search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனிக்காலத்தில் கால்நடைகளை  பாதுகாக்கும் வழிமுறைகள்
    X
    கோப்புபடம்.

    பனிக்காலத்தில் கால்நடைகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

    • வெயில் தோன்றும் வரை கால்நடைகளை தோட்டம் மற்றும் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் வெயில் தோன்றிய பின்னரே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

    உடுமலை :

    தற்போது பனிக்காலம் என்பதால் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் காலை 8 மணி வரை குளிர் நிலவுகிறது.இதனால் அதிகாலையில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சில பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதால் அவற்றை அருகில் உள்ள மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் வெயில் தோன்றும் வரை கால்நடைகளை தோட்டம் மற்றும் திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- குளிரில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதன் வாயிலாக பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்.குறிப்பாக கோழிகளுக்கு மழை, குளிர் காலங்களில் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கப்படும் என்பதால் 4 மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும்.ஆடுகளை திறந்த வெளி பட்டியில் அடைக்காமல் கூரை அல்லது நான்கு புறமும் பனிச்சாரல் வீசாத வகையில் தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாக்க வேண்டும்.மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் வெயில் தோன்றிய பின்னரே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்ட இன்றைய நிலையில் கால்நடைகளுக்கான தீவனச்செலவு என்பது மிக அதிகமாக உள்ளது. வருவாயில் பெரும்பகுதியை தீவனங்களுக்கே செலவழிக்கும் நிலையிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து அள்ள அள்ளக்குறையாத ஆரோக்கிய தீவனத்தை வழங்கக் கூடிய அட்சய பாத்திரமாக அசோலா உள்ளது. பெரிய முதலீடு இல்லாமல் தொடங்கக் கூடிய தீவன உற்பத்தித் தொழிற்சாலை என்று அசோலாவை சொல்லலாம்.

    நிழலான பகுதியில் 2 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையாக அடுக்கி தொட்டி போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்க வேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். இந்த தொட்டிக்குள் ஒரு கிலோ பசும் சாணியையும், 20 கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும்.தொட்டியின் உள்பகுதியில் 10 செ.மீ உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் ஊற்றி அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும்.

    இதனையடுத்து 10 முதல் 15 நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம். மேலும் 5 நாட்களுக்கு ஒருமுறை 10 கிராம் சூப்பர் பாஸ்பேட், அரை கிலோ சாணத்தை கரைத்து அந்த தொட்டியில் ஊற்ற வேண்டும்.இதனால் தொடர்ச்சியாக சீரான அளவில் அசோலா அறுவடை செய்ய முடியும். இவ்வாறு அசோலா உற்பத்தி செய்வதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.1-க்கும் குறைவாகவே செலவு பிடிக்கும். அதேநேரத்தில் கறவை மாடுகளுக்கு அதிக பால் உற்பத்தி, ஆடுகளுக்கு அதிக இறைச்சி, கோழிகளுக்கு அதிக இறைச்சி மற்றும் சத்தான முட்டை உற்பத்திக்கும் அசோலா கைகொடுக்கிறது.

    இதுதவிர மீன், பன்றி, முயல் போன்றவற்றுக்கும் அசோலா சிறந்த உணவாக இருக்கும்.மனிதர்களும் வடை, போண்டா போன்ற உணவுப் பண்டங்களில் அசோலாவை கீரை போன்று பயன்படுத்தலாம்.அசோலா வளர்க்கும் இடங்களில் கொசுத் தொல்லை குறைவாக இருக்கும் என்பதால் கொட்டகைக்கு அருகிலேயே நிழற்பாங்கான இடத்தில் அசோலா தொட்டிகளை அமைக்கலாம். நெல் வயலில் தேங்கியிருக்கும் நீரில் அசோலா பயிரிடுவதால் சிறந்த நுண்ணுயிர் உரமாக செயல்படுகிறது.

    மேலும் தண்ணீர் ஆவியாவதைக் குறைப்பதுடன் களையைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலுக்கு உதவுகிறது.கறவை மாடுகளுக்கு தினசரி 1.5 கிலோ முதல் 2 கிலோ வரையும், கறிக்கோழிகளுக்கு 20-30 கிராமும், ஆடுகளுக்கு 300-500 கிராமும் அசோலா உணவாகக் கொடுக்கலாம். கால்நடைகளுக்கு அதிக பால், இறைச்சி, முட்டை உற்பத்தி மட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய அற்புத உணவாக அசோலா உள்ளது.


    Next Story
    ×