search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது
    • இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் - பாஜகவின் மாநில முன்னாள் தலைவரும் மகளிருமான டாக்டர் தமிழிசை அவர்கள் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

    இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண்குழந்தைகள் நலம் என மேடை தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து கொக்கரித்து வரும் பாஜக கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில், அதுவும் மூச்சு முந்நூறு முறை பா.ஜ.க.வில் பெண்ணுரிமை" கூவும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை ஆளுநராக உள்ள மாநிலத்தில், உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு அவலம்- அதுவும் பெண் சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

    இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா..? என கேட்கிறேன். அத்துடன், 'உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மைதான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, பாஜக ஆளும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கம் திரும்பி காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் மோடி அவர்கள், இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் பிரதமர் மோடி அவர்கள் துவக்கிய 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித்தனமான கொலையையும் பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜக ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங் கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்

    • புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.
    • மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.

    மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர்.
    • 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது.

    தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். நன்னடத்தை விதிகள் அமலாகிவிட்டால் புதிய திட்டங்கள், பணிகளை செயல்படுத்த முடியாது.

    ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களையும், தொடங்கிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

    இதனால் பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்திலிருந்தே புதுச்சேரி அரசு பல்வேறு புதிய பணிகளை தொடங்கி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளிலும் தார்சாலை, சிமெண்டு சாலை, ஆழ்குழாய் கிணறு, சைடு வாய்க்கால் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜைகள் நடக்கிறது.

    அதோடு அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை, பதவி உயர்வு ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர். சமீபத்தில் பி.ஆர்.டி.சி.க்கு வாங்கப்பட்ட புதிய பஸ்களில் 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

    இந்த நிலையில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களுக்கு நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 1-ந் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. மொத்தம் 144 பேர் சான்றிதழ்கள் சமர்பித்தனர்.

    இதில் முதல்கட்டமாக 92 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இவர்களுக்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று இரவு 9 மணியளவில் சட்டசபை வளாகத்தில் நடந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தேர்வானவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் கணவர், கைகுழந்தையோடு பணி ஆணையை பெற்றுச் சென்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பணி ஆணை வழங்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மீதமுள்ள 52 பேருக்கும் புதுப்பிக்கப்பட்ட உரிய சான்றிதழ்களை சமர்பித்து பணி ஆணை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.

    ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அல்லது தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என தெரியாத நிலையில் கிராமப்புற பகுதிகளில் தாமரை சின்னம் வரைந்து, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களை பிரசுரித்தும் வாக்களிப்போம் தாமரைக்கே எனவும் அச்சிட்டிருந்தனர்.

    மேலும் சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய போது, தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்ற வரிகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

    இது கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகளை இழுக்கும் தந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது புதுவை அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இரவோடு, இரவாக புதுவை அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்து ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், பிரதமர் மோடி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி பேசியதை அச்சிட்டுள்ளனர்.

    மேலும் பிரதமர் மோடி பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் ஒப்பற்ற புகழை பேசியதன் மூலம் எடப்பாடியார் தலைமையில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பா.ஜனதா அதன் கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர்.

    புதுவையில் அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்துள்ள பா.ஜனதா கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    பாஜக - அ.தி.மு.க. கட்சிகள் இடையிலான இந்த திடீர் போஸ்டர் யுத்தம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.
    • புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே’ என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது இதில் விரிசல் ஏற்பட்ட நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா தனித்தனியே கூட்டணி அமைத்து களம்காண உள்ளன.

    இந்த சூழலில் புதுவை பா.ஜனதா லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா படத்துடன் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்திலும் வெளிவந்துள்ளது.

    அதில் பிரதமர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 'தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டனர்' என்றும், 'எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது அம்மா ஜெயலலிதா அவர்கள்தான்.

    அவர் தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார்'என்றும், 'புதுச்சேரியில் இந்த முறைவாக்களிப்போம் தாமரைக்கே' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, புதுவை பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜனதா தலைவர் செல்வகணபதி எம்.பி., உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் ஆகியோரது படங்களும் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. வாக்குகளை தங்கள்வசம் இழுக்கவே இதுபோன்ற நடவடிக்கையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    கூட்டணி முறிந்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் படங்களை போட்டு தாமரைக்கு வாக்கு கேட்கும் பா.ஜனதாவின் இந்த உத்தி, புதுவை அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    • கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார்.
    • மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22-ந் தேதி இடைக்கால கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்கினர்.

    ஆனால் திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் மட்டும் தனது உதவியாளரின் பைக்கில் வந்து கலந்து கொண்டார்.

    அரசு கொடுத்த கார் அடிக்கடி பழுதாகி விடுவதால் தனது வீடான செல்லிப்பட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தாக தெரிவித்தார்.

    மேலும் தனக்கு புதிய காரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும், அவருக்கு புதிய கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அங்காளன் எம்.எல்.ஏ. தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் காரை சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து கார் சாவியை கொடுத்து காரை ஒப்படைத்தார். கடந்த 2 நாட்களாக தொகுதி நிகழ்ச்சிகளில் பைக்கில் சென்று பங்கேற்று வருகிறார். இது குறித்த அங்காளன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-


    எனக்கு கொடுக்கப்பட்ட அரசு கார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த காரை பட்டி பார்த்து புதிய கார் போல் என்னிடம் வழங்கினர்.

    ஆனால் கார் எங்கு போனாலும் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது.

    இதேபோல் மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு காருக்கு டீசல் போட மாதம் ரூ.30 ஆயிரம் தரப்படுகின்றது. ஆனால் எனக்கு காருக்கு டீசல் போட பணம் தருவதில்லை. காரின் ஆவணங்களையும் வழங்கவில்லை. இதனால் எனக்கு காரே வேண்டாம் என்று சபாநாயகரை சந்தித்து சாவியுடன் ஒப்படைத்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.
    • பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    புதுச்சேரி:

    60 ஆண்டுகளுக்கு முன்பு புதிய படங்கள் திரையங்குகளுக்கு வரும்போது பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் ஆட்டோ, ரிக்ஷா, மற்றும் மாட்டு வண்டிகளில் போஸ்டர்களை ஒட்டி, துண்டு பிரசுரங்களை கொடுத்து விளம்பரம் செய்வார்கள்.

    அதேபோன்று அந்த கால சினிமா விளம்பரங்களை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இன்று கழு மரம் பட குழுவினர் மாட்டு வண்டியில் போஸ்டர்களை ஒட்டி கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கியில் மைக் செட் போட்டு அனைவரையும் படம் பார்க்க கூவி கூவி அழைத்தனர்.

    யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் கொட்டாச்சி இயக்கி நடிக்கும் கழு மரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. புதுச்சேரி திரையரங்குகளிலும் கழு மரம் படம் வெளியாகிறது.


    புதுச்சேரி வீதிகளிலும் மாட்டு வண்டிகளில் சென்று துண்டு பிரசுரம் வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் படம் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

    சினிமா போஸ்டர் ஒட்டிய மாட்டு வண்டி வீதி வீதியாக செல்லும்போது அதைப் பார்த்த பொது மக்கள் பழங்கால நினைவுகளை அசைபோட்டபடி ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    • கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.

    கடந்த தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 2 தொகுதியிலும், தி.மு.க. 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    இதனால் தங்கள் கட்சிக்கே பலம் உள்ளதாக கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.


    அதே வேளையில் சிட்டிங் எம்.பி. என்ற பெயரில் காங்கிரசே போட்டியிடும் என்று அக்கட்சி தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு அப்போதைய கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் கமிஷன் அரசு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுவார். அவரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவரை அபார வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

    • கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இந்த கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதாவது கைதிகளுக்கு யோகா, ஓவியம், சிற்பம் ஆகிய பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் உடற் பயிற்சி மற்றும் நடன பயிற்சி அளிக்கப்படுகிறது.

    சிறை சாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கரில் கைதிகளால் துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டு, 60 வகையான பழம், மூலிகை , காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அவர்கள் இது தொடர்பாக சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகரை சந்தித்து பேசினர்.


    இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜிப்மர் டாக்டர்கள், காலாப்பட்டு சிறைக்கு சென்று கைதிகளை சந்தித்து பேசினர். அப்போது 57 தண்டனை கைதிகள், 89 விசாரணை கைதிகள் என 146 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் 2 அதிகாரிகளும் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதில் அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஜிப்மர் டாக்டர்கள் அவர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

    உடல் உறுப்பு தானம் செய்ய உறுதியளித்தவர்களின் இறப்புக்கு பின் அவர்களது உடல் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

    • அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு தலைமை செயலாளர் திருப்பி அனுப்புவதாக குற்றசாட்டு.
    • அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, தலைமை செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என புகார்கள் எழுந்து வந்தன. மேலும் அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகரை தேர்தல் துறை தவிர மற்ற அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜீவ் வர்மா விடுவித்தார்.

    இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருந்த வல்லவன் கோவா-விற்கும், துணைநிலை ஆளுநரின் செயலாளராக இருந்த சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார்.
    • துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாளை புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி பல்கலைகழகம் செல்லும் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின் கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார். மறுநாள் காலை அரவிந்தர் ஆசிரமம் மற்றும் மணக்குல விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு சென்று நடராஜனை தரிசனம் செய்கிறார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, புதுச்சேரியில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் செல்லும் சாலை, மற்றும் தங்கும் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் அஜோய்குமார் தெரிவித்துள்ளார்.

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அஜோய் குமார் மேலும் கூறியதாவது:-

    காங்கிரசுடன் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இந்தியக் கூட்டணியின் வலிமையான தலைவர்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கூட்டணியை அவர் வழிநடத்துவார். 

    பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு இன்னும இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

    ராமர் கோயில் கட்டவும், பல திட்டங்களைத் தொடங்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் மத்திய அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிதி வழங்க மறுக்கிறார்கள். திருநெல்வேலி, சென்னை வெள்ளத்திற்கு தமிழக அரசு பலமுறை நிவாரண நிதி கேட்டு வருகிறது. ஆனால் பாஜக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இந்தியாவின் ஒரு சதவீத பணக்காரர்கள் நாட்டின் சொத்துக்களில் 76 சதவீதத்தை வைத்துள்ளனர். ஆனால் 50 சதவீத மக்கள் தொகை இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×