search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. போட்டி
    X

    காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. போட்டி

    • கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.

    கடந்த தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 2 தொகுதியிலும், தி.மு.க. 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    இதனால் தங்கள் கட்சிக்கே பலம் உள்ளதாக கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.


    அதே வேளையில் சிட்டிங் எம்.பி. என்ற பெயரில் காங்கிரசே போட்டியிடும் என்று அக்கட்சி தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு அப்போதைய கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் கமிஷன் அரசு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுவார். அவரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவரை அபார வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

    Next Story
    ×