search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "livestock"

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினர்.
    • ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடை துறை உதவி இயக்குநர் கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஒன்பத்துவேலி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மதியழகன் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் உதவி மருத்துவர்கள் ரகுநாத். சௌந்தரராஜன் ஆகியோர் விளக்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் கால்நடை வளர்ப்போர் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் செய்து இருந்தனர்.

    • ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    உடன்குடி:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி அருகே உள்ள ஞானியார்குடியிருப்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் தற்காலிக மலட்டுத்தன்மை நீக்குதல், குடற்புழு நீக்குதல், ஆண்மை நீக்கம்செய்தல், சினைப் பரிசோதனை, கருவூட்டல் செய்தல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமில் ஊராட்சித்தலைவர் காமராஜ், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் செல்வகுமார், கால்நடை டாக்டர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.
    • முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.

    அதன்படி 2023-24-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.

    முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்து வர்களால் அறிவிக்கப்படும். அந்த நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்

    நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவம் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் லாரன்ஸ், பூபதி, ராதா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கால்நடை உதவி மருத்துவர் கமலப்பட்டு வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால், கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
    • 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். முகாமில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களிலிருந்து பாது காப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 நபர்களுக்கும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பு விவசாயி 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் தலதா, துணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் மோகன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் .வேல்முருகன், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, சிவா, சதானந்தன், சந்திரன், உஷாநந்தினி, கோவிந்தசாமி, சந்தியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் குருகாட்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். முகாமில் தூத்துக்குடி மண்டல கால்நடை இணை இயக்குனர் சஞ்சீவி ராயன், திருச்செந்தூர் கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் செல்வகுமார், ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவை அறக்கட்டளை சார்பில் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு நடத்தினர்.

    • இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
    • எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    குடிமங்கலம்:

    குடிமங்கலத்தையடுத்த கோட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டத்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி வெறிநாய்களால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறுவதாக எண்ணி வந்த நிலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் நேரில் பார்த்தவர்கள் மூலம் நாய்கள் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபடுகின்றன என்று உறுதிப்படுத்தினர்.இதனால் வனத்துறையினர் இந்த பிரச்சினையிலிருந்து விலகி விட்டனர். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் என்று தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்போதும் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் கடித்து குதறப்படும்போது ஏன் சத்தம் கேட்பதில்லை. காட்டு விலங்குகள் போல நாய்களும் சத்தமெழும்பாத வகையில் மூச்சுக் குழாயை கடித்து வேட்டையாடுமா? . கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள்தானா? அல்லது ஏதேனும் வேட்டை விலங்குகளா என்பதை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு குழந்தைகள் இலக்காகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று விவசாயிகள் கூறினர்.

    • 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்.
    • கால்நடை சேதம் ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் தென்மேற்கு பருவமழை - 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசி யதாவது பேசியதாவது:-

    தென்மேற்கு பருவமழையையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்.

    அனைத்து தகவல் தொடா்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளா்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.

    கலெக்டர் அலுவலகத்தில் கட்ட ணமில்லா தொலைபேசி அமைக்க வேண்டும். வருவாய்த் துறையினா் தலைமையில் மண்டல அளவிலான குழுக்களை நியமிக்க வேண்டும்.

    ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும்.ன

    அனைத்து துறை அலுவலா்களும் பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும், நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும், உயிா்சேதம், கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி) , ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவை நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள் வழங்கினார்.

    மன்னார்குடி:

    ரோட்டரி மாவட்ட அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளிக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் கால்நடைகளுக்கு அன்னதானம் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்குதல், கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவைகள் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் உதவி ஆளுநர் டாக்டர் பாலகிருஷ்ணன் தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள்வழங்கினார். திட்ட இயக்குனர் ரமேஷ், செயலர் அன்பழகன், மண்டல செயலர் ரெங்கையன், ஹரிரவி, முன்னாள் தலைவர்கள் நடராஜன், சாந்தகுமார், தளிக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் ரமணி, குமுதம். சங்க செயலர் சாரதா, சுமதி, அசோக்குமார், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் இறங்கி செல்பி எடுக்க கூடாது.
    • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபட கூடாது.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுக்க கூடாது.

    நீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.
    • முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய மனுவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களில் பாதி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.சர்வே துறையில் அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.

    முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க., சார்பில் வழங்கிய மனுவில், கபூர்கான் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு சார்பில், கணக்கம்பாளையம், கணேசபுரம் பகுதியில் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

    மேலும் சின்ன வீரம்பட்டி பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர கடையாக மாற்றவும், இந்திராநகரில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.உடுமலை, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, அய்யம்பாளையம், மடத்துக்குளம் தாலுகா, தாந்தோணி, மைவாடி, ராஜாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டாக மர்ம விலங்குகள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துள்ளன. பெருமளவு விவசாயிகள் பாதித்துள்ள நிலையில் இதற்கு தீர்வு காணவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

    ×