search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை
    X

    புதுவையில் இன்று சீற்றமாக காணப்பட்ட கடல்.

    புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

    • மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
    • வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அது புயலாக மாறி 4-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் என வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக நாளை மறுநாள் 3-ந்தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    4-ந் தேதி வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனையெட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு 30-ந்தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    அந்தந்த கிராம மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.

    இதுமட்டுமில்லாமல், மீன்வளத்துறையிலிருந்து புதுவை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களின் செல்போன் எண்ணிற்கும் இந்த வானிலை எச்சரிக்கை தனித்தனியாகவும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே மறு அறிவிப்பு வரும் வரை எவரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் வானிலை எச்சரிக்கை அறிவிப்பினை மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    எனவே புதுவை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×