    அரக்கோணத்தில் கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் அளவுக்கு குறைந்து 74.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் 71.31 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும்.

    தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 82.33 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அளவுக்கு குறைவாகவே அங்கு வாக்கு பதிவாகி உள்ளது.

    திருவண்ணாமலை தொகுதியில் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 73.88 சதவீதமும், ஆரணியில் 3 சதவீத வாக்குகள் குறைந்து 75.65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகளும், ஈரோட்டில் 70.45 சதவீத வாக்குகளும், திருப்பூரில் 70.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.

    இந்த 3 தொகுதிகளிலும் 3 சதவீதம் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன. நீலகிரி தொகுதியில் கடந்த தேர்தலில் 73.99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.

    இது 5 சதவீதம் குறைவாகும். கரூர் தொகுதியில் ஒரு சதவீதம் குறைந்து 78.61-ஆக பதிவாகியுள்ளது. திருச்சியில் 2 சதவீத வாக்குகள் குறைந்து 67.45 ஆகவும், பெரம்பலூரில் 77.37 ஆகவும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடலூரில் 76.48 ஆக இருந்த வாக்கு சதவீதம் 4 சதவீதம் குறைந்து 72.28 ஆக பதிவாகி இருக்கிறது.

    சிதம்பரம், மயிலாடுதுறையில் தொகுதிகளில் 2 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. சிதம்பரத்தில் 75.32 சதவீதமும் மயிலாடுதுறையில் 70.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.

    நாகப்பட்டினத்தில் கடந்த தேர்தலில் 76.88 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதம் குறைந்து 71.55 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சையில் 2 சதவீதம் குறைந்து 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் 69.87 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அது 5 சதவீதம் குறைந்து 63.94 ஆக பதிவாகி உள்ளது.

    மதுரை தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. கடந்த தேர்தலில் 66.02 சதவீதமாக இருந்த வாக்குகள் தற்போது 61.92 சதவீதம் குறைந்துள்ளது. தேனி தொகுதியிலும் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 69.87 சதவீதம் பதிவாகியுள்ளன.

    விருதுநகர் தொகுதியில் 2சதவீத வாக்குகள் குறைந்து 70.17 சதவீதமாக பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 68.35 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 68.18 சதவீதம் ஓட்டு போட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் 69.43 ஆக இருந்த வாக்கு சதவீதம் 66.88 ஆக குறைந்துள்ளது. தென்காசியில் 71.37 ஆக இருந்த வாக்கு சதவீதம் 67.55 ஆகவும், நெல்லையில் 67.21 சதவீதமாக இருந்த வாக்குகள் 64.10 ஆகவும் குறைந்து உள்ளன. கன்னியாகுமரியில் 69.83 சதவீதமாக இருந்த வாக்குகள் 65.46 சதவீதமாக குறைந்துள்ளன.

    தமிழகத்தில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைவிட தற்போதைய தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் 73.74 சதவீத வாக்குகளும் 2019-ம் ஆண்டு 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 69.46 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைவுக்கு கொளுத்தும் வெயில், தொடர் விடுமுறை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

    மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போடாமல் தவிர்த்திருப்பது அரசியல் கட்சிகள் மீதான கோபத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் முடிவின் போது எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. மக்களின் இந்த தேர்தல் வெறுப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    குறைவான வாக்குப்பதிவுகளில் மத்திய சென்னை, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் 5 தொகுதிகளின் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்தும் காணப்படுகிறது. வேலூர் தொகுதியில் 71.32 சதவீதமாக இருந்த வாக்குகள் 73.42 ஆக உயர்ந்துள்ளது.

    விழுப்புரத்தில் 74.56 ஆக இருந்த வாக்கு சதவீதம் 76.47 ஆகவும், கள்ளக்குறிச் சியில் 78.77 சதவீதமாக இருந்தது 79.25 ஆகவும், சேலத்தில் 77.86 ஆக இருந்த சதவீதம் 78.13 ஆகவும் கோவையில் 63.86 ஆக இருந்த வாக்கு சதவீதம் 64.81 ஆகவும் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.
    • ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 184 பேர் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் நீண்ட வரிசையில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    காலை 11 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டது. இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.

    இது கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட 2.52 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 73.11 சதவீதம் வாக்கு பதிவானது. 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்களில் இந்த தேர்தலில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    4 லட்சத்து 52 ஆயிரத்து 491 பேர் வாக்களிக்கவில்லை. ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.

    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 152 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 30ஆயிரத்து 307 பெண் வாக்காளர்களும், 222 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 596 ஆண் வாக்காளர்களும், 6லட்சத்து 40ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும், 105 திருநங்கைகளும் என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 481 பேர் வாக்காளித்து உள்ளனர். சேலம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 7லட்சத்து 83ஆயிரத்து 17 ஆண் வாக்காளர்களும், 7லட்சத்து 44ஆயிரத்து 87 பெண் வாக்காளர்களும், 158 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 52ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 5 லட்சத்து 53ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், 5லட்சத்து 81ஆயிரத்து 525 பெண் வாக்காளர்களும், 53 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 35ஆயிரத்து 246 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. தருமபுரி- 81.48

    2. நாமக்கல்- 78.16

    3. கள்ளக்குறிச்சி- 79.25

    4. ஆரணி- 75.65

    5. கரூர் - 78.61

    6. பெரம்பலூர்- 77.37

    7. சேலம்- 78.13

    8. சிதம்பரம்- 75.32

    9. விழுப்புரம்- 76.47

    10. ஈரோடு- 70.54

    11. அரக்கோணம்- 74.08

    12. திருவண்ணாமலை- 73.88

    13. விருதுநகர்- 70.17

    14. திண்டுக்கல்- 70.99

    15. கிருஷ்ணகிரி- 71.31

    16. வேலூர்- 73.42

    17. பொள்ளாச்சி- 70.70

    18. நாகப்பட்டினம்- 71.55

    19. தேனி- 69.87

    20. நீலகிரி- 70.93

    21. கடலூர்- 72.28

    22. தஞ்சாவூர்- 68.18

    23. மயிலாடுதுறை- 70.06

    24. சிவகங்கை- 63.94

    25. தென்காசி- 67.55

    26. ராமநாதபுரம்- 68.18

    27. கன்னியாகுமரி- 65.46

    28. திருப்பூர்- 70.58

    29. திருச்சி- 67.45

    30. தூத்துக்குடி- 59.96

    31. கோவை- 64.81

    32. காஞ்சிபுரம்- 71.55

    33. திருவள்ளூர்- 68.31

    34. திருநெல்வேலி- 64.10

    35. மதுரை- 61.92

    36. ஸ்ரீபெரும்புதூர்- 60.21

    37. சென்னை வடக்கு- 60.13

    38. சென்னை தெற்கு- 54.27

    39. சென்னை மத்தி- 53.91

    • சிக்கிமில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
    • சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதி நடக்கிறது.

    காங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இம்மாநிலத்தில் 4.65 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சிக்கிமில் இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், சிக்கிமில் 67.95 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதியும், பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.

    • கள்ளக்குறிச்சியில் 75.64 சதவீதம், தருமபுரியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
    • பொள்ளாச்சியில் 72.22 சதவீதம், நாகப்பட்டினத்தில் 72.21 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    சென்னை:

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

    காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஆரணி- 73.77

    கரூர் - 74.05

    பெரம்பலூர்- 74.46

    சேலம்- 74.55

    சிதம்பரம்- 74.87

    விழுப்புரம்- 73.49

    ஈரோடு- 71.42

    அரக்கோணம்- 73.92

    திருவண்ணாமலை- 73.35

    விருதுநகர்- 72.99

    திண்டுக்கல்- 71.37

    கிருஷ்ணகிரி- 72.96

    வேலூர்- 73.04

    பொள்ளாச்சி- 72.22

    நாகப்பட்டினம்- 72.21

    தேனி- 71.74

    நீலகிரி- 71.07

    கடலூர்- 72.40

    தஞ்சாவூர்- 69.82

    மயிலாடுதுறை- 71.45

    சிவகங்கை- 71.05

    தென்காசி- 71.06

    ராமநாதபுரம்- 71.05

    கன்னியாகுமரி- 70.15

    திருப்பூர்- 72.02

    திருச்சி- 71.20

    தூத்துக்குடி- 70.93

    கோவை- 71.17

    காஞ்சிபுரம்- 72.99

    திருவள்ளூர்- 71.87

    திருநெல்வேலி- 70.46

    மதுரை- 68.98

    ஸ்ரீபெரும்புதூர்- 69.79

    சென்னை வடக்கு- 69.26

    சென்னை தெற்கு- 67.82

    சென்னை மத்தி- 67.35

    • தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இந்த நிலையில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக அ.தி.மு.க. சார்பில் புகார் எழுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் அ.தி.மு.க.வினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    கள்ள ஓட்டு போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வரை சீல் வைக்கப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழகத்தின் 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    • மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, வாக்குப்பதிவி இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    • 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவு.

    புதுடெல்லி:

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், மாலை 5 மணிக்கு 59.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

    உத்தரகாண்டில் 53.56 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 57.54 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 63.25 சதவீதமும், மகாராஷ்டிராவில் 54.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    ×