என் மலர்
நீங்கள் தேடியது "துணைவேந்தர் நியமனம்"
- பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை.
- பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 8 பல்கலைக் கழகங்கள் உள்பட உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகங்கள், அதாவது 85 சதவீதம் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தடுமாறும் அவல நிலை உருவாகிவிடும்.
துணைவேந்தர்கள் இல்லாமல் பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டாலும் துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள பட்டச் சான்றுகளுக்கு மதிப்பில்லை என்பதால் மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதி பாதிக்கப்பட்டுள்ளது.
கவர்னருக்கும், அரசுக்கும் இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. பல்கலைக்கழகங்கள் முடங்கி விடக்கூடாது. எனவே அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வழங்கினார்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வைதேகி விஜயகுமார் பேராசிரியர் பணியில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றினார்.
6 ஆண்டுகளுக்கும் மேலாக துணை தலைவராகவும், 5 ஆண்டுகள் டீனாகவும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து நிர்வாக ஆற்றல் பெற்றவர்.
கனடா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர்.
ஆராய்ச்சித்துறையில் 24 ஆராய்ச்சியாளர்களுக்கு வழி காட்டியாக இருந்துள்ளார். சர்வதேச அளவில் 266 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
வேலூர்:
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில மாநாடு டிசம்பர் 19-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுதொடர்பான வரவேற்புக் குழு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் இன்று நடந்தது.
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
பாலியல் தொல்லை பற்றி பெண்கள் தற்போது வெளிப்படையாக புகார் கூறிவருவது வரவேற்கத்தக்கது. பாலியல் புகார்களை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிகாரம் படைத்த ஆணையத்தை அமைக்க வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த 3-ந் தேதியில் இருந்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய-மாநில அரசுகள் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணாதது கண்டிக்கத்தக்கது.
பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மணல் குவாரி அமைத்தால் பாலாறு வறண்டு போகும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.
எனவே, பாலாற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தென்பெண்ணை, பாலாற்றை இணைக்கும் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயக முறையில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறையை கண்டித்து வரும் 16-ந் தேதி தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும்.

பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 6 மாதங்களாக ஜெயிலில் உள்ளார். நிர்மலாதேவியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட பாலியல் புகாரில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியும்.

பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும் என்றார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். #mutharasan #nirmaladevi
கரூர் பாராளுமன்ற பா.ஜ.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. கோட்ட பொறுப்பாளர் கார்த்தி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் கோபிநாத், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் திராவிட கட்சிகள் முன்பெல்லாம் ரோடு போட சொல்லி போராட்டம் நடத்தின. இப்போது ரோடு வேண்டாம் என போராட்டம் நடத்துகிறார்கள். ஹைட்ரோகார்பன் வாயு எங்கு இருக்கிறதோ அங்குதான் எடுக்க முடியும். அதனால் விவசாயத்திற்கும், மக்களுக்கும் தீங்கு ஏற்படும் என்றால் கண்டிப்பாக மத்திய அரசு அந்த பகுதியில் திட்டத்தை செயல்படுத்தாது. நடிகர் கருணாஸ் ஜாதி மோதலை தூண்டும் விதமாக அநாகரீகமாக பேசினார். ஆனால் எச். ராஜா யாரையும் தனிப்பட்ட முறையிலோ, ஜாதிமத மோதலை ஏற்படுத்தும் விதத்திலோ பேசவில்லை.
சமூகத்தில் நடைபெறும் ஊழல், லஞ்சங்களை பார்த்து உணர்ச்சி வேகத்தில் பேசினார். அவ்வளவுதான். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கலாம் என கவர்னர் கூறியுள்ளார். இந்த ஊழல் எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதற்கான ஆதாரம் கிடைத்த உடன் கவர்னர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் இருந்து அதிகம் எம்.பி.க்கள் பா.ஜ.க.வுக்கு கிடைப்பார்கள். காங்கிரசாரின் பொய் பிரச்சாரம் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தலைவர் முருகானந்தம், நகர தலைவர் செல்வம், மாவடட பொதுச்செயலாளர் சிவம் சக்திவேல், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் எம்.கே. கணேசமூர்த்தி மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews
பேராசிரியை நிர்மலாதேவி கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை, கவர்னர் மாளிகையை தொடர்புப்படுத்தி எழுதியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்து உள்ளதாகவும், பலகோடி ரூபாய் பணம் இதில் புரண்டு உள்ளதாகவும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னரின் குற்றச்சாட்டு பற்றி தக்கலையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவர்னர் கூறி உள்ளார். சூழ்நிலை வரும்போது கவர்னர் அது பற்றி வெளிப்படையாக கூறி விளக்கம் அளிப்பார்.
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்கள் பற்றி கேரள தேவசம் போர்டு மந்திரியிடம் பேசி உள்ளேன்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தால் கேரளா-தமிழக உறவு பாதிக்கப்படாது. சுவாமி அய்யப்பனை முழுமையாக உணர்ந்த பெண் பக்தர்கள் யாரும் சபரிமலை செல்ல மாட்டார்கள். நானும் அய்யப்பப் பக்தன்தான். சிறு வயதில் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்று வருகிறேன். இந்த பிரச்சினையில் களங்கம் ஏற்பட்டால் அதை நான், ஏற்க மாட்டேன்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு காரணம் மழை எச்சரிக்கை தான். விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்தித்த விவகாரத்தில் பாரதிய ஜனதா பின்னால் நின்றும் இயக்கவில்லை. முன்னால் நின்றும் இயக்கவில்லை. இது அ.தி.மு.க.-அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இடையே நடைபெறும் பங்காளி சண்டை.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா டூரிஸ்ட் டாக்சிஓட்டுனர் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்க தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.
தமிழகத்திற்கு கனமழை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு உள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 மண்டலத்தில் ஒரு மண்டலத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
மழையால் தேங்கும் நீரை உறிஞ்ச பம்பு செட், மரம் அறுக்கும் எந்திரம், ஜே.சி.பி. எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மழை அதிகமாக பெய்யும் இடங்களை கண்டறிந்து அதனை சமாளிக்கும் நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு தயார் நிலையில் உள்ளது.

திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆர்.கே. நகரில் 20 ரூபாய் நோட்டுகள் கொடுத்தது போல் திருப்பரங்குன்றத்தில் இது செல்லுபடியாகாது. தினகரன் கனவு பலிக்காது.
எடப்பாடியும், ஒ.பி.எஸ்சும் அண்ணன்-தம்பியாக இருக்கிறார்கள்.
தினகரன் 10 வருடங்கள் கட்சியில் இல்லை. அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. தினகரனுக்கு ஓ.பி.எஸ். முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை என்றார்.
அவரிடம் துணை வேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக கவர்னர் பன்வாரிலால் குற்றம்சாட்டி உள்ளாரே? என கேட்டதற்கு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார். #ADMK #SPVelumani #Thirupparankundram
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி அளவிற்கு பணம் புரண்டதாகவும் இதனால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், ஆளுநரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-

துணைவேந்தர்களை நியமிப்பது முழுக்க முழுக்க ஆளுநர் மட்டுமே. தேடுதல் குழுவை அமைப்பதுடன் அரசின் பணி முடிந்துவிடுகிறது. தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் துணைவேந்தர் பதவிக்கு 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு ஒப்படைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரை துணைவேந்தராக நியமிக்கிறார் ஆளுநர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணம் கொடுத்து துணைவேந்தர்கள் பதவி பெற்றவர்கள் யார் என பெயர்களை தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #BanwarilalPurohit #ViceChancellors #MinisterKPAnbalagan
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்குள் நடப்பது தர்மயுத்தமா? தர்ம சங்கட யுத்தமா? என்பது எனக்கு தெரியாது. அது அவர்களுக்குள் நடக்கும் போர்.
இதற்கு முன் தினகரன் கட்சியினரும் எங்களை சந்திக்க தூது அனுப்பினார்கள். யார் யாரை எந்த சூழ்நிலையில் எதற்காக சந்தித்தார்கள் என்பது அந்த அந்த சூழ்நிலையை பொறுத்தது.
துணை முதல்-அமைச்சர்- டி.டி.வி. தினகரன் சந்திப்பு எந்த சூழ்நிலையில் எதற்காக நடந்ததோ எனக்கு தெரியாது. அவர்களுக்குள் நடப்பது தர்மயுத்தமா, தர்மசங்கட யுத்தமா என்பது தெரியாது. ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொடுக்கும் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்லை. ஆனால் டி.டி.வி. தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

அதற்கு முன்பு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு மண் பரிசோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் முதல்வர் டெல்லி செல்வது ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காக என்றால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #TTVDhinakaran

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பலகோடி ரூபாய் பணம் புரண்டுள்ளது. பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டு நான் வருத்தமடைந்து, அதை மாற்ற நினைத்தேன். தகுதி அடிப்படையில்தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆளுநரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BanwarilalPurohit #ViceChancellors
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.
அந்த மனுக்களில், செல்லத்துரைக்கு துணைவேந்தர் பதவிக்கு தேவையான பேராசிரியர் அனுபவம் கிடையாது என்றும், பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும், இது சட்டவிரோதமானது என்றும், எனவே அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக பி.பி.செல்லத்துரையை நியமித்ததை ரத்துசெய்து கடந்த ஜூன் 14-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
மேலும் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த குழு 3 மாதத்திற்குள் புதிய துணைவேந்தரை சட்டத்திற்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும், மீண்டும் பி.பி.செல்லத்துரை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதையும் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பி.பி.செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஜூன் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரரின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், தமிழக கவர்னர் தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜரானார்கள்.
மனுதாரர் பி.பி.செல்லத்துரை சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.
மனுதாரரின் வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில் கூறியதாவது:-
இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், இந்த நியமனம் சரியான விதிமுறைப்படி செய்யப்பட்டுள்ளது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நியமனத்தை முற்றிலும் ஆதரிக்கும் வகையில் அந்த பிரமாண பத்திரம் அமைந்து இருந்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு முற்றிலும் எதிராக வாதங்கள் முன்வைக் கப்படுகின்றன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனம் செய்யப்பட்ட போது தேடுதல் குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர் களின் ஒப்புதல் பெற்றுத்தான் இந்த நியமனம் செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் அவர்கள் வேறு மாதிரி பிரமாண பத்திரங்கள் அளித்து இருக்கிறார்கள். இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் செய்யப்படும் அனைத்து நியமனங்களையும் முன்பு ஏற்றுக்கொண்டு பிற்பாடு முரண்பட்ட கருத்துகளை கூறலாம் என்ற முன்மாதிரி உருவாக்கப்படும். இது தவறானது. இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக கவர்னர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-
முன்பு பல்வேறு காரணங் களுக்காக இந்த நியமனத்தை அரசு ஏற்றுக்கொண்டது. ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பிறகு அரசின் கவனத்துக்கு பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் ஒரு ஆண்டுக்கும் மேலாக துணை வேந்தரின் நடவடிக்கைகளை கவனித்த போது ஐகோர்ட்டு தீர்ப்பு சரியானதே என்று அரசு ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்துடன் தமிழக கவர்னர் அலுவலகத்தின் ஒரு கோப்பில் இருந்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சில பகுதிகளை கோர்ட்டுக்கு வாசித்து காட்டினார்.
அவரை தொடர்ந்து வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், துணைவேந்தர் நியமனத்தை ஐகோர்ட்டில் நாங்கள் ஆதரித்தாலும் பிற்பாடு இவருடைய (பி.பி.செல்லத்துரை) நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அந்த நியமனத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கிறோம் என்றார்.
மேலும், தேடுதல் குழுவின் 3 உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டு இருந்தாலும், அவருடைய நடவடிக்கைகளால் அவர் இந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று தெரியவந்ததாகவும், அதனால்தான் இந்த மேல்முறையீட்டு மனுவை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பி.பி.செல்லத்துரையின் நியமனத்தை ரத்துசெய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்கள்.
அப்போது மனுதாரர் பி.பி.செல்லத்துரையின் வக்கீலிடம் நீதிபதிகள், “உங்கள் தரப்பில் சட்டரீதியாக வாதங்களை முன்வைக்க இடமிருந்தாலும் தார்மீக ரீதியில் இந்த வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” என்று கூறினார்கள்.






