என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"டிட்வா புயல்" எதிரொலி: ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்
- 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை- மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் ர ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது.
இதேபோல், சென்னை- திருச்சி இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.55,626 வரை உயர்ந்துள்ளது. சென்னை- கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,351-ல் இருந்து ரூ.24,134 வரை உயர்ந்துள்ளது.






