search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தால் பரபரப்பு.
    • விமானம் தரையிறங்கிய போது, டயர் வெடித்தது.

    மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தை தரையிறக்கிய போது, அதன் டயர் திடீரென வெடித்தது.

    டயர் வெடித்த நிலையிலும், விமான சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டயர் வெடித்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து பயணிகளும் நகரின் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    • இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
    • விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 8-ந் தேதி வரை சென்னை சர்வதேச விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 வரை மூடப்படும். நாளை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 3-ந் தேதி காலை 10.45 மணி முதல் காலை 11 மணி வரையிலும், 4-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 5-ந் தேதி பகல் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரையிலும், 6-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணி முதல் 11 மணி வரையிலும் விமான ஓடுபாதை மூடப்படும். இந்த மாற்றங்களுக்கு பயணிகளின் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலா. இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்றிரவு பணிக்கு வந்துள்ளார். இன்று காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    • விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள் செயல்பாட்டில் உள்ளன. அதில் முதல் ஓடுபாதை 3.66 கிலோமீட்டர் நீளமும், 2-வது ஓடுபாதை 2.89 கிலோ மீட்டர் நீளமும் உடையது.

    இதில் பிரதான ஓடுபாதையான முதல் பாதையில் பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்பட்டு வருகின்றன. 2-வது ஓடுபாதையில் ஏ.டி.ஆர். எனப்படும் 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள், மற்றும் தனியாரின், தனி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் 2 ஓடு பாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு வசதியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடுபாதையில் இருந்து, மற்றொரு ஓடுபாதைக்கு செல்ல, "டாக்சி வே"என்ற இணைப்புப் பாதைகள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த டாக்சி வே "பி" என்ற "பிராவோ"முதல் ஓடு பாதைக்கு நேராக செல்லாமல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது. இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில், வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த டாக்சிவே 'பி' யை, நேர்படுத்தும் பணிகள் நடந்தன.

    தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனால் தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், இரண்டு ஓடுபாதைகளும் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளன.

    இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதையிலும் விமான சேவைகளின் எண்ணிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த பாதையில் 615 விமானங்கள் இயக்கப்பட்டன.

    ஆனால் இந்த ஜூன் மாதத்தில் 952 விமானங்களாக அதிகரித்துள்ளன. வரும் மாதங்களில் 2-வது ஓடுபாதையில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படும் எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு மணி நேரத்தில், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதனால் சென்னை விமான நிலையத்தில், இயக்கப்பட்டு வரும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க இருப்பதோடு, விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவதில் தாமதங்கள் ஏற்படாமல், விமானங்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • குரங்கம்மை குறித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதனை
    • யாருக்காவது அறிகுறி இருப்பது தெரிய வந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும்.

    ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் குரங்கம்மை தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் குரங்கம்மை தொற்று நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை. ஆனாலும் பொது சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம், துறைமுகங்களில் குரங்கம்மை நோய் குறித்த தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. குரங்கம்மை குறித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுகிறது.

    விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு ஏற்பாட்டை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் இன்று ஆய்வு செய்தார். டாக்டர் குழு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து அறிகுறி இருந்தால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் தற்காப்பு கவச உடை அணிந்து ஊழியர்களுடன் தேவை ஏற்படின் பயணித் திட ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி, மதுரை, திருச்சி, கோவையில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அைமக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை கண்டறியும் வசதி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பரிசோதனைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

    யாருக்காவது அறிகுறி இருப்பது தெரிய வந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், இ.கருணாநிதி எம்.எல்.ஏ., இயக்குனர் செல்வ விநாயகம், சங்கு மணி மற்றும் விமான நிலைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • மற்றொரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி 1,200 இ-சிகரெட்டுகளை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னைக்கு பல்வேறு விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் கண்காணித்தனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டபோது அதில் தங்க நாணயத்தில் வெள்ளி மூலாம் பூசப்பட்டு கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 781 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த 2 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த செந்தூர் என்பவர் கையில் தங்க வளையம், விரலில் மோதிரம், மற்றும் கழுத்தில் தங்கச் செயினை அதிக அளவு அணிந்து வந்திருந்தார். அதிகாரிகள் சோதனை செய்தபோது அந்த நகைகள் 24 கேரட் சுத்த தங்கம் என்பது தெரியவந்தது . சுத்த தங்கத்தை கடத்துவதற்காக அவர் ஆபரணம் போல் உருவாக்கி அணிந்து வந்துள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் 497 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.

    சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது உடமைக்குள் மறைத்து கடத்தி வந்த 366 கிராம் தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 21 லட்சம் ஆகும். துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி 1,200 இ-சிகரெட்டுகளை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 30 லட்சம்.

    சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம், இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 5 பேர் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் கடத்தி வந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.
    • சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல்.

    சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.

    வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுக்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்தது.

    இந்நிலையில், சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலையில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவருக்கு சம்மன் அனுப்பி சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
    • இன்று மதியதிற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மைக்ரோசாப்ட்டின் 'விண்டோஸ்' மென்பொருளை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' மென்பொருள் இயங்குதளத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் அந்த மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின.

    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்டது. இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. எனினும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எந்த பாதிப்பும் இல்லை. 'கிரவுட்ஸ்டிரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கோளாறு காரணமாக, இணைய பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான 'கிரவுட்ஸ்ட்ரைக்'கை அப்டேட் செய்தவர்களின் கணினி மற்றும் மடிக்கணினிகள் முடங்கியதாக தெரிகிறது. 'மைக்ரோசாப்ட் 365' என்ற செயலியும் முடங்கியது. அவர்களது கம்ப்யூட்டர் திரையில், 'புளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என்ற வாசகம் ஒளிர்ந்தது. இதனால் பயனாளர்கள் குழப்பம் அடைந்தனர். ஐ.டி. ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்தனர்.

    மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில், யுனைடெட், அமெரிக்கன், டெல்டா ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. இதனால் அச்சேவைகள் கைகளால் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு காரணமாக இன்று 2-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் 2-வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்று தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல் விட்டுவிட்டு வருவதால் இன்றும் பாதிப்புக்கப்பட்டுள்ளது என்றும் இன்று மதியதிற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, மைக்ரோசாஃப்ட் பிரச்சனைக்கு தீர்வு காண விரைவாக பணியாற்றி வருகிறோம். நெருக்கடிகளுக்கு CrowdStrike மற்றும் தொழில்துறையினர் தீவிரமாக பணிபுரிகின்றனர். வாடிக்கையாளர்களின் கணினிகள் பாதுகாப்பாக மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்.

    • சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.
    • பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விமான முன்பதிவு மற்றும் பணத்தை திரும்ப வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொருத்தவரையில், மைக்ரோசாப்ட் சேவை முடங்கிய விவகாரத்தால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படும் என்றும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பெங்களூரு விமான நிலையத்தின் முணையம்-1ல் இருந்து புறப்பட வேண்டிய 90 சதவீத விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    விமான சேவை பாதிப்பு, நள்ளிரவு வரை தொடர வாய்ப்புள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    • விமான நிலைய அதிகாரிகள் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்து வருகின்றனர்.
    • போர்டிங் பாஸ்கள் கொடுக்க தாமதமானதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மைக்ரோசாப்ட் சேவை முடங்கிய விவகாரத்தால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது.

    பிற்பகல் 12 மணியில் இருந்து சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை திடீரென முடங்கியுள்ளது.

    இணையதளம் சரியாக வேலை செய்யாததால் கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால், விமான நிலைய அதிகாரிகள் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்து வருகின்றனர்.

    போர்டிங் பாஸ்கள் கொடுக்க தாமதமானதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    • பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.

    ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • வாரத்தில் வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும்.
    • விமானத்தின் பயணநேரம் 3 மணி 46 நிமிடங்கள்.

    ஆலந்தூர்:

    ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை இதுவரையில், ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே நடத்தி வந்தது.

    ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலை மற்றும் மாலை விமான சேவை வீதம், தினமும் இரண்டு விமான சேவைகளை, மஸ்கட்- சென்னை- மஸ்கட் இடையே, இயக்கி வருகிறது.

    இது தவிர மற்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவைகளை நடத்தாமல், சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு விமான சேவைகளை இயக்கி வருகின்றன.

    ஆனால் பயணிகள் நேரடி விமானத்தில் பயணம் செய்யவே விரும்புவதால், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் எப்போதும் நிரம்பி வழிகிறது. அதில் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்தது.

    அதோடு பாரீஸ், லண்டன், பிராங்பார்ட் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு, இணைப்பு விமானங்களும், மஸ்கட்டில் இருந்து இருப்பதால், மஸ்கட்-சென்னை- மஸ்கட் விமானங்களில், எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள, சலாம் ஏர் விமான நிறுவனம், மஸ்கட்- சென்னை-மஸ்கட் இடையே, புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

    வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும், இந்த சலாம் ஏர் விமானம், மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு, மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.

    இன்று முதல் நாளில் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமா னத்தில் 179 பயணிகளும், சென்னையில் இருந்து மஸ்கட் சென்ற விமானத்தில் 142 பயணிகளும் சென்றனர்.

    இந்த விமானத்தின் பயணநேரம் 3 மணி 46 நிமிடங்கள். இப்போது வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப் படும் இந்த விமான சேவைகள், பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினமும் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து மஸ்கட்டிற்கு கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதே நேரத்தில் வாரத்தில் இரண்டு தினங்கள் இயக்கப்படும் இந்த சலாம் ஏர் விமான சேவைகள், தினசரி சேவைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×