search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா"

    • கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.
    • விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். முதுமை தோற்றம், இளமைத் தோற்றம் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.

    இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக, 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் நேற்று கேரளா சென்றார். கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.

    நேற்று விஜய் ஏறிய காரில் மக்கள் அலை போல திரண்டு தங்கள் அன்பை பொழிந்தனர். விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.

    விஜய் அனைவரிடமும் சிரித்தபடியே ரசிகர்களின் அன்பை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இண்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் காட்சியை படமாக்கவுள்ளனர். ஸ்டேடியத்தை சுற்றி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணியின் போஸ்டர்களையும் தோனி பட போஸ்டர்கலையும் ஒட்டி இருக்கின்றனர் படக்குழுவினர். ஆதலால், படத்தில் தோனி கேமியோ ரோல் செய்வதாக தகவல் பரவி வருகிறது.

    இருப்பினும், ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தி வரும் தோனி, GOAT படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்

    லியோ வெற்றியை அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். முதுமை தோற்றத்திலும், இளமைத் தோற்றத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.

    பிரஷாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

     

     

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
    • தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.

    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் மதியத்துக்கு மேல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    சுவாமியே சரணம் ஐயப்பா என கூறியபடி அவர் பேச்சை தொடங்கினார். பிறகு அவர் பேசுகையில் கூறியதாவது:-

    கேரளாவில் ஊழலுக்கு பெயர் போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. இந்த கட்சிகளை ஜனநாயக முறைப்படி ஒழிக்க மக்கள் முன்வர வேண்டும். கேரளாவில் ரப்பர் தொழில் நலிவடைந்து வருகிறது. ரப்பர் தொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கண்டும் காணாதது போல் இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் நடித்து வருகிறது.

    கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் அருட்தந்தைகள் தாக்கப்படுகிறார்கள். கல்லூரிகள் கம்யூனிஸ்டுகளின் கூடாரங்களாக மாறியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்தநிலை மாற வேண்டுமானால் மாறி மாறி வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் அரசுகள் மாற்றப்பட வேண்டும். மாற்றம் வந்தால் மட்டுமே கேரளாவுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும். கேரளாவில் இந்த முறை தாமரை மலரும். 10-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    தேசிய அளவில் பா.ஜனதா கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. கேரளாவில் இளைஞர்களிடையே புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அனில் அந்தோணி இளைஞர்களின் அடையாளம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்தனம்திட்டா பிரசாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு மல்காஜ்கிரி பாராளுமன்ற தொகுதியில் 'ரோடுஷோ' நடத்தினார்.

    காவி நிற தொப்பி அணிந்தபடி, திறந்த வாகனத்தில் நின்று கொண்டு, சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைத்து மோடி வாழ்த்து தெரிவித்தார். சிலர் பிரதமரை பார்ப்பதற்காக கட்டிடங்களின் மொட்டை மாடியில் நின்றனர்.

    இந்த ரோடுஷோவின்போது சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்றவர்கள், 'மோடி, மோடி', 'பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

    இன்று (சனிக்கிழமை) நாகர்கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

    • குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்
    • மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    "குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர்
    • Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்

    கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். இத்தளத்திற்கு Cspace என்று பெயரிட்டுள்ளனர். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த முயற்சியை துவங்குகிறோம் என்று அப்போது பினராயி கூறினார். இது கலை மற்றும் கலாச்சார மதிப்புள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு பாதையாக அமையும் என்றும், பிற ஓடிடி தளம் அனைத்தும் வியாபார நோக்கத்துடன பெரிய கமர்ஷியல் படங்களை மட்டும் வாங்குகின்றன., CSpace தரமான திரைப்படங்களை வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு ஊடகமாக முத்திரை பதிக்க உள்ளது என்றும் கூறினார்.

    Cspace ஓடிடி தளத்தில் ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்களை மட்டும்தான் இடம்பெறும். அதனால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களை அது பாதிக்காத வண்ணம் இது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற படமும் இதில் இடம்பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 42 படங்கள் Cspace ஓடிடி தளத்தில் இடம்பெறவுள்ளது. அதில் 35 முழு நீள படங்களும், 6 ஆவணப் படங்களும்,1 குறும்படமும் இடம்பெறவுள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    பே பெர் வியூ என்ற அடிப்படையில் இந்த ஓடிடி தளம் இயங்கவுள்ளது. ஃபீட்சர் (Feature)படங்களை பார்க்க ரூ.75, குறும்படங்களை பார்க்க குறைவான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பாதி தொகை அந்த படத்தின் தயாரிப்பளருக்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். Cspace-ன் app-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

    இந்த Cspace ஓடிடி தளம் வெளியானதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



     


    • கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல்.
    • கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு.

    கேரள மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பீச்சுகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.

    இதனால் இந்த கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த கடற்கரையில் மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கேரளா வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக மிதக்கும் பாலத்தில் நடந்து அந்த அனுபவத்தை பெறுவது வழக்கமாகிவிட்டது.

    இந்நிலையில், மிதக்கும் பாலம் உடைந்ததில் 15 பேர் கடலில் விழுந்தனர்.

    கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடலில் விழுந்தவர்கள் லைப் ஜாக்கெட் போட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கடல் நீரைக் குடித்ததால் 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வௌியாகியுள்ளது.

    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது
    • கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது

    கேரள சமூக ஆர்வலர் கோவிந்தன் நம்பூதிரி கேரளாவில் 8 ஆண்டுகளில் அரசு சார்பில் மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

    தற்போது அவரது மனுவுக்கு அரசு சார்பில் அளித்த பதில் வருமாறு:-

    2016 முதல் 2024 வரையிலான 8 ஆண்டுகளில் கேரள மாநில அரசு சார்பில் ரூ.1520.69 கோடி முதலீட்டில் 5,839 பேருக்கு வேலைகள் உருவாக்கி வழங்கப்பட்டு உள்ளது. கேரள மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (KSIDC)வழங்கிய நிதி உதவியால் கேரளாவில் 119 நிறுவனங்கள் முதலீடு செய்து ஊக்குவித்துள்ளன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    தொழில் வர்த்தக இயக்குனரகம் கடந்த 22 மாதங்களில் 2,36,384 நிறுவனங்கள் மூலம் ரூ.14,922 கோடி முதலீடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கோவிந்தன் நம்பூதிரி கூறியதாவது:-

    கேரள அரசின் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. எனவே கேரள மாநில அரசு முன் முயற்சி நடவடிக்கை எடுத்து உடனடியாக வேலைவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

    • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
    • பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார்.

    சஞ்சு சாம்சன் கேரளாவில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அவருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    கடந்த டிசம்பரில், சஞ்சு சாம்சன் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்தார் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 108 ரன்கள் விளாசினார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்த கேரளா வீரர் என்ற வரலாற்று சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

    பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் கிரேடு C-ன் ஒரு பகுதியாக இருக்கும் 11 வீரர்களில் சாம்சனும் ஒருவராக உள்ளார். இவருக்கு ஆண்டுக்கு ₹ 1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இன்னமும் இந்திய அணியில் உரிய இடம் கிடைக்க சஞ்சு சாம்சன் போராடி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'எல் நினோ' என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது

    'எல் நினோ' கால நிலை முடிவுக்கு வந்தது. வரும் தென்கிழக்கு பருவமழைக்குப் பின் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    'எல் நினோ' என்பது பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. இதனால் அதீத மழை, திடீர் புயல், கடுமையான வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

    கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது.

    மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

    அவர் தனது X பக்கத்தின் பதிவில் "எல் நினோவிற்கு குட் பை. வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.


    • விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    • ககன்யான் திட்டத்திற்காக தேர்வான 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை அறிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதங்களில் மூன்றாவது முறையாக இன்று கேரளாவுக்கு சுற்றுப் பயணம் வந்தார். அவர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டார்.

    திருவனந்தபுரத்திற்கு இன்று காலை விமானத்தில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். அங்கு ககன்யான் திட்ட பணிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத்துடன் சென்று பார்வையிட்டார்.

    அப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளை பிரதமர் மோடிக்கு, சோம்நாத் அறிமுகம் செய்துவைத்தார். விண்வெளி திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் விளக்கினார்.

    அப்போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய மந்திரி முரளிதரன், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் உள்ளிட்டோர் பிரதமருடன் சென்றனர். பின்பு ககன்யான் திட்டம் தொடர்பாக திருவனந்தபுரம், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரூ1,800கோடி மதிப்பிலான புதிய வசதிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


    ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதற்காக தேர்வு செய்யப்பட்ட 4பேர் ககன்யான் திட்ட விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். விணவெளி பயணத்துக்காக அந்த 4 பேரும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.

    தேர்வானர்கள் பெயர் விவரம் இன்று தெரிய வந்தது. அவர்களது பெயர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத்பிரதாப், அஜித் கிருஷ்ணன், சவுகான். இவர்கள் 4 பேரும் இந்திய விமானப்படையில் விமானியாக பணியாற்றி வருகிறார்கள்.

    அவர்களில் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள நென்மாரா பகுதியை சேர்ந்தவர் ஆவார். விமானப்படை குரூப் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    விண்வெளி பயணத்துககு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விமானிகள், ரஷ்யா மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மனித விண்வெளி விமான மையத்தில் கடுமையான பயிற்சி பெற்றவர்கள் ஆவர். ககன்யான் திட்டத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ள அவர்களது 4பேரின் பெயர் விவரத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

    பின்பு விண்வெளி பயணத்துக்கு தேர்வாகியுள்ள பிரசாந்த் பால கிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சவுகான் ஆகி யோருக்கு விண்வெளி சிறகுகள் என்ற பதக்கத்தை வழங்கினார். இவர்களுக்கு சுபன்ஷு சுக்லா குழுவின் விங் கமாண்டராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்துக்கு சென்றார். அங்கு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனின் பாதயாத்திரை நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    அங்கு சுரேந்திரனின் பாதயாத்திரையை நிறைவு செய்து பிரதமர் மோடி பேசினார்.

    • ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
    • 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி(வயது38). இவரது மனைவி அலைஸ் பிரியங்கா(37). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணிபுரிந்து வந்தனர். சுஜித் ஹென்றி பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அலைஸ் பிரியங்காவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன்கள் நோவா மற்றும் நாதன் ஆகியோருடன் கலிபோர்னியாவில் சான்மேட்டியோ பகுதியில் வசித்து வந்தார்கள்.

    விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அலைஸ் பிரியங்காவுக்கு, கேரளாவில் உள்ள அவரது தாய் போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    இதனால் கலிபோர்னியாவில் உள்ள தங்களது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, அலைஸ் பிரியங்கா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி அவர்களும், அங்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.

    எவ்வளவு அழைத்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.

    அப்போது அங்கு சுஜித் ஹென்றி, அவரது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

    ஆனால் சுஜித் ஹென்றி, அலைஸ் பிரியங்கா ஆகிய இருவரின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் அவர்களது வீட்டில கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் சுஜித் ஹென்றி தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்காலம் என்று கருதப்படுகிறது.

    ஆனால் குழந்தைகளின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் எதுவும் இல்லை. ஆகவே அவர்களது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. கணவன்-மனைவி இருவரின் உடலிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பதால், அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×