search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alert"

    • அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
    • வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    தேர்தல் நடைமுறை, அமலாக்கத்திற்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாகவே இன்றளவும் இருக்கின்றது. பறக்கும் படை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள், மருத்துவ செலவினங்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு எடுத்துக் செல்லப்படும் பணம் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

    உண்மையாகவே தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

    முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரியவருகின்றது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால், தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ந் தேதி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவிப்பதாக மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாகன சோதனையை அதிகப்படுத்த கூடுதல் இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 27, 28-ந்தேதிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் அதிகாரிகள் சென்னை வந்தனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்பட்டு இருக்கும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் விவாதித்தனர். அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைத்து கருத்து கேட்டனர்.

    இந்த ஆய்வு கூட்டத்தின் போது தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டில் முந்தைய தேர்தல்களில் இலவசப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகார்கள் குறித்தும் பேசினார்.

    இந்த தடவை தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டாலோ அல்லது பணப்பட்டுவாடா செய்யப்பட்டாலோ அந்த பகுதிக்குரிய தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    பணப்பட்டுவாடா செய்யப்படுவது வீடியோ ஆதாரம் மூலம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த தொகுதியை கண்காணிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

    நடவடிக்கைகளில் இருந்து தப்ப வேண்டுமானால் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடுத்து நிறுத்துங்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டார். பணப்பட்டு வாடாவை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படைகளை திறமையுடன் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    ஏதாவது தேர்தல் அதிகாரி மீதோ, போலீஸ் அதிகாரி மீதோ திருப்தி ஏற்படாவிட்டால் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி ராஜீவ் குமார் எச்சரித்தார். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் இலவசப் பொருட்கள் வினியோகம் மற்றும் பணப்பட்டுவாடாவை எப்படி தடுப்பது என்பது குறித்து தமிழக போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் வாகன சோதனையை அதிகப்படுத்த கூடுதல் இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவிப்பையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது காலை 10 மணி வரை நீடிக்கும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இராமநாதபுரத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்று அறிவிப்பையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
    • கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மிச்சாங் புயலாக உருவானது.

    சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிச்சாங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், பொது மக்கள் யாரும் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கோ, தேவை இல்லாமல் வெளியேவோ செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக பொது மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்ணை துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    அதன்படி, அந்த குறுஞ்செய்தியில், " மிச்சாங் புயலால் கனமழையுடன் 60- 70 கி.மீ., பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

    பொது மக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். மரங்கள், மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்- தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்" என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

    • இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன.
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

    வால்பாறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறை வனப்பகுதிக்கு திரண்டு வருவது வழக்கம்.

    இங்கு அவை 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும். மேலும் கேரளாவில் இருந்து காட்டு யானைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து 3 மாதம்வரை நீடிக்கும்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறைக்கு வந்தபடி உள்ளன. அவை தற்போது கேரள மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சின்கோனா, மூடிஸ், நல்லமுடி, ஷேக்கல்முடி எஸ்டேட்டுகள் வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உள்ள 20 காட்டு யானைகள் தற்போது வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

    வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக முகாமிட்டு நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார்.
    • தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடி சோதனைகளால் தமிழகத்தில் பல பிரபலங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியில் தொடங்கி இப்போது அமைச்சர் எ.வ.வேலு வரை தொடரும் சோதனைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உஷாராக இருக்கும் படி அமைச்சர்களை எச்சரித்து உள்ளார். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் மத்திய அரசு நம்மை வேவு பார்க்கிறது. வேட்டையாட துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் இரவில் நாளை ரெய்டு வரும். நாளை மறுநாள் வரும்... என்று தனக்கு தகவல்கள் வருவதாகவும் தெரிவித்து இருந்தார். நிஜத்திலும் விசாரணை அமைப்புகளின் ரகசிய திட்டங்கள் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கசிந்து இருப்பதை இப்போது உறுதி செய்துள்ளார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்த்த பணம், ஆவணங்கள் சில இடங்களில் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் வரும் தகவல் முன்கூட்டியே கசிந்து இருப்பதால் உள்ளுக்குள்ளேயும் கண்காணிப்பு உஷார்ப டுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • கூடலூர் சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை
    • வாகனங்களில் வருவோரிடம் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை

    ஊட்டி,

    கேரளத்தில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி விட்டனர். அங்கு மேலும் 2 பேர் நோய்த்தொற்றுடன் உள்ளனர். அவர்களுக்கு கோழிக்கோடு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் கோழிக்கோடு பகுதிக்கு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கேரள மாநிலத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வாக னங்கள் மூலம் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே கேரளாவின் அண்டை மாவட்டமாக உள்ள நீலகிரியில் மருத்துவ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக கூடலூரில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளூா், நம்பியாா்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகளில் சுகாதார அதிகாரிகள் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கும் பணிகளை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் சுகாதார ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் இருந்து புறப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பாக தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அப்படி வருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.
    • வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனைச்சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள், உள்ளன.

    உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.

    மழைக்காலங்களில் வனத்திலேயே குளம், குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும் .பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.

    மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன. தற்போது ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையே சின்னாறு பகுதியில் சாலையோரம் குட்டியுடன் பெண் யானை ஒன்று உலா வருகிறது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் , குட்டியுடன் பெண் யானை நிற்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக்கூடாது. வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுமியை திடீரென சிறுத்தை இழுத்துச் சென்று கொன்றது.

    இதனையடுத்து வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கியது.

    குழந்தையை கொன்றது இந்த சிறுத்தைகள் தானா என்பது குறித்து தெரிந்துகொள்ள, சிறுத்தை ரத்த மாதிரிகள் தடவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அலிப்பிரி நடைபாதையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து வனத்துறையினர் ஆங்காங்கே 300 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நடைபாதை முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அலிப்பிரி நடைபாதையில் பொருத்தப்பட்ட 300 கண்காணிப்பு கேமராக்களில், நேற்று ஒரே நாளில் 50 கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    50 கேமராக்களில் பதிவான சிறுத்தை ஒன்று தானா? அல்லது சிறுத்தைகள் அதிகமாக உள்ளதா? என்று அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    இது குறித்து திருப்பதி வனவிலங்கு மேலாண்மை வட்டத்தின் தலைமைப் பாதுகாவலர் நாகேஸ்வரராவ் கூறியதாவது:-

    நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும்.

    கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை கண்டறிந்து, நடைபாதைகளில் இருந்து விரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறுத்தையின் தடவியல் மாதிரிகளின் அறிக்கை 15 நாட்களில் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகரை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பல வகை பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் பாம்புகள் நநுழைந்தால் உடனடியாக தீயணைப்புத்துறை, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நகரப்பகுதி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் பாம்புகள் ஏராளமாக உள்ளன. சாரை பாம்பு துவங்கி, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன.

    இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.தகவலறியும் தீயணைப்புத்துறை, வனத்துறையில் பயிற்சி பெற்ற வீரர்கள், பாம்புகளை பிடித்து செல்கின்றனர். அதேபோல் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலரும், பாம்புகளை பிடித்து, வனத்துறையினரின் ஒப்புதலுடன் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வனத்துறை ரேஞ்சர் சுரேஷ்கிருஷ்ணன் கூறியதாவது:-

    சாரை பாம்பு துவங்கி கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என விஷமுள்ள, கொடிய விஷம் நிறைந்த, விஷமில்லாத பாம்புகள் என அனைத்து வகை பாம்புகளும் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பிற இடங்களில் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது அருகேயுள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவது வழக்கம்.

    தற்போது மழைக்காலம் என்பதால், பாம்புகள் அதிக அளவில் தென்படும். பாம்புகளை மனிதர்கள் சீண்டாத வரை பாம்பு மனிதர்களை எதுவும் செய்யாது. இருப்பினும், கண்ணில் தென்படும் பாம்பு, விஷத்தன்மை உள்ளதா, விஷத்தன்மை இல்லாததா என்ற அடிப்படை புரிதலை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    உதாரணமாக கண்ணாடி விரியன் பாம்பு மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அந்த பாம்பு சீண்டினால், உடனடியாக மரணம் நிகழும் அளவுக்கு அதன் விஷம் வேகமாக உடலில் பரவும். கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.

    இதுபோல் கண்ணில் தென்படும் பாம்புகளை அடையாளம் கண்டு அவற்றின் பண்புகளை அறிந்து கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிக்கு பாம்புகள் நுழையும் போது, அதுகுறித்த தகவலை வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். விஷத்தன்மை நிறைந்த பாம்பு எனில் சற்று தொலைவில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளை சுற்றி புதர்செடிகள் அதிகம் வளரும். அங்கு பாம்புகள் தங்குவதற்கு வாய்ப்புண்டு. எனவே சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற சில இளைஞர்களும், ஆங்காகே பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு செல்லும் பாம்புகளை பிடிக்கின்றனர். அந்த தகவலை வனத்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

    ராமேசுவரம்:

    மீன்களை இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் வரை தமிழக கடற்பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை கடந்த 15-ந் தேதி நிறைவடைந்தது.

    இதையடுத்து பாம்பன் மீனவர்கள் அன்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் புயல் சின்னம் காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று காலையே மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்திருந்தது.

    ஆனால் அதனை மீறி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது:-

    ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ராமேசுவரம் மீனவர்கள் அதனை மீறி முன்கூட்டியே கடலுக்கு சென்றுள்ளனர். இது விதிகளை மீறிய செயலாகும்.

    இவ்வாறு செல்லும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்குவது ஒரு மாத காலம் நிறுத்தப்படும். மேலும் மானிய டீசலும் ரத்து செய்யப்படும். ராமேசுவரம் மீனவர்களின் விதிமீறல் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×