search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெசவாளர்கள் வாழ்வு உயர அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
    X

    நெசவாளர்கள் வாழ்வு உயர அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisamy
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் அண்ணல் காந்தியடிகளின் 150-வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் இந்த நன்நாளில், நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, காந்தியடிகள் அறிவுறுத்தியவாறு, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகளை மக்கள் அனைவரும் அணிந்து, கதர் துணிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்.

    கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால், நவீன நாகரீகத்திற்கு ஏற்றவாறு புத்தம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புறக்கை வினைஞர்களால் புதிய யுக்திகளுடன் தயாரிக்கப்படும் பலதரப்பட்ட கண்கவர் கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள 88 கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



    மேலும், கதர் துணிகளின் விற்பனையை ஊக்குவித்திட, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் அனைத்து கதர் ரகங்களும் 30 சதவிகிதம் தள்ளுபடி விலையில் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட, அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, கதர் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக நூற்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து/ இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை வழங்கு தல், 2017-2018 ஆம் நிதியாண்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 587 நூற்பாளர்கள் மற்றும் 50 நெசவாளர்களுக்கு ராட்டைகள் மற்றும் தறிகளை இலவசமாக வழங்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தல், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கு 4 கோடி ரூபாயும், சர்வோதய சங்கங்களுக்கு 30 கோடி ரூபாயும் நடப்பாண்டில் தள்ளுபடி மானியமாக நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கிராமப்புற ஏழை எளிய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் கதர் ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்திட வேண்டுமென, மக்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisamy
    Next Story
    ×