search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protest"

    • இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்திலும் இந்த போராட்டத்தை நடத்த காங்கிரசார் முடிவு செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

    அப்போது போலீசார் 24 மணி நேரத்துக்கு முன்பே போராட்டத்துக்கு அனுமதி கேட்க வேண்டும். அதனால் நாளை நீங்கள் போராட்டம் நடத்தினால் தடையை மீறித்தான் நடத்த வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர்.

    இதையடுத்து காங்கிரசார் அப்படி ஒன்றும் அவசரம் இல்லை என்கிற எண்ணத்தில் நாளைக்கு போராட்டத்தை நடத்திக் கொள்கிறோம் என்று நழுவிச் சென்றுள்ளனர். முறையான அனுமதி கிடைத்த பிறகு பேராட்டம் நடத்திக் கொள்கிறோம் என்று கூறியுள்ள காங்கிரசார் நாளை போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள்.

    • வருமான வரித்துறை சார்பில் ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

    புதுடெல்லி:

    வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த நோட்டீஸ் வரி தீவிரவாதம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியை முடக்க சதி நடக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வருமான வரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.
    • தமிழக அரசே நாங்கள் அடிமைகள் அல்ல என வாசகப் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வசித்து வரும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும்.

    போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் இந்நிலையில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுமார் நான்கு,ஐந்து கிலோமீட்டர் கடந்து அருகில் உள்ள செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் மேலும் முதியோர்கள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் 4,5 கிலோ மீட்டர் நடந்து சென்று வாக்களிக்க சிரமமாக உள்ளது எனவும் நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தங்கள் கிராமத்திற்கு இம்முறை வாக்குச்சாவடி மையம் அமைக்காவிட்டால் தங்கள் ஒட்டுமொத்த கிராமமே அதாவது 700 வாக்காளர்கள் கொண்ட அனைவருமே வாக்களிக்க போவதில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி சுமார் நான்கு நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.


    மேலும் தமிழக அரசே நாங்கள் உங்கள் அடிமைகள் அல்ல உள்ளிட்ட பல்வேறு வாசகப் பதாகைகளை எழுதிவைத்து கிராமமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    எங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர்.
    • அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடுவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பழையவூர் கிராமம். இப்பகுதியில், 150 குடும்பங்களை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், ஒண்டியூர் சாலை முதல், பழையவூர் வரை தார்சாலை அமைக்க கடந்த, 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த, 2015-ம் ஆண்டு ஒன்றரை கிலோ மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கி சாலைகள் போடப்பட்டது. அப்போது, 200 மீட்டர் தூரத்திற்கு சாலை போடவிடாமல் அப்பகுதியில் சிலர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக போலீசிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய அந்த பகுதி மக்கள் தேர்த லை புறக்கணிக்க போவதாக நேற்று தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதி பூஸ்தி ரோட்டில், தார்சாலை அமைக்க அரசு அதிகாரிகள் நட்ட கல்லை, ஆக்கி ரமிப்பாளர்கள் பிடுங்கிவிட்டனர். எங்கள் ஊருக்கு செல்லும் ஒரே பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். பால்வண்டி, பஸ் வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுக்கின்றனர்.

    இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள, 500 வாக்காளர்களும் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைக்குரிய இடத்தில் தார்சாலை அமைத்து கொடுத்தால் ஓட்டு போடு வோம். இல்லாவிட்டால் தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை அவர்களின் சொந்த வாகனங்களில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேப்போல் உழவர் சந்தைக்கு வெளியே வியாபாரிகளும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயிகளின் வாகனங்களை வெளியில் நிறுத்தக்கூடாது தங்களுக்கு வியாபாரம் செய்ய சிரமமாக இருப்பதாக கூறி வெளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் உழவர் சந்தை விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சந்தைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும், வெளியில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். 

    • அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
    • நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

    குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.

    அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.

    இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.

    மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
    • தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் வெறுப்புப் பேச்சு பேசியதற்காக பா.ஜ.க. எம்.பி. கைது செய்யப்பட்டார்.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மத்திய பகுதியான அல்சூர் கேட் காவல் நிலைய எல்லையிலுள்ளது சித்தண்ணா லே அவுட். இங்கு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கடையில் கடந்த 17-ம் தேதி மாலை அனுமன் பாடல்கள் சத்தமாக ஒலிக்கப்பட்டதாகவும், அங்கு வந்த சில இளைஞர்கள் இந்தப் பாடல் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது கடை உரிமையாளரை இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நடவடிக்கைக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.யான தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், பெங்களூருவில் தேஜஸ்வி சூர்யா மற்றும் ஷோபா கரந்தலாஜே போன்ற பா.ஜ.க. தலைவர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக அவர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

    இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.

    நெல்லை:

    தேர்தல் பத்திரம் மூலம் மத்திய அரசு மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதனை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாமல் பாரத ஸ்டேட் வங்கி காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை பாளை பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுச்செயலாளர் மகேந்திரன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், வட்டார துணை தலைவர் பாண்டிய ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.

    அப்போது அங்கே பாதுகாப்பு பணிக்கு நின்ற பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    ×