search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor banwarilal purohit"

    கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வழங்கினார்.
    சென்னை:

    கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வழங்கினார்.

    துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வைதேகி விஜயகுமார் பேராசிரியர் பணியில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றினார்.

    6 ஆண்டுகளுக்கும் மேலாக துணை தலைவராகவும், 5 ஆண்டுகள் டீனாகவும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து நிர்வாக ஆற்றல் பெற்றவர்.

    கனடா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர்.

    ஆராய்ச்சித்துறையில் 24 ஆராய்ச்சியாளர்களுக்கு வழி காட்டியாக இருந்துள்ளார். சர்வதேச அளவில் 266 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 123-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்கள், புல்வெளிகளை சுற்றி வித விதமாக பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியினை சிறப்பிக்கும் வகையில் 89 அடி அகலம், 23 அடி உயரத்தில் 1¼ லட்சம் கார்னேசன் மலர்களால் பாராளுமன்றத்தின் தோற்றமும், 12 அடி உயரத்தில் 2 ஆயிரம் ஆர்கிட், 2 ஆயிரம் கார்னேசன் மலர்களால் மலர் அருவியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள், மயில் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஞ்செடிகளும், மலர் மாடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வரவேற்கும் வகையில் வண்ண மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெற்று வரும்போதே பொதுமக்கள் ஆர்வமுடன் செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை (வெள்ளிக்கிழமை) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்று பேசினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தேயிலை வாரிய செயல் அலுவலர் பால்ராசு, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட மேலாண்மை இயக்குநர் அமர்குஷ்வாஹா, இயக்குநர் இண்கோ வினித், தமிழ்நாடு தேயிலை கழகமேலாண்மை இயக்குநர் ஸ்ரீநிவாஸ்ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் கவுசல், மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, கூடலூர் வனகோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் நன்றி கூறினார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மலர் கண்காட்சியினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, கேமிராவிற்கு ரூ.100, வீடியோ கேமிராவிற்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். அங்கு தோட்டக் கலைத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்த மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பொதுமக்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் கேமிராவும், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் ஹெலி கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் வகையில் மாணவர்கள் வழிகாட்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். மலர் கண்காட்சியினை கண்டுகளிக்க பொது மக்கள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
    கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், “தங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில் உங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை புரிய நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியதையடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    சென்னை:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து ஐ.ஜி. ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோரது தலைமையிலான போலீசார் நேற்று பொள்ளாச்சிக்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். பாலியல் சம்பவம் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ள வீட்டுக்கு சென்றும் விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரை காவலில் எடுக்கவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



    இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. #PollachiAbuseCase #PollachiCase
    சட்ட விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக கவர்னருக்கு திமுக செயலாளர் ஆர்எஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார். #DMK #RSBharathi #EPS #OPS
    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கவர்னருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.

    தலைமைச் செயலாளரின் கீழ் அனைத்து துறைகளும் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் முதல்- அமைச்சரான எடப்பாடி பழனிசாமி சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும் அரசியல் சட்டத்தின்படி, தான் பதவியேற்கும்போது எடுத்த பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு, தான் சார்ந்த அ.தி.மு.க. கட்சிப் பணிகளுக்காக, தலைமைச் செயலகத்தை, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, நேற்றைய தினம் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும் துணை போயிருக்கிறார்.



    அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்றம் சாட்டியதால், அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை, அரசின் தலைமைச் செயலகத்தில் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

    நேற்று நடந்த இந்நிகழ்வால், தமிழக அரசின் முதல்-அமைச்சராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்-அமைச்சராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வமும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

    எனவே, தமிழக ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்தும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #RSBharathi #EPS #OPS
    சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். #BreakfastProgramme #BanwarilalPurohit
    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வி.சரோஜா, ஜெயவர்தன் எம்பி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


    முதலில் 1000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் 5000 மாணவர்களுக்கும், வரும் கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. #BreakfastProgramme #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். #Arputhammal
    கடலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதன்படி நேற்று கடலூருக்கு வந்த அற்புதம்மாள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

    இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் மீண்டும் அவரை சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். எனது 71 வயதிலும் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே போராட்டம் நடத்தி வருகிறேன்.

    அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    மும்பை குண்டு வெடிப்பில் 254 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பிரபல நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சி.பி.ஐ. விசாரித்த அந்த வழக்கில் அந்த மாநில கவர்னரே அவரை விடுதலை செய்தார்.

    ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரின் சட்டப் படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Arputhammal

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். #MSUniversity ViceChancellorPichumani
    சென்னை:

    திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த டாக்டர் கே.பாஸ்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய துணைவேந்தரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். புதிய துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பதவி வகிப்பார்.

    துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கே.பிச்சுமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பணி நியமன ஆணையை வழங்கினார்.

    வேதியியல் பேராசிரியரான பிச்சுணி, ஆசிரிய பணியில் 37 வருடம் அனுபவம் வாய்ந்தவர் எனவும், மதுரை பல்கலைக்கழக பொறுப்புகள் மட்டுமின்றி தைபே, ஜப்பான் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MSUniversity ViceChancellorPichumani
    ஊட்டியில் இன்று தொடங்கிய தேசிய அறிவியல் கருத்தரங்கில் இந்தியாவில் மண் வளம் மற்றும் நீர் வளத்தில் சிறந்து விளங்கிய 26 விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார். #BanwarilalPurohit
    ஊட்டி:

    ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர் வள தொழில்நுட்பங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து இந்தியாவில் மண் வளம் மற்றும் நீர் வளத்தில் சிறந்து விளங்கிய 26 விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். மண் வளம் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு உட்பட 10 தலைப்புகளில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் , கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கருத்தரங்கிற்கு பின்னர் உருவாக்கப்படும் திட்ட அறிக்கைகள் அரசு மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

    இன்று நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊட்டியில் தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் முதல் முறையாக நடைபெறுவது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். #TNGover #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை மறுநாள் ஊட்டிக்கு வருகை தரஉள்ளார். அப்போது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். #TNGovernor #Banwarilalpurohit
    ஊட்டி:

    இந்தியாவில் கடந்த 1954-ம் ஆண்டு இந்திய மண்வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், வல்லுனர்களை கொண்டு இயங்கி வருகிறது.

    இந்த சங்கம் மற்றும் ஊட்டியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகள் 25 பேருக்கு விருதுகளை வழங்குகிறார்.

    மண் மற்றும் நீர் வளங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், மண் அரிப்பு, நிலச்சரிவு, மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்ற சூழலில் அதன் பன்முக பயன்பாடு, மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு மதிப்பீடு செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம், தோட்டக்கலை பயிர்கள், வனங்கள் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், எந்திரமயமாக்கப்பட்ட மண் மற்றும் நீர் வள மேலாண்மை துல்லிய பண்ணையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு உள்பட 10 தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.

    கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், விவசாய சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

    கருத்தரங்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய மண்வள பாதுகாப்பு சங்க தலைவர் சுராஜ் பான், அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

    தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க விருப்பம் உள்ளவர்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். #TNGovernor #Banwarilalpurohit
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார். #KodanadIssue #DMK #MKStalin
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

    இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற் றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத் யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    கொடநாடு கொலை- கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும். சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஐகோர்ட்டில் நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை நடத்தப்படவேண்டும்.

    முதல்-அமைச்சரை அழைத்து ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்.


    இந்த பிரச்சனையை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு செல்ல இருக்கிறது. இன்று கவர்னரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

    இதையடுத்து கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அதன்படி கவர்னரை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார். #KodanadIssue #DMK #MKStalin #BanwarilalPurohit
    கவர்னரை நாளை நேரடியாக சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Kodanad
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா? இப்போது சென்று குறை கேட்பதா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.

    அதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான்.

    நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.

    கிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம்.

    12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.

    ராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.

    ஆனால் இன்று கொலை, கொள்ளை, வழிப்பறி, லஞ்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைத்தான் சொல்லமுடியும்.


    உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க. தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்காக வழக்கு போட்டது நாங்கள் தான். அதை நிறுத்த வழக்கு போடவில்லை.

    ஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு? என் தவறா? எடப்பாடி பழனிசாமி மீது தவறா? மக்களுக்கு உண்மை தெரியும்.

    இப்போது நான் முதல்-அமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு.

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.

    சயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது.

    தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.

    இந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    ஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகாரை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்.

    இந்த வி‌ஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.

    மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    கவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DMK #MKStalin #Kodanad
    ×