search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS Hospital"

    • சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது
    • டாக்டர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் நாகராஜன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

    சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் நாகராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன், தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நெறிமுறை குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனின் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதா வது:-

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.

    அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.
    • நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் இன்று காலமானார். நாகராஜன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். மூத்த நரம்பியல் நிபுணரான நாகராஜன், வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக இருந்தவர்.

    மதுரை புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
    • நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது.
    • கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சீனாவில் பரவி உள்ள பி.எப்-7 மற்றும் மூன்று வகை வைரஸ்கள் உலக நாடுகளையே அச்சுறுத்தும் வகையில் மாறி விட்டது.

    ஒமைக்ரானின் மரபணு மாற்றங்களான 4 வைரஸ்கள் ஒன்றிணைந்து சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த கொரோனா தாக்கம் தற்போது மெல்ல மெல்ல வெளிநாடுகளுக்கும் பரவி வருகிறது. சீனாவை மீண்டும் பயமுறுத்திய புதிய கொரோனா பரவல் 10 நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.

    அதே சமயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வைரஸ் தாக்கம் தற்போது சற்று அதிகரித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் உச்சம் தொட்டதை ஆய்வு செய்து உள்ள சர்வதேச நிபுணர்கள் புதிய கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவிலும் கடந்த கால கொரோனா புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போதைய பி.எப்-7 வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி அடுத்த மாதம் (ஜனவரி) இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதே சமயத்தில் இந்த அதிகரிப்பு புதிய கொரோனா அலையாக மாற வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்பு கொரோனா தாக்கம் வெளிநாடுகளில் அதிகரித்த போதெல்லாம் 30 முதல் 35 நாட்களுக்குள் அதன் பிரதிபலிப்பு இந்தியாவில் எதிரொலித்தபடி இருந்தது.

    இதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்த மாதம் இந்தியாவில் பி.எப்-7 ரக வைரஸ் சற்று அதிகமாக மக்களிடையே பரவக்கூடும். அதனுடைய அறிகுறிகள் முன்பு போல மிக பயங்கரமாக இருக்காது. சாதாரண ஜலதோஷம் போலத்தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.எப்-7 உள்ளிட்ட தற்போது பரவிக் கொண்டிருக்கும் 4 விதமான வைரஸ்கள் ஒமைக்ரான் தொடக்க கால வைரஸ்கள் போல சக்தி வாய்ந்தவை அல்ல. தற்போதைய வைரஸ்கள் அனைத்தும் வீரியம் குறைந்தே பரவி வருகின்றன. எனவே இது புது கொரோனா அலையாக உருவெடுக்காது என்று மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள சீனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி விட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் விலக்கி இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தாக்கம் வீழ்ச்சி அடைந்து இருப்பதை சர்வதேச அளவில் சீனா உறுதிப்படுத்தி இருக்கிறது.

    சீனாவை தொடர்ந்து சில நாடுகளில் பி.எப்-7 வைரஸ் பரவினாலும் இந்தியாவில் அதன் தாக்கம் சுத்தமாக இல்லை என்ற நிலைதான் தற்போது உள்ளது. கடந்த வாரத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 6 ஆயிரம் பேரிடம் சோதனை அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த 6 ஆயிரம் பேரில் 38 பேருக்கு மட்டும்தான் லேசான கொரோனா தாக்கம் இருந்தது. அந்த 38 பேருக்கும் பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் புதிய வைரஸ் பரவல் இல்லை என்பதும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

    என்றாலும் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில்தான் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அடுத்த 30 நாட்களில் இந்தியர்கள் முன்னெச்சரிக்கையுடன் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் இந்தியாவிற்குள் புதிய கொரோனா பரவலை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இந்தியாவில் தற்போது 3,468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பி.எப்-7 ரக வைரஸ் பாதிப்பால் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. எனவே புதிய அலை வர வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    என்றாலும் நாடு முழுவதும் 20 ஆயிரம் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் டாக்டர்கள், 3 லட்சத்து 20 ஆயிரம் நர்சுகள், 1 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    • கடந்த 7 மாதங்களாக பெண் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார்.
    • வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனம் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் சுயநினைவு இழந்தார்.

    உடனடியாக அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் அந்த பெண் 40 நாள் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு அவர் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவருக்கு நினைவு திரும்புமா என்பதை உறுதியாக செல்ல இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர்.

    சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை கலைக்க வேண்டுமானால் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை வளர்க்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சுய நினைவு இழந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

    கடந்த 7 மாதங்களாக அவர் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். அதே சமயத்தில் வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை பெற்ற அந்த பெண் சுய நினைவு இல்லாமலேயே அறுவை சிகிச்சை இன்றி இயல்பான முறையில் குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    23 வயதாகும் அந்த பெண் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். குழந்தை பெற்ற சமயத்தில் அவரது கண்கள் திறந்தன. ஆனால் அந்த பெண் பேசவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். #BJP #PMModi #HRaja
    பழனி:

    பழனியில் பா.ஜனதா சார்பில் பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு முழு முயற்சி எடுத்தது. ஆனால் தமிழக அரசு இத்திட்டத்தை தாமதப்படுத்தி வந்தது. தற்போது மத்திய அரசு மீண்டும் முழு முயற்சி எடுத்து பிரதமர் மோடி மதுரையில் இதற்கான திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். மோடி வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.


    தமிழக கோவில்களில் பக்தர்களின் நலனை கருதி அன்னதான திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பழனி முருகன் கோவிலை பஞ்சாமிர்தம் விற்கும் வணிக மையமாக மாற்றியுள்ளனர்.

    பசுஞ்சாணத்தை பயன்படுத்தி விபூதி தயாரிப்பதில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். ஊழலை பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த அறுகதையும் கிடையாது. வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PMModi #HRaja
    மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital
    புதுடெல்லி:

    மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளின் மந்திரியாக ரவிசங்கர் பிரசாத் இருந்து வருகிறார். இவருக்கு திங்கள் இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

    எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. #RaviShankarPrasad #DelhiAIIMSHospital
    தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi #AiimsHospital
    சென்னை:

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு, தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்) அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பின்னர் அதே ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு அருகே உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் மத்திய குழு கூடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

    இந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்தது.

    இந்த தகவலை மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் பெட்ரோலிய துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவிலும், தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளார். மந்திரிசபை குழுவின் முடிவு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.

    மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதால் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், மற்றும் 60 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்களும் கிடைக்கும். இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.

    மேலும் இந்த மருத்துவமனை தினசரி 1,500 வெளிநோயாளிகளுக்கும், ஒரு மாதத்துக்கு 1,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருக்கும். இங்கு 15 முதல் 20 வரையிலான சிறப்பு துறைகள் இருக்கும். இந்த மருத்துவமனைக்கு ஒரு இயக்குனர் நியமிக்கப்படுவார்.

    45 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



    இதேபோன்ற வசதிகள் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் இருக்கும். மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi #AimsHospital
    கல்லீரல் நோய் பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் உடனடியாக கோவா திரும்புவாரா? அல்லது, சில நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பாரா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.  #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    ஊழல் குற்றசாட்டு சொன்ன உடன் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
    சேலம்:

    பா.ஜனதா மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூவில் பாலியல் குற்றசாட்டு வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க, ம.தி.மு.க கம்யூனிஸ்ட் காங்கிரஸ் சேர்ந்த தலைவர்கள் எந்தவித கருத்தும் சொல்லவில்லை. ஆனால் எஸ்.வி சேகர் இன்னொருவர் பதிவை பேஸ்-புக்கில் பகிர்ந்தார். ஆனால் அவரை பலர் நேரடியாக குற்றம் சாட்டினார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக நெல்லை, மதுரை, தஞ்சை ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு 150 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 600 கோடி ரூபாயில் தடுப்பூசி தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து பெண்களும் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பண்பாட்டை சீர்குலைக்கும் செயலாகும். இது தொடர்பாக அமைதியாக நடக்கும் போராட்டங்களுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்து வருகிறது.


    முதல்- அமைச்சர் மீதான குற்றசாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும், ஊழல் குற்றசாட்டு சொன்ன உடன் பதவி விலக வேண்டும் என்று அவசியம் இல்லை.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது. முடிந்தவுடன் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர் எந்த அதிகாரத்தில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #BJP #TamilisaiSoundararajan #Edappadipalaniswami
    மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளிக்கும் என்று சென்னை விமான நிலையத்தில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறினார். #AIIMS #JPNadda
    ஆலந்தூர்:

    மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய இருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சுமார் ரூ.1200 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. கூடிய விரைவில் மத்திய அமைச்சரவில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.


    மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் தமிழக முதல்வருடன் அதனை திறந்து வைப்போம். அதற்கான தேதி கலந்து ஆலோசித்த பின் அறிவிக்கப்படும்.

    எச்.எல்.எல். திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. அதனை பிரதமர் திறந்து வைக்க அழைப்பு விடுப்போம். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மக்களுக்கான நலத்திட்டங்களை விரைவில் முடிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவை வரவேற்றனர். #AIIMS #JPNadda #ChennaiAirport
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #AIIMS
    மதுரை:

    மதுரையை சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே மத்திய அரசு அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் அமைய உள்ளது என்பதை 3 ஆண்டுகள் கழித்து அறிவித்துள்ளனர்.

    பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டவுடன், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

    எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

    மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்து மனு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.  #AIIMS
    ×