search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை கவர்னர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை கவர்னர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஊட்டியில் 123-வது மலர் கண்காட்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 123-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்கள், புல்வெளிகளை சுற்றி வித விதமாக பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியினை சிறப்பிக்கும் வகையில் 89 அடி அகலம், 23 அடி உயரத்தில் 1¼ லட்சம் கார்னேசன் மலர்களால் பாராளுமன்றத்தின் தோற்றமும், 12 அடி உயரத்தில் 2 ஆயிரம் ஆர்கிட், 2 ஆயிரம் கார்னேசன் மலர்களால் மலர் அருவியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள், மயில் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஞ்செடிகளும், மலர் மாடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வரவேற்கும் வகையில் வண்ண மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெற்று வரும்போதே பொதுமக்கள் ஆர்வமுடன் செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை (வெள்ளிக்கிழமை) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்று பேசினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தேயிலை வாரிய செயல் அலுவலர் பால்ராசு, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட மேலாண்மை இயக்குநர் அமர்குஷ்வாஹா, இயக்குநர் இண்கோ வினித், தமிழ்நாடு தேயிலை கழகமேலாண்மை இயக்குநர் ஸ்ரீநிவாஸ்ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் கவுசல், மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, கூடலூர் வனகோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் நன்றி கூறினார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மலர் கண்காட்சியினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, கேமிராவிற்கு ரூ.100, வீடியோ கேமிராவிற்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். அங்கு தோட்டக் கலைத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்த மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    பொதுமக்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் கேமிராவும், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் ஹெலி கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் வகையில் மாணவர்கள் வழிகாட்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். மலர் கண்காட்சியினை கண்டுகளிக்க பொது மக்கள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
    Next Story
    ×