search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    X

    காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. #MaduraiKamarajUniversity #SupremeCourt
    புதுடெல்லி:

    மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

    அந்த மனுக்களில், செல்லத்துரைக்கு துணைவேந்தர் பதவிக்கு தேவையான பேராசிரியர் அனுபவம் கிடையாது என்றும், பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும், இது சட்டவிரோதமானது என்றும், எனவே அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக பி.பி.செல்லத்துரையை நியமித்ததை ரத்துசெய்து கடந்த ஜூன் 14-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.



    மேலும் புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்த குழு 3 மாதத்திற்குள் புதிய துணைவேந்தரை சட்டத்திற்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும், மீண்டும் பி.பி.செல்லத்துரை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதையும் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பி.பி.செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஜூன் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மனுதாரரின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், தமிழக கவர்னர் தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வக்கீல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜரானார்கள்.

    மனுதாரர் பி.பி.செல்லத்துரை சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

    மனுதாரரின் வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில் கூறியதாவது:-

    இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், இந்த நியமனம் சரியான விதிமுறைப்படி செய்யப்பட்டுள்ளது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நியமனத்தை முற்றிலும் ஆதரிக்கும் வகையில் அந்த பிரமாண பத்திரம் அமைந்து இருந்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு முற்றிலும் எதிராக வாதங்கள் முன்வைக் கப்படுகின்றன.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனம் செய்யப்பட்ட போது தேடுதல் குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அவர் களின் ஒப்புதல் பெற்றுத்தான் இந்த நியமனம் செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டில் அவர்கள் வேறு மாதிரி பிரமாண பத்திரங்கள் அளித்து இருக்கிறார்கள். இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் செய்யப்படும் அனைத்து நியமனங்களையும் முன்பு ஏற்றுக்கொண்டு பிற்பாடு முரண்பட்ட கருத்துகளை கூறலாம் என்ற முன்மாதிரி உருவாக்கப்படும். இது தவறானது. இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக கவர்னர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

    முன்பு பல்வேறு காரணங் களுக்காக இந்த நியமனத்தை அரசு ஏற்றுக்கொண்டது. ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பிறகு அரசின் கவனத்துக்கு பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் ஒரு ஆண்டுக்கும் மேலாக துணை வேந்தரின் நடவடிக்கைகளை கவனித்த போது ஐகோர்ட்டு தீர்ப்பு சரியானதே என்று அரசு ஏற்றுக்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அத்துடன் தமிழக கவர்னர் அலுவலகத்தின் ஒரு கோப்பில் இருந்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சில பகுதிகளை கோர்ட்டுக்கு வாசித்து காட்டினார்.

    அவரை தொடர்ந்து வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், துணைவேந்தர் நியமனத்தை ஐகோர்ட்டில் நாங்கள் ஆதரித்தாலும் பிற்பாடு இவருடைய (பி.பி.செல்லத்துரை) நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அந்த நியமனத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கிறோம் என்றார்.

    மேலும், தேடுதல் குழுவின் 3 உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டு இருந்தாலும், அவருடைய நடவடிக்கைகளால் அவர் இந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று தெரியவந்ததாகவும், அதனால்தான் இந்த மேல்முறையீட்டு மனுவை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பி.பி.செல்லத்துரையின் நியமனத்தை ரத்துசெய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார்கள்.

    அப்போது மனுதாரர் பி.பி.செல்லத்துரையின் வக்கீலிடம் நீதிபதிகள், “உங்கள் தரப்பில் சட்டரீதியாக வாதங்களை முன்வைக்க இடமிருந்தாலும் தார்மீக ரீதியில் இந்த வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” என்று கூறினார்கள். 
    Next Story
    ×