search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்வார் நகரில் உள்ள தண்டேலியின் காளி ஆற்றில் குளித்தபோது விபரீதம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம், உத்தரகனடா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த 6 பேரும், ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    விடுமுறையை கொண்டாட, உத்தர கனடா மாவட்டத்தின் கார்வார் நகரில் உள்ள தண்டேலியின் காளி ஆற்றில் குளித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, ஒருவர் பின் ஒருவராக நீரில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த 6 பேரில் 4 பேர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாகிஸ்தானில் பெய்த கனமழையால் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
    • மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 82 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.

    மழையால் நாடு முழுவதும் 2,715 வீடுகள் சேதமடைந்துள்ளன. கட்டுமான இடிபாடுகள், மின்னல் தாக்குதல் மற்றும் திடீர் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் பெரும்பாலான மக்கள் இறந்ததாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெரும்பாலான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெய்த கனமழையால் 11 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    அண்மையில் பெய்த கனமழையால் உயிர்கள் மற்றும் உடைமைகள் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், மழை மற்றும் நிலச்சரிவால் மூடப்பட்ட சாலைகளைத் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக நேற்று வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் ஏப்ரல் 22 வரை தொடர்ந்து மழை நீடிக்கும் என்று கணித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் மழை நாட்டின் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

    காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

    இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

    தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
    • கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானின் ஹப் மாவட்டத்தில் ஷா நூரானி சன்னதிக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்ததாக பலோசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பலோசிஸ்தானின் குஜ்தார் மாவட்டத்தில் உள்ள ஷா நூரானி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது, தட்டாவிலிருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக், ஹப் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கராச்சியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள தொலைதூர மலைப்பகுதியில் ஷா நூரானி ஆலயம் அமைந்துள்ளது.

    இதற்கிடையில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து, பலோசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி, படுகாயமடைந்தவர்களை கராச்சிக்கு மாற்ற சிந்து அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    • விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    • உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி பகுதியில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து துர்க் மாவட்ட ஆட்சியர் ரிச்சா பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், " துர்க்கில், தொழிலாளர்களுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் கும்ஹாரி அருகே ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில், 12 நபர்கள் இறந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் 12 பேர் பரிந்துரைக்கப்பட்டு எய்ம்ஸ் (ராய்ப்பூர்) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள இருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது சீரான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறோம்.

    விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சத்தீஸ்கர் மாநிலம் துர்கில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்படுகிறது.

    தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படம் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில்," படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பலியானவர்களில் பல குழந்தைகளும் உள்ளடங்குவர். சம்பவ இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக தேடும் பணி கடினமாக உள்ளது.

    காலரா பற்றிய தவறான தகவல் பரவியதை அடுத்து, அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பெரும்பாலான பயணிகள் படகு மூலம் தப்பிக்க முயன்றனர்" என்றார்.

    படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
    • புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாக பிரேசில் உள்ளது. இங்குள்ள, ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியது. இதனால் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    இங்குள்ள மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமானது.

    ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பிரேசிலை புரட்டி போட்ட இந்த புயல் மழைக்கு இதுவரை 20 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிந்த வீடுகளில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

    மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 16 மணி நேரத்துக்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

    ஆனால், அந்த சிறுமியின் தந்தை அவர் அருகிலேயே இறந்து கிடந்தார். மகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் தான் பலர் இறந்துள்ளனர்.

    • உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீ விபத்து.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில், பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்றபோது, பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், பேருந்துக்குள் இருந்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு.
    • உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சாந்தன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், அவரது உடல்நிலை மாரடைப்பால் மோசமானது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

    சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உரிய சான்றிதழ்களை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 4 ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியதை அடுத்து, வரும் மார்ச் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
    • பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.

    தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • நண்பரிடமிருந்து ஷேக் முஸமில் அகமது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முஸமில் அகமது (வயது 25). இவர் கனடா நாட்டில் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டி கோனெஸ்டோகா கல்லூரியில் முதுகலை ஐ.டி. படித்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷேக் முஸம்மில் அகமது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு அவரது மாமாவும், தெலுங்கானா மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சி தலைவரான அம்ஜத் உல்லா கான் 'எக்ஸ்' இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் , இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் மாணவனின் உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×