search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS Hospital"

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #AIIMS
    மதுரை:

    மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை 3 ஆண்டுகள் கழித்து அறிவித்துள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

    எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

    மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்து மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.  #AIIMS
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #PMModi #EdappadiPalaniswami
    கும்பகோணம்:

    தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக காவிரி ரதயாத்திரை இன்று கும்பகோணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

    இந்த விழாவில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ரதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ராமராஜ்ய ரதயாத்திரை சென்ற போது இந்த ரதம் குறித்து வெளியே தெரியவில்லை. ஆனால் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் ரதயாத்திரை குறித்து பேசி புயலை ஏற்படுத்திய பின் தான் ராமராஜ்ய ரதயாத்திரை பிரபலமானது. அதன் பின் ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    அது போன்று தற்போது தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான காவிரி ரதயாத்திரையை பற்றி இந்து விரோத சக்திகளும், தி.மு.க., தி.க. போன்ற கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. மேலும் இவர்கள் சமூக ஆர்வலர்கள் என்று தங்களை கூறிக்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    நாங்கள் நடத்தும் இந்த புஷ்கர விழாவை எந்த சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது. நீர் நிலைகளின் புனிதத்தை எதிர்ப்பது யாராக இருந்தாலும் அவர்கள் இந்து விரோதிகள் என்று தான் அழைக்கப்படுவார்கள்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் குறித்தே தவிர இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

    திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுமா? என்று கட்சி தலைமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பே முடிவு செய்யும். அதன் பின் எங்களது பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா ஆட்சியில் தான் இந்துக்களுக்கும், இந்திய கலாச்சாரத்துக்கும் எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு ஆட்சியையும், நீதிமன்றத்தையும் கட்சி (பா.ஜனதா) வழிநடத்தவில்லை என்றார். #BJP #HRaja #PMModi #EdappadiPalaniswami
    தினகரன் கட்சியினர் தங்களை சந்திக்க தூது அனுப்பியதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #TamilisaiSoundararajan #TTVDhinakaran
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்குள் நடப்பது தர்மயுத்தமா? தர்ம சங்கட யுத்தமா? என்பது எனக்கு தெரியாது. அது அவர்களுக்குள் நடக்கும் போர்.

    இதற்கு முன் தினகரன் கட்சியினரும் எங்களை சந்திக்க தூது அனுப்பினார்கள். யார் யாரை எந்த சூழ்நிலையில் எதற்காக சந்தித்தார்கள் என்பது அந்த அந்த சூழ்நிலையை பொறுத்தது.

    துணை முதல்-அமைச்சர்- டி.டி.வி. தினகரன் சந்திப்பு எந்த சூழ்நிலையில் எதற்காக நடந்ததோ எனக்கு தெரியாது. அவர்களுக்குள் நடப்பது தர்மயுத்தமா, தர்மசங்கட யுத்தமா என்பது தெரியாது. ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொடுக்கும் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் டி.டி.வி. தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

    கடந்த கால ஆட்சிகளும் சரி, இப்போதைய ஆட்சியும் சரி கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டன. கோவில்களில் காணாமல் போன சிலைகளும், தூண்களும், எங்கெல்லாம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளன.


    கல்வி வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடி கணக்கில் பணம் புரண்டு இருக்கிறது. கவர்னர் பன்வாரிலால் வந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளார். இதுதான் முதல்படி.

    அதற்கு முன்பு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு மண் பரிசோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் டெல்லி செல்வது ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக என்றால் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #TTVDhinakaran
    மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது உறுதி என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    சென்னை :

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தொடர்பாக சில அதிகாரப்பூர்வமான விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கடந்த 1-ந் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதின் தற்போதைய நிலை என்ன? என்று மத்திய அரசிடம் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கான விளக்கம் 4-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.

    அதில், பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குனர் சஞ்சய் ராய் இந்த அதிகாரப்பூர்வ தகவலை இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார்.

    மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்து பெறப்பட்ட தகவல் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்து கொடுக்கப்பட்டு, மதுரை தோப்பூரை தேர்வு செய்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.



    அதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த மாறுதலும் இல்லை. எந்த தடையும் இல்லை. விதிமுறைப்படி அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போது விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

    மத்திய அரசின் துணை நிறுவனமான ‘ஹையிட்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு அந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மண் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.15 கோடி நிதி அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை பணிகள் முடிந்து இப்போது விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டுவிட்டது. முதற்கட்டமாக ரூ.1,264 கோடி உத்தேசமாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி நிதித்துறைக்கு அனுப்பி மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அனுப்புவார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, பணிகளில் சுணக்கமோ, தாமதமோ, தடையோ இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு சொந்தமான இடமாகும். ஒரு ஏக்கர் நிலம் கூட தனியாருக்கு சொந்தமானது கிடையாது. அதனால், நிலம் சம்பந்தமான எந்த பிரச்சினையும் இல்லை.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க விரைவில் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளிக்க வேண்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார். நானும், சுகாதாரத்துறை செயலாளரும் 9-ந் தேதி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவதில் எந்தவித சுணக்கமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். #AIIMS #AIIMSinMadurai #Vijayabaskar
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இலாகா இல்லாத முதல்-மந்திரியாக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.

    அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.

    இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.

    மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

    மாவட்டம்தோறும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி காளையார்கோவிலில் நடக்கிறது.

    செயல் வீரர்களின் கூட்டங்களில் தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் தலைவராக நான் உள்ளேன்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய தனியாக வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசிற்கு தேவையான 126 போர் விமானங்கள் வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை தற்போதைய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் 36 ரபேல் விமானங்கள் வாங்க பா.ஜனதா அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை காட்டிலும் 9 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் விமானங்களை வாங்குவதாக பா.ஜனதா அறிவித்தது. விலை குறைவு என்றால் அதனை கூறுங்கள் என்று கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள். மேலும் குறைவான விலைக்கு விமானங்கள் வாங்குவது என்றால் அதிக விமானங்களை வாங்க வேண்டியதுதானே? ஏன் குறைத்து வாங்குகிறீர்கள்?.

    ராணுவ அமைச்சகம் பற்றி அதன் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதுவும் தெரியவில்லை. பா.ஜனதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் 3 பேர் ராணுவ அமைச்சராக மாற்றப்பட்டுள்ளனர். யாரும் உருப்படியான எந்த காரியத்தையும் செய்யவில்லை. இந்த அரசு அடக்கு முறை கொள்கையை கையாண்டு வருகிறது.

    தொடர்ச்சியாக அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் சரிந்து வருவது பொருளாதார வீழச்சிக்கு வழிவகுக்கும். இதுபற்றி நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கலாம். குற்றவாளிகள் நிற்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வரவேற்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற நிலை வந்தால் தற்போதைய பா.ஜனதா அரசு அனைத்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் குற்றத்தை சுமத்தி இருக்கும்.


    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தேர்தல் கமி‌ஷனால் தடுக்க முடியாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

    இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை தேர்தல் தான் தேவை என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மறுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PChidambaram #AIIMS #MaduraiAIIMS
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #AIIMS #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக் கையில் கூறி இருப்பதா வது:-

    சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்கள் சேர்த்து இந்தியா முழுவதும் 9 இடங்களில் மட்டுமே எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

    கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் அரசு புதிதாக 14 இடங்களில் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் உயர் சிகிச்சைக்கு நாடு முழுவதும் அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது.அதில் ஏற்கனவே புதிதாக 10 இடங்களில் திட்டம் செயலுக்கு வந்து மருத்துவமனைகள் இயங்கி வருகின் றன. மீதமுள்ள இடங்களில் புதிதாக அமைக்க பெரும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய மத்திய- மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. மாநில அரசின் சுகாதாரத் துறை பிற துறைகளுடன் இணைந்து சுற்றுச்சூழல், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை இவற்றுடன் விரிவான திட்ட அறிக்கைகள், அரசு நிர்வாக நடைமுறைப்படி படிப்படியாக பெற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மதுரை தோப்பூரில் அடையாளங் காணப்பட்ட இடத்தின் நடுவே பெட்ரோலிய துறையின் பெட் ரோல் குழாய்கள் மாற்றியமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

    சுமார் ரூ.1500 கோடிக்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படியும் வடிவமைக்கப்படும். முறையாக தயார் செய்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள்.

    இதன் நிறைவு வடிவமே மத்திய அமைச்சரவை கூடி நிதி ஒதுக்கி இறுதியில் அதற்கான ஆணைகள் வரும் என்பது உறுதி. அதுவரை ஆகும் கால அவகாசம் இயற்கையானதுதான். தாமதம் என்பது கருவுற்ற தாய் குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருக்க வேண்டுமல்லவா அதுபோலத்தான் இந்த கால அவகாசம்.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சகோதரர் கூட இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு ஏன் ஒப்புதல் ஆணை இல்லை என்று கேட்டிருக்கிறார். கட்டிட ஒப்பந்தம் யாருக்கு வழங்கபட்டிருக்கிறது? கருவுற்ற பின்புதான் குழந்தை பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம் தேவை அதுபோலத்தான் இதுவும்.

    ஆனால் கருவுற்றபின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்தியமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும். என்னை பொறுத்தவரை தமிழக பா.ஜ.க. சார்பில் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணித்தும், பின்பற்றியும் வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை. எய்ம்ஸ் அமைவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AIIMS #TamilisaiSoundararajan
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் நேற்று அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து வருத்தமடைகிறேன். விரைவில் அவரது உடல்நிலை குணமடைய வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார். #AtalBihariVajpayee  #AIIMS #MKStalin
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHestyle #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இன்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் நல்ல நிலையில் இல்லை என்றும், சிறுநீரகங்களும் பலவீனமாக உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து வாஜ்பாய் குணமடைய வேண்டி பாஜகவினர் பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தனர். 

    ஏற்கனவே, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து வருகின்றனர். #AtalBihariVajpayee  #AIIMS #VajpayeeHestyle #PMModi
    எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மதுரை தோப்பூரில் மத்திய கட்டுமானக்குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது பரிசோதனைக்காக மண் மாதிரியும் எடுத்தனர்.
    திருப்பரங்குன்றம்:

    மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் அமைய உள்ளது. ரூ.1500 கோடி மதிப்பீட்டில் சுமார் 197.28 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

    இதற்கான நிலத்தை வருவாய்த்துறையினர் ஒதுக்கீடு செய்துள்ளனர். அந்த இடத்தில் உள்ள 67-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 3 மின் மாற்றிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல கூத்தியார்குண்டு விலக்கு மற்றும் தனக்கன்குளம் மிசோரியர் மில் பகுதி ஆகிய இடங்களில் 60 அடி அகல சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அந்த பகுதியில் உள்ள நிலங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய அரசின் மருத்துவ கட்டுமானக்குழுவைச் சேர்ந்த 7 பேர் இன்று மதுரை வந்தனர். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூர் சென்று ஆய்வு செய்தனர்.

    அந்த இடத்தின் நிலத்தடி நீர், மின்சாரம், குடிநீர் போன்றவை குறித்து அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன், கோட்டாட்சியர் அரவிந்தன், தாசில்தார் சுரேஷ் ஆகியோர் ஆய்வில் பங்கேற்று மத்திய கட்டுமான குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.

    தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் மண் மாதிரியை கட்டுமான குழுவினர் ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர்.

    மத்தியக்குழுவின் ஆய்வு குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் மருது பாண்டியன் கூறுகையில், ஆய்வுக்கு வந்துள்ள குழு தான், மதுரையில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டுமானம் செய்தது. இந்த குழு மண் மாதிரி அறிக்கையை 2 நாளில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். அதன் பிறகு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். #AIIMS #AIIMSinMadurai
    எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் என்று ராஜ் பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #BanwarilalPurohit
    சென்னை:

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நேற்று நடந்தது.

    விழாவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று டாக்டர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    முன்னதாக விழாவில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

    நோயை கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் எப்போதும் முக்கிய மையமாக திகழ்கிறது. பொது சுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமும் தமிழகம் தான். சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையும், அரசு கண் மருத்துவமனையும் ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.

    தமிழகத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து சாதனை படைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகின் கிழக்கு பிராந்தியத்தில் மருத்துவ சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.

    120 கோடிக்கும் அதிக மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டில், தேசிய சுகாதார தகவலின்படி 10 லட்சம் அலோபதி டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை. இதில் 10 சதவீதம் பேர் மட்டுமே பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்றனர்.

    அதனால் பயிற்சி பெற்ற டாக்டர்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதேபோல பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுவதற்கும், கிராமப்புற பகுதிகளில் சேவை செய்வதற்கும் டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களின் உயிர்களை காப்பதில் அரசு காப்பீடு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மதுரையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

    இதன்மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள 15 மாவட்டங்கள் பயன்பெறும். தமிழகத்தின் சுமார் 4 கோடி மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரமாக அமையும். சமூகத்துக்காக தங்களுடைய அர்ப்பணிப்பு செய்தவர்களை நினைவுகூர்ந்து கவுரவப்படுத்துவது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டாக்டர்கள் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், கே.செந்தில், டி.மருதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 
    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #DMK #MKStalin #TNAssembly
    சட்டசபையில் நேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளில் வரும் ஒரு செய்தி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று. நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை?” என்றார்.

    அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. மத்திய அரசும் அதற்கான அனுமதியை வழங்கிவிட்டது. மத்திய மந்திரி சபை கூட்டத்தில்தான் அதற்கான நிதி ஒதுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 5 நிபந்தனைகளை விதித்தது. அந்த 5 நிபந்தனைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, செய்துதர இசைந்துள்ளது. ரூ.1,500 கோடியில் 750 படுக்கை வசதியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி” என்றார். #DMK #MKStalin #TNAssembly
    ×