search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்வளத்துறை"

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
    • மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்ககடல் பகுதி மற்றும் அதளை ஒட்டிய இலங்கை கடற்பகுதி, தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலாமீட்டர் வேகம் வரை வீசுவதுடன் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது, எனவே மீன்வள துறையின் மூலம் மறு அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசை படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் மாவட்டத்தில் பெரிய தாழை முதல் வேம்பார் வரை மீன்பிடிக்க மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 467 விசைப்படகு மற்றும் 3,788 நாட்டுபடகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.
    • பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. இந்த புயலானது வருகிற 5-ந் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்ப ட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது.இதன் காரணமாக மீனவ ர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தொடர்ந்து புயல் கரையை கடக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் . கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடலூர் தாழ ங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு உட்பட மாவட்டத்தின் கரையோரங்களில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்க ளில் கரையோரங்க ளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், வலைகள் கட்டு மரங்கள் உள்ளி ட்டவைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்துகடலூர் தாழங்குடா மீனவர் கிராமத்தில் படகுகளை டிராக்டர் மூலம் கட்டி மேடான பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினார்கள். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
    • வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அது புயலாக மாறி 4-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக நாளை மறுநாள் 3-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    4-ந் தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனையெட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு 30-ந்தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    அந்தந்த கிராம மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.

    இதுமட்டுமில்லாமல், மீன்வளத்துறையிலிருந்து புதுவை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களின் செல்போன் எண்ணிற்கும் இந்த வானிலை எச்சரிக்கை தனித்தனியாகவும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    எனவே புதுவை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.
    • வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    கடந்த 17-ந் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்கலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சங்கரா 300 ரூபாய்க்கும், பாறை 200 ரூபாய்க்கும் , ஷீலா 250 ரூபாய்க்கும் , கானாங்கத்த 200 ரூபாய்க்கும் , வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து மீன்கள் வாங்கியதை காண முடிந்தது. 

    • படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் ஆண்டுக்கு 70 லட்சம் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு அணையில் வளர்க்கப்படுகிறது. மீன் குஞ்சுகள் பெரிதானவுடன் உரிமம் பெற்ற 2016 மீனவர்களை கொண்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அணையில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கவும், மீன்பிடி உரிமம் இல்லாத பரிசல்களை பறிமுதல் செய்தல், நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மீன்வளத் துறையினருக்கு ரோந்து செல்ல விசைப்படகு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கீரை காரனூர் காவிரி ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்ட மீன்வளத்துறைக்கு சொந்தமான விசைப்படகு நள்ளிரவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் படகு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் விசைப்படகிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மத்திய மந்திரி புருஷோத்தம்ரூபாலா தகவல்
    • பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த பணிகள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகி யோர் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வ ரம் விவேகா னந்தா கல்லூரி யில் நடந்த மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து மத்திய மீன்வளத்துறை மந்திரி புருஷோத்தம்ரூபாலா பேசியதாவது:-

    நமது நாட்டில் முதன் முதலாக சாகர் பரிக்கிரமா திட்டத்தின் மூலம் குஜராத் முதல் கன்னியாகுமரி வரை யில் உள்ள கடலோர மீனவ கிராம மக்களை சந்தித்து வருகிறேன். பல இடங்களில் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு இங்கு வந்துள்ளேன். பொதுவாக இந்தியா என்று கூறினால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள். இப்படி பாரத தாயின் கால் பாதம் எனப்படும் கன்னியாகுமரி யில் நான் பேசுவதை பெருமைப்படுகிறேன். நம் நாட்டில் 8 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக நீளத்தில் கடற்கரை அமைந்துள்ளது.

    மீனவர்களின் வாழ்க்கை கடலை நம்பித்தான் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைச்சரகத்தை பிரதமர் ஏற்படுத்தி உள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப் பட்டுள்ளது. அதில் 200 பேர் கடன் பெற்று பயன டைந்துள்ளனர். கடன் அட்டை மூலம் பெரும்பா லும் பெண்கள் பலன் பெற் றுள்ளனர். பிரதமர் மோடி மீனவ மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். சுதந்திரம் பெற்று 2014-ம் ஆண்டு வரை மீனவர்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பது ரூ.3ஆயிரத்து 680 கோடி தான். தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டப்பணி களுக்கு மீன்வளத்துறையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை மூலம் நான் தமிழக மக்களின் கருத்துக் களை கேட்ட பிறகு ஒரு விஷயம் தெரியவந்தது.

    கடலில் 1000 கிலோ மீட்டர் தாண்டி சென்று மீன வர்கள் மீன் பிடித்துவருவது எனக்கு ஆச்சர்யமாக உள் ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மீன்வ ளத்துறை அதிகாரிகள், மத்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகள், மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

    • 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

    ராமேசுவரம்:

    மீன்களை இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் வரை தமிழக கடற்பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 15-ந் தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் அன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று காலையே மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது.

    ஆனால் அதனை மீறி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் அதனை மீறி முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகும்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது ஒரு மாத காலம் நிறுத்தப்படும். மேலும் மானிய டீசலும் ரத்து செய்யப்படும். ராமேசுவரம் மீனவர்களின் விதிமீறல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்தார்.
    • அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல்வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இது மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த நாட்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப் படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடை பொருந்தாது. இதனால் அவர்கள் வழக்கம்போல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    கடந்த 60 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவோடு நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடியில் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகினர்.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூன் 14 முதல் (நேற்று முன்தினம்) 18-ந் தேதி வரை மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் சுழல் காற்றானது 45 முதல் 55 கி.மீ வேகத்துடன் வீசக்கூடிய காற்று 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டது. 61 நாட்களாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மீனவர்கள் நேற்று மிகுந்த எதிர்பார்ப்புடன் மீண்டும் மீன்பிடிக்க புறப்பட இருந்த நிலையில் இந்த அறிவிப்பால் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர். இந்த காலங்களில் நாட்டுப்படகு என்ற பெயரில் விசைபடகுகளில் சிலர் மீன்பிடிக்க சென்றதாக மீனவர்கள் புகார் கூறினர்.

    இந்நிலையில் ராமநாத புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தூத்துக்குடி மீனவர்களுக்கு கிடைத்ததை தொடர்ந்து இன்று அதிகாலை வானிலை மாற்றம் எச்சரிக்கை அறிவிப்பு தடையை மீறி 247 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    • தியாகதுருகம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் சித்தலூர், பானையங்கால் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலரும் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர்.  ஒரு சில கும்பல்கள் மட்டும் அந்த ஏரி வழியாக வயல்வெளி பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பிகளில் திருட்டுத்தனமாக கொக்கியின் மூலம் மின்சாரம் எடுத்து அதன் மற்றொரு முனையை சுமார் 20 அடி நீளம் உள்ள குச்சியின் நுனி பகுதியில் சல்லடை போன்ற இரும்பு தகடுகளில் பொருத்துகின்றனர். தொடர்ந்து மின் கம்பிகளில் இருந்து கேபிள் வழியாக செல்லும் மின்சாரம் அந்த குச்சியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுக்கு வருகிறது. அப்போது நீண்ட குச்சியின் மறுமுனையை அந்த நபர்கள் பிடித்துக் கொண்டு ஏரியில் உள்ள நீரில் அலசுகின்றனர். அப்போது சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கிறது. இவ்வாறு ஆபத்தான முறையில் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்களை பிடித்து வருவதாக கடந்த 10- ந்தேதி மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது.

    இதனையொட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவின் படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மீன் வள ஆய்வாளர் சந்திரமணி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் உயிர் சேதம் ஏற்படும். எனவே அவ்வாறு மீன் பிடிக்கக் கூடாது .மீறி மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின் ஒயர்களில் திருட்டுத்தனமாக மின் இணைப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மின்சாரத் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை, பானையங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×