என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரியில் மினி டெம்போ மோதி கணவன்-மனைவி பலி
- கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
- தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள்.
கன்னியாகுமரி:
ஆந்திர மாநிலம் அதலாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்யநாராயணா (வயது62). இவரது மனைவி ரமா (வயது 60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.
இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். இதில் கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது அந்த வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த டெம்போ இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவரின் உடலும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






