search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Minister edappadi palanisamy"

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து வால்பாறை சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர். #ADMK #EdppadiPalanisamy
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை வக்கீல் சங்கத்தலைவராக உள்ளவர் ஷாநவாஸ் கான் (வயது 58). முன்னாள் அரசு வக்கீல். பொள்ளாச்சி ஜோதி நகரில் வசிக்கும் இவர் வால்பாறை, பொள்ளாச்சி கோர்ட்டுகளுக்கு சென்று வருகிறார்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு போஸ்டர்கள் மகாலிங்கபுரம், பஸ் நிலையம், கடைவீதி, தாலுகா அலுவலகம், ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் ஷாநவாஸ் கான் பெயரில் ஒட்டப்பட்டிருந்தது. இது தவிர முதலமைச்சர் குறித்து அவதூறு வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளும் அவரது பெயரில் விநியோகம் செய்யப்பட்டது.

    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசுக்கு தெரியவந்ததும் போலீசார் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டிருந்த அவதூறு போஸ்டர்களை கிழித்தனர். துண்டுபிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள ஷாநவாஸ் கான் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் போஸ்டர் மற்றும் நோட்டீசுகளை ஷாநவாஸ் கான் வினியோகம் செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ஷாநவாஸ் கானை கைது செய்து பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 1-வது நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    கைதான வக்கீல் ஷாநவாஸ் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். மீண்டும் தி.மு.க.வில் இணைய மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்.

    கைதான வக்கீல் ஷாநவாஸை கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் சந்தித்து பேசினார். #ADMK #EdppadiPalanisamy
    தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi #AiimsHospital
    சென்னை:

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு, தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம்) அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பின்னர் அதே ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு அருகே உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் தமிழகம் வந்து 5 இடங்களையும் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் மத்திய குழு கூடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

    இந்த நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்தது.

    இந்த தகவலை மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் பெட்ரோலிய துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவிலும், தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து உள்ளார். மந்திரிசபை குழுவின் முடிவு பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறி இருக்கிறார்.

    மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதால் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், மற்றும் 60 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்களும் கிடைக்கும். இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.

    மேலும் இந்த மருத்துவமனை தினசரி 1,500 வெளிநோயாளிகளுக்கும், ஒரு மாதத்துக்கு 1,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடியதாக இருக்கும். இங்கு 15 முதல் 20 வரையிலான சிறப்பு துறைகள் இருக்கும். இந்த மருத்துவமனைக்கு ஒரு இயக்குனர் நியமிக்கப்படுவார்.

    45 மாதங்களில் இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



    இதேபோன்ற வசதிகள் தெலுங்கானா மாநிலம் பிபி நகரில் அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் இருக்கும். மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். #EdappadiPalanisamy #PMModi #AimsHospital
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து 3 லாரிகளில் நிவாரண பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சேலம்:

    கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்  பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.



    இந்த நிலையில், கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள், சங்கங்கள் வழியே ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

    இவற்றில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் விரிப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை முதல் அமைச்சர் பழனிசாமி சேலத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார்.  இவை உடனடியாக கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மற்றும் தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்படும்.#GajaCyclone #EdappadiPalanisamy
    பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    புதுக்கோட்டை வாணக்கன்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ், பெரம்பலூர் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, கரூர் மஜரா ஓடையூரைச் சேர்ந்த சுப்பிரமணி, மதுரை கன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பின்னியம்மாள், புதுக்கோட்டை ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கம்மாள்.

    வேலூர் இந்திரா நகரைச் சேர்ந்த முருகன், சிவகங்கை தச்சவயல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கத்தாழம்பட்டு மதுரா நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், சேலம் கன்னங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், மதுரை முனிச்சாலை கிராமத்தைச் சேர்ந்த சரவண விக்னேஷ், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மனோ மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    கொருக்குப்பேட்டை, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த செரிப் மகன் சிறுவன் ரியாசு, கடலூர் பி.என். பாளையத்தைச் சேர்ந்த துலுக்காணம் மகன் பக்கிரி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #ADMK
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்எல்ஏ உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #EdappadiPalanisamy #ADMK
    கோவை:

    கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் கடந்த 3-ந் தேதி கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.யுமான எழிலரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேசினர்.

    இது குறித்து காட்டூர் போலீசார் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,எழிரசன், தலைமை பேச்சாளர் சிங்கை சவுந்தர் ஆகியோர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy #ADMK
    நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் இந்த நன்நாளில், நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, காந்தியடிகள் அறிவுறுத்தியவாறு, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால், நவீன நாகரீகத்திற்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புறக்கை வினைஞர்களால் புதிய யுக்திகளுடன் தயாரிக்கப்படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள 88 கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



    மேலும், கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவித்திட, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் அனைத்து கதர் ரகங்களும் 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து/ இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை வழங்கு தல், 2017-2018 ஆம் நிதியாண்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 587 நூற்பாளர்கள் மற்றும் 50 நெசவாளர்களுக்கு ராட்டைகள் மற்றும் தறிகளை இலவசமாக வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தல், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கு 4 கோடி ரூபாயும், சர்வோதய சங்கங்களுக்கு 30 கோடி ரூபாயும் நடப்பாண்டில் தள்ளுபடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கிராமப்புற ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்திட வேண்டுமென, மக்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisamy
    தமிழகத்தில் காவல் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி உள்ளார். #EdappadiPalanisamy #ADMK #TNPolice
    சென்னை:

    கலைவாணர் அரங்கத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி தொடக்க விழா இன்று நடந்தது. விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    காவல் துறை எல்லா காலங்களிலும் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக, நெருக்கடியான தருணங்களில், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், பொது ஒழுங்கை சிறப்பாக பேணி பாதுகாக்கும் துறையாக விளங்கி வருகின்றது.

    ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் அங்கு அமைதி நிலவ வேண்டும். இப்பணியினைத்தான் நமது காவல் துறையினர் சிறப்பாக செய்து, தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக திகழச் செய்கின்றனர் என்று இத்தருணத்தில் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

    காவல் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து சமூக விரோதிகளை சண்டையிட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தினை தமிழ்நாட்டில் முழுவதுமாக கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.

    சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பதை திறம்பட செய்து வந்தாலும், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், முக்கியமான அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்குதல், இயற்கை சீற்றங்களை சமாளித்தல், பல்வேறு சமூக சட்ட விதிகளை செயல்படுத்துதல் போன்ற விரிவான பணிகளை நீங்கள் செய்து வருகின்றீர்கள்.

    நீங்கள் பணி செய்யும் போது, சில சமயங்களில், ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாவதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நீங்கள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற ஆன்றோரின் வாக்குப்படி அமைதியுடன் பணியாற்றி வருகிறீர்கள்.

    இதை மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சென்ற வருடம் பெய்த பெருமழையின் போது காவல் துறையினர் குழுக்களாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகையில் உதவி புரிந்துள்ளனர்.

    சென்னை பெருமழையின் போது, சாலையில் தேங்கியிருந்த நீர் வடியும் பொருட்டு, ஒரு காவல் ஆய்வாளர் மழைநீர் வடிகாலில் இறங்கி அடைப்புகளை நீக்கியது, தாய் தந்தையை இழந்த ஒரு மாணவனை, தத்தெடுத்த ஒரு காவல் உதவி ஆணையர், 72 வயதான ஒரு முதியவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பேரனைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தல் போன்ற உங்களின் பல்வேறு மனித நேயப் பணிகளை பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், மக்களும், நாங்களும் பார்த்து பாராட்டிக் கொண்டு இருக்கின்றோம்.

    காவல் துறையினரும், அவர்தம் குடும்பத்தினரும் சில நேரங்களில் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. காவல் துறையினர் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த அரசு நன்கு அறியும்.

    எனவே, காவல் துறையினரின் மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணி பாதுகாப்பதற்காக மிகுந்த பரிசீலனைக்குப் பின்பு, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டதே இந்த ஏற்றமிகு “காவலர் நிறைவாழ்வு பயிற்சி” திட்டம்.



    இந்த திட்டம் பெங்களூரில் உள்ள, உலகத்தரம் வாய்ந்த “நிம்ஹான்ஸ்” என அழைக்கப்படும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசால், தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகும்.

    இந்தியாவிலேயே, ராணுவத்திலோ அல்லது துணை ராணுவத்திலோ கூட இம்மாதிரியான பயிற்சி இதுவரை அளிக்கப்படவில்லை. காவல் துறையின் உயர் அதிகாரி முதல் கடைநிலை காவலர் வரை அனைவருக்கும் இம்மாதிரியான பயிற்சி வழங்கவிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

    அனைத்து மாவட்டம் மற்றும் காவல் பிரிவுகளிலும், சிறப்புப் பிரிவுகளிலும் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும்.

    இதற்கென, காவல் துறையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், 358 முதன்மை பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்.

    அடுத்த ஒரு வருட காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பின்னர், முதன்மைப் பயிற்சியாளர்கள் மூலம் 2 வருட காலங்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். அதிக அளவு மன அழுத்தம் உள்ளோருக்கு, தனியாக நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சியானது தமிழ்நாடு காவல் துறையில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் சுமார் 1,20,000 காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள சுமார் 3,60,000 குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓர் ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது.

    காவல் துறையினரும் அவரது குடும்பத்தினரும் இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த நிறைவாழ்வு பயிற்சியின் வாயிலாக, தமிழக காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மனநலன் மேம்படுத்தப்பட்டு, காவலர்கள் அவர்தம் பணிகளை மேலும் புத்துணர்ச்சியுடனும், சிறப்புடனும் செயல்பட வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் காவலர்களின் குடும்பங்களிலும் நல்ல அமைதியான சூழ்நிலை உருவாகும்.

    தனிமனித அமைதி, குடும்ப அமைதியாக மாறும்; குடும்ப அமைதி, மாநில அமைதியாக மாறும்; மாநில அமைதி, நாட்டு அமைதியாக மாறும்; ஒரு நாட்டின் அமைதி, உலக அமைதியாக மாறும்.

    இந்த நிறைவாழ்வு பயிற்சி உங்களுக்கு வாழ்விலும், பணியிலும், மன நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #EdappadiPalanisamy #ADMK #TNPolice
    ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    சென்னை:

    இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம் ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.



    அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என மொத்தம் 4 கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGames2018 #edappadipalanisamy
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கோரி முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு மூலம் கருணாநிதி உடல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது 35) என்ற வாலிபர் பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பதிவு செய்திருந்தார். மேலும் அதில் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்றும் பதிவு செய்திருந்தார்.

    இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேசன் (58) என்பவர் திருப்பூர் தெற்கு போலீசில் கனகசுந்தரம் பரப்பிய அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து புகார் செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த கனகசுந்தரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    சென்னையில் ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் 89 இடங்களில் 20 ஆயிரம் போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். #EdappadiPalanisamy #blooddonation
    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் சுமார் 4 லட்சம் யூனிட் ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    மீதமுள்ள 4 லட்சம் யூனிட் ரத்தம் தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் யூனிட் வரை தேவைப்படுகிற ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதம் கல்லூரி விடுமுறை என்பதால் கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைகிறது.

    இதனால் ஜூன் மாதத்தில் ரத்தத்தின் தேவை அதிகரிக்கிறது. எனவே ஜூன் மாதத்தில் போலீசாரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 89 இடங்களில் 20 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்தனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த போலீசாரின் ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இந்த மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன் னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) விஜய குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், காவல் துறை கூடுதல் இயக்குநர் (பயிற்சி) ஆர்.சி. குடவாலா, காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) முகமது ‌ஷகில் அக்தர், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



    புதுடெல்லியில் 26-ந்தேதி நடைபெற்ற “பாஸ்போர்ட் சேவா திவஸ்” விழாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் எம்-போலீஸ் ஆப் செயலியை உருவாக்கிய தமிழ்நாடு காவல்துறையின் பணியை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறைக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியால் வழங்கப்பட்ட சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்பம்) மஞ்சுநாதா, காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு முகாம்களில் 20 ஆயிரம் போலீசாரும் ரத்த தானம் செய்தனர். ஒவ்வொருவரிடம் இருந்தும் 1 யூனிட் என மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. 89 ரத்த வங்கிகளில் அவை பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டன.

    இந்த ரத்தம் ஏழை-எளியவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.#EdappadiPalanisamy #blooddonation
    காவிரி பிரச்சனையில் சாதித்தது தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்பது குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    காவிரி பிரச்சனையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத்தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே கருணாநிதி முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் 1-ந் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகப்பட்டினத்தில் நின்று கொண்டு நான் தான் காவிரிப்பிரச்சனையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாவது தயக்கம் வேண்டாமா?. ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சனையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் போய் பேசுகிறார் என்றால் அய்யகோ, தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.



    இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில் தான் அ.தி.மு.க. அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அ.தி.மு.க. அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. மு.க.ஸ்டாலின் கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #EdappadiPalanisamy #DuraiMurugan
    தமிழக அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கியதை தொடர்ந்து தற்போது, நாட்டுக் கோழி திட்டத்தை சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EdappadiPalanisamy
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், சமூகப் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதிலும், வேலை வாய்ப்புகளை தோற்றுவிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வரும் சத்துள்ள உணவான பாலின் உற்பத்தியைப் பெருக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதாயமான விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைக்கவும் தேவையான ஆக்கபூர்வான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    எனவே தான், கால்நடை மேம்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் அம்மாவின் வழியிலேயே, அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இத்துறையின் சார்பாக பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்க ஏதுவாக, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை அம்மாவின் அரசு அமைத்து வருகின்றது. அதன் அடிப்படையில் இதுவரை, 1,895 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 30 கால்நடை நிலையங்களுக்கு 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

    கால்நடை வளர்ப்போருக்கும் விவசாயிகளுக்கும் மருத்துவம் மற்றும் ஈனியல் சம்பந்தமான நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்க, நவீன நோய் கண்டறியும் கருவிகளை கால்நடை நிலையங்களுக்கு வழங்குவது அவசியமாகும். அதனடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு கால் நடை நிலையத்திற்கு என்ற அளவில், 32 கால்நடை நிலையங்களுக்கு தலா ஒரு நுண்ணலை நுண்ணாய்வுக் கருவியும், ஒரு கணினி மயமாக்கப்பட்ட ஊடுகதிர் கருவியும், 8 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் தற்போது 6 மாநகராட்சிகளில் கால்நடை பன்முக மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையங்களை பிற மாநகராட்சிகளிலும் ஏற்படுத்தும் நோக்கோடு திண்டுக்கல், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கால்நடை நிலையம் கால்நடை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இந்த பன்முக மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சைக் கூடம், உள்நோய் சிகிச்சை வசதி, நுண்ணலை நுண்ணாய்வுக் கருவி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ஊடுகதிர் கருவி போன்ற வசதிகள் 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். அவை 24 மணி நேரமும் செயல்படும்.

    தமிழ்நாட்டில் தற்போது 26 கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் 32 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மேலும் 2 புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள், 2 கோடி ரூபாய் செலவில் நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தோற்றுவிக்கப்படும்.

    கோமாரி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்டங்களில் 93.89 லட்சம் மாட்டினங்களுக்கு 15வது மற்றும் 16வது சுற்று தடுப்பூசிப்பணி முறையே செப்டம்பர், 2018 மற்றும் மார்ச், 2019 ஆகிய மாதங்களில் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

    தமிழ்நாட்டில் நாட்டுக் கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்புத் தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் 38,500 பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள், 25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தற்போது 280 மாணவர்கள் பயிலுகிறார்கள். இம்மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளாக கூடுதல் வகுப்பறைகள், தேர்வு அறைகள், விடுதி வசதிகள் மற்றும் எச்.டி. மின்சக்தி ஆகிய பணிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும், தலா 14 கோடி ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly  #EdappadiPalanisamy
    ×