என் மலர்
இந்தியா

எர்ணாகுளம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு
- 2 குளிர்சாதன பெட்டிகளில் தீப்பற்றியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- எக்ஸ்பிரஸ் ரெயிலின் B1, M1 பெட்டிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
ஜார்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் டாடா நகர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் துவ்வாடா அருகே வந்தபோது ரெயிலின் பேன்ட்ரி காருக்கு அருகில் இருந்த பி1 மற்றும் எம்2 ஏசி பெட்டிகளில் புகை வந்தது,
இதனை கவனித்த லோகோ பைலட்டுகள் உடனடியாக ரெயிலை எலமஞ்சிலி ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தினர். புகை தீயாக மாறியது. அதில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
இந்த சம்பவத்தில் பி1 பெட்டியில் இருந்த ஒருவர் உயிருடன் எரிந்து உயிரிழந்தார். இறந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த சந்திரசேகர் சுந்தர் (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து காரணமாக, எலமஞ்சிலி ரெயில் நிலையம் புகையால் நிரம்பியது.
அனகப்பள்ளி எலமஞ்சிலி மற்றும் நக்கப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். 2 பெட்டிகளிலும் இருந்த பயணிகளின் அனைத்து உடமைகளும் எரிந்தன.
மூத்த ரெயில்வே அதிகாரிகள் நிலையத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. சுமார் 2000 பயணிகள் குளிரில் ரெயில் நிலையத்தில் சிக்கித் தவித்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஜயவாடா வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
அதிகாலை 3.30 மணிக்குப் பிறகு எரிந்த 2 பெட்டிகளையும் ரெயில்வே அதிகாரிகள் அகற்றினர். பயணிகளை மற்ற பெட்டிகளுக்கு மாற்றி ரெயிலை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
இந்த விபத்து காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில ரெயில்கள் விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மற்றும் துனி நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






