search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க விடாமல் தடுத்த பொதுமக்கள்
    X

    தேர்தல் புறக்கணிப்பு செய்த கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க விடாமல் தடுத்த பொதுமக்கள்

    • அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
    • நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

    குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.

    அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.

    இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.

    மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×