search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation"

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

    இங்குள்ள அம்மா உணவகத்தில், 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை யும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப் படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெருஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகி களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 20 நாட்களாக நடைபெற்றது.

    இப்போராட்டத்தில் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த ஜிவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும்போது, போராட்டத்தை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி தீர்ப்பு வரஉள்ளது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.

    அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    • என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
    • நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி.2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பூவுலக நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் அதிக அளவு பாதரசம், செலினியம் மற்றும் புளோரைடு இருப்பது தெரியவந்தது. வடக்கு வேலூர் தொல்காப்பியர் நகரில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு நீரில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கபட்ட வரம்பை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் குடிநீரில் அதிகஅளவு கொந்தளிப்பு மற்றும் செலினியம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பொதுமக்களுக்கு சீறுநீரக பிரச்சனைகள், சுவாச மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி தூசி மற்றும் சாம்பலின் மாசுபாடுகள் வீடுகளில் இருப்பதை ஆய்வு கண்டிறியப்பட்டுள்ளது.

    கரிக்குப்ப கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மாசுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உள்ளுர் நீர்நிலைகளில் சாம்பலை கொட்டுவதை நிறுத்தவும் சாம்பலை எடுத்து செல்லும் ஓடைகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. பகுதிகளில் குடியிருப்போருக்கு வருடத்திற்கு 2 முறை இலவச சுகாராத முகாம் நடத்த வேண்டும். சுகாதார பிரச்சனைகள் உள்ள கிராமங்களை என்.எல்.சி. பொதுமருத்துவமனை கண்காணிக்க வேண்டும். நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மண் வாழ்வியலாளர் சுல்தான் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    • கழிவுநீர் நெல் வயல்களில் புகுந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
    • சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் கிராமம் உள்ளது. முற்றிலும் நெல் விவசாயம் நடைபெறும் கிராமம் இது. இந்த கிராமத்தில் இருந்து வரகூர் செல்லும் தார் சாலையில் ஓரத்தில் விவசாய விளைநிலங்களுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர் அதன் அருகில் உள்ள நெல் வயல்களில் புகுந்து விடுவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயி தெரிவிக்கின்றார்.

    எனவே கண்டமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் வாய்க்காலை பார்வையிட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது.
    • வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு நீர் செல்கிறது. மேலும் குறிப்பாக இந்த வீராணம் ஏரியிலிருந்து சென்னை வாழ்மக்கள் குடிநீருக்காக தினமும் தண்ணீர் செல்கிறது. 

    தற்போது கோடை வெயில் முடிந்த நிலையிலும் குறையாத வெப்பத்தின் தாக்கத்தால் வீராணம் ஏரியில் நீர் குறைந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் ஏரியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிருந்து சென்னை குடிநீருக்கு ஒரு நாளைக்கு அதிகமான கனஅடி அளவு தண்ணீர் அனுப்பப்பட்ட நிலையில் தண்ணீர் குறைந்து வரும் காரணத்தால் தற்போது குறைந்த அளவு தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியில் ஒருசில இடங்களில் மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் சென்னைக்கு அனுப்பும் குடிநீர் சுகாதாரமாக அனுப்பப்படுகிறதா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. ஏரியின் கரையோரங்களில் சேரும் சகதியுமாக காணப்பட்டு துர்நாற்றம் வீசிகின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.
    • நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வெங்காய தோப்பு உள் ளிட்ட பகுதிகளில் சிலர் பண்ணை வைத்து பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர்.

     இதனால் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பன் றிகள் சுற்றி திரிவதால் துர் நாற்றம் வீசி, பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. மேலும் சுகதார சீர்கேடு ஏற்படுவதுடன் குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நேதாஜி நகர் பன்றிகள் கூடாரமாகமாறியுள்ளது.

    இதுசம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. விடம் பன்றிகளை அப்புறப்ப டுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

     அதன்பேரில் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை நகராட்சி ஆணை யர் சிவக்குமாரை நேரில் சந்தித்து பொது இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தார்.

    தொடர்ந்து நேதாஜி நகர் அவ்வை தோட்டத் தில் கல்யாண மண்டபம் கட்டும் பணி, குபேர் மண் டபம் கட்டமைப்பு பணி, சின்ன மணிகூண்டு புதுப் பித்தல் பணியை விரை வாக தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு ஆணையர் நடவ டிக்கை எடுப்பதாக உறு தியளித்தார்.

    அப்போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள் ஆகியவைகளில் இருந்து குப்பைகள், மற்றும் கழிவுகளை ரோட்டு ஓரங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இப்பகுதியை சேர்ந்த அனைத்து குப்பைகளும் தினசரி இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதால் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி யும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.

    • 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
    • 18 உறுப்பினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருமுருகன்பூண்டி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளிலும் நிலவும் குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காணப்படாமல் உள்ளதாகவும், குழாய் உடைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்து, நகராட்சியில் தூய்மைப் பணியை தனியாா்மயமாக்குவது குறித்த தீா்மானத்தை நிறைவேற்றுவது குறித்து மன்றத்தில் பொருள் வாசிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி துணைத் தலைவா் ராஜேஸ்வரி உள்பட அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் என மொத்தம் 18 போ் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

    இதற்கு 13-வது வாா்டு உறுப்பினரும், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவருமான லதா சேகா் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் தீா்மானம் நிறைவேற்றலாம் என்பதற்கான அரசு ஆணையை வழங்குமாறு ஆணையரிடம் கேட்டனா்.இதையடுத்து, அதற்கான அரசு ஆணையை வழங்க முடியாது என அவா் தெரிவித்தாா். இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உறுப்பினா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து தூய்மைப் பணியை தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை ஆணையா் ஒத்திவைத்தாா்.

    17வது வாா்டு ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது பகுதியில் நிலவும் சாக்கடை பிரச்னை தொடா்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஆணையரை முற்றுகையிட்டனா். இதையடுத்து பு ஆய்வு மேற்கொள்வதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

    • தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
    • 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 14 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வீடுகள், கடைகள், பின்னலாடை தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏறத்தாழ 600 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டில் தனியார் நிறுவனம் மற்றும் மீதமுள்ள வார்டுகளில் மாநகராட்சி துாய்மை பணியாளர் வாயிலாகவும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உள்ளாட்சி பகுதிகளில் தூய்மை பணிகளை தனியார் வெளிச்சந்தை முறையில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில், 60 வார்டுகளிலும் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி தினமும் 573.55 மெட்ரிக் டன் குப்பை அகற்ற டன்னுக்கு 3,860 ரூபாய் என்ற அடிப்படையில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக தினமும், 22.16 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 96 கோடி ரூபாய் தூய்மைப் பணிக்கு செலவிடப்படும். மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து அதனை முறைப்படி கையாள வேண்டும்.

    மாநகராட்சியை பொருத்தவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையாக தனியார் மயமாக்கப்படும் நிலையில் இந்த வாகனங்கள் அனைத்தும் வாடகை அடிப்படையில் அதே நிறுவனத்துக்கு வழங்கப்படும்.பேட்டரி வாகனங்கள், 80 இலகு ரக வாகனம், 7 கனரக வாகனம், 12 காம்பாக்டர் மற்றும் 1,099 குப்பை தொட்டிகளும் அந்நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கான வாடகை தினமும் 95,285 ரூபாய் பில்லில் பிடித்தம் செய்யப்படும்.இப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் 1.71 லட்சம் வீடுகளில் நேரடியாக பேட்டரி வாகனங்கள் மூலமும், 1.14 லட்சம் வீடுகளில் இலகு ரக வாகனம் மூலமும் குப்பைகளை தரம் பிரித்துப் பெற்று செயலாக்க மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவர்.

    இதுதவிர 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள், 9,500 பெரிய நிறுவனங்களில் கழிவு சேகரிப்பர். பிரதான ரோடுகள் 688 கி.மீ., மற்றும் 19 கி.மீ., தெருக்களிலும் தூய்மைப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் மேற்கொள்ளஉள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பகுதி வாரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை தினமும் வழங்கப்படுகிறது. இதுதவிர 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் நடக்கிறது.

    தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- இரண்டாவது குடிநீர் திட்டத்தில் 2 கோடி லிட்டர், 3 வது குடிநீர் திட்டத்தில் 10 கோடி லிட்டர் என்ற அளவில் தற்போது குடிநீர் பெற்று வழங்கப்படுகிறது. தற்போது 4வது குடிநீர் திட்டத்தில் சோதனையோட்டத்தில் கடந்த வாரம் வரை 46 கோடி லிட்டர் பெற்று வழங்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் பெருமளவு சோதனையோட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது அங்குள்ள 18 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் நிரப்பி, திட்டம் செயல்படும் விதமாக குடிநீர் சப்ளை துவங்கப்பட்டு விட்டது. அவ்வகையில் தற்போது சராசரியாக தினமும், 5 கோடி லிட்டர் என்றளவில் குடிநீர் வினியோகமாகிறது.

    அவ்வகையில் இதற்கு முன் சப்ளை செய்யப்பட்ட 2 மற்றும் 3வது குடிநீர் திட்டங்களின் குடிநீர் தெற்கு பகுதிக்கு வழங்கப்படும். இதுதவிர தெற்கு பகுதியில் கட்டி முடித்து தயார் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு அடுத்த கட்டமாக வெள்ளோட்டம் நடத்தி குடிநீர் வழங்கப்படும்.அனைத்து வார்டுகளிலும் பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு மோட்டார்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலான கிணறுகள் அமைக்க கவுன்சிலர்களிடம் விவரம் பெறப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி மேற்கொள்ளப்படும்.குழாய் சேதம், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் உடனடியாக குடிநீர் வழங்கும் விதமாக 18 லாரிகள் பயன்பாட்டில் உள்ளன.மாநகராட்சி பகுதியில் குழாய் சேதம் போன்ற காரணங்களால் குடிநீர் வீணாவது மற்றும் வினியோகம் தடைப்படுவது போன்றவை தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×