என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கம்போடியா அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    பாலி:

    இந்தோனேசியா, கம்போடியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கம்போடியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

    16 வது ஓவரை கெடே பிரியந்தனா வீசினார். அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். 4 வது பந்தில் விக்கெட் வீழ்த்தவில்லை. 5வது மற்றும் 6வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசியா அணியை வெற்றி பெற செய்தார்.

    கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் ஒரு ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை கெடே பிரியந்தனா படைத்தார்.

    ஏற்கனவே, நட்சத்திர பந்துவீச்சாளர்களான மலிங்கா , ரஷீத் கான் ஆகியோர் ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில், கெடே பிரியந்தனா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.

    இதையடுத்து, 129 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 34 பந்தில் 69 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    • புகை பிடித்தல் பழக்கம் இல்லாத போதிலும் நுரையீரல் புற்றுநோயால் காலமானார்.
    • அவர் நினைவாக அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இவர் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவரது மனைவி ரூத். இவர் நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு 46 வயது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் மனைவி இறந்து 7 ஆண்டுகள் கழித்த நிலையில், தற்போது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அண்டோனியா லின்னேயஸ்-பீட் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதனை ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    மனைவி மறைந்த பின்னர் அவர் நினைவாக புகைப் பிடிக்காமல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ரூத் ஸ்ட்ராஸ் பவுன்டேசன் என்ற அறக்கட்டளையை தொடங்கினார்.

    • இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.
    • இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார்.

    டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அறிவிக்கப்பட்டார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லானிங் ஏலத்தில் UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், டெல்லியால் தக்கவைக்கப்பட்ட ஜெமிமா கேப்டனாக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜெமிமா,

    "டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய பெருமை. அணியை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையை வென்றது, இப்போது, WPL-இன் முதல் சீசனிலிருந்தே என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் இந்த அணியில் இந்த அற்புதமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது என, இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.

    கடந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த அணி எனது குடும்பம். பழைய வீரர்களை மிஸ் செய்வேன். அதே நேரத்தில் பழக்கமான முகங்கள் மற்றும் புதிய வீரர்களுடன் புதிய நினைவுகளை உருவாக்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். மேலும் முதல் மூன்று சீசன்களிலும் அணியின் துணைத்தலைவராக ஜெமிமா செயல்பட்டார்.


    • ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
    • தீப்தி சர்மா தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார்.

    ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.

    இவர் தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 732 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாகூர் 3 இடங்களை சரிந்து 14-வது இடத்தில் உள்ளார். ராதா யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஜெர்மையா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா 1 இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.

    ஹர்மன்ப்ரீத் கவுர் 15-வது இடத்தில் உள்ளார்.

    • ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
    • முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டம் ஆஸ்திரேலியா மண்ணில் எடுபடவில்லை. இங்கிலாந்து வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 2-ஆவது போட்டிக்கும், 3-வது போட்டிக்கும் இடையிலான கிடைத்த ஓய்வு நாட்களை குடித்து கும்மாளம் அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பொதுவாக 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் வீரர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் சற்று இடைவெளி கிடைப்பதுண்டு. சில டெஸ்ட் போட்டிகள் 5 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்தால் ஓய்வு நாட்கள் அதிகமாக கிடைக்கும்.

    அதேபோல்தான் பிரிஸ்பேனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டிக்கும், அடிலெய்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது.

    இந்த 9 நாட்கள் ஓய்வை இங்கிலாந்து வீரர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள பயன்படுத்தாமல் குடிக்க செலவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

    பெரும்பாலான வீரர்கள் 9 நாட்களில் 6 நாட்கள் குடித்து கும்மாளம் அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்துவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

    2-வது டெஸ்ட் முடிவடைந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் 3வது டெஸ்ட் தொடங்கிய டிசம்பர் 17-ந்தேதி வரையில் குயின்ஸ்லாந்தில் உள்ள நூசா கடற்கரை விடுதியில் நான்கு இரவுகள் இங்கிலாந்து அணி செலவழித்துள்ளது.

    2வது டெஸ்ட் முடிவடைந்த பிறகு இரண்டு நாட்கள் பிரிஸ்பேனில் குடிப்பதற்காக செலவழித்துள்ளனர். அதன்பின் நூசா கடற்கரையில் செலவழித்துள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் சாலையோரங்களில் குடித்தவாறு காணப்பட்டுள்ளனர். 3 வீரர்கள் மட்டுமே குடிப்பதில்லை என முடிவெடுத்து நழுவியதாக கூறப்படுகிறது.

    4வது டெஸ்ட் மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதியும், 5-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 4-ந்தேதியும் தொடங்குகிறது.

    • இந்த ஆண்டில் அதிக சதம் அடித்தவர்களில் ஜோ ரூட் மற்றும் சுப்மன் கில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
    • இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் குல்தீப் யாதவ் 5-வது இடத்தில் உள்ளார்.

    2025-ம் ஆண்டு பல கிரிக்கெட் வீரர்களுக்கு சாதனை ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் மற்றும் சுப்மன் கில் இருவரும் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.


    1. ஜோ ரூட் (இங்கிலாந்து) 7 சதம் 1540 ரன்கள்

    2. சுப்மன் கில் (இந்தியா) 7 சதம் 1764 ரன்கள்

    3. ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) 5 சதம் 1753 ரன்கள்

    4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) 4 சதம் 916 ரன்கள்

    5. ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) 4 சதம் 1264 ரன்கள்

    2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டஃபி 81 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.


    1. ஜேக்கப் டஃபி (நியூசிலாந்து) 36 போட்டிகளில் 81 விக்கெட்டுகள்

    2. முசரபானி ஆசீர்வாதம்(ஜிம்பாப்வே) 31 போட்டிகளில் 65 விக்கெட்டுகள்

    3. மாட் ஹென்றி (நியூசிலாந்து) 27 போட்டிகளில் 65 விக்கெட்டுகள்

    4. அலி தாவூத் (பக்ரைன்) 37 போட்டிகளில் 63 விக்கெட்டுகள்

    5. குல்தீப் யாதவ் (இந்தியா ) 25 போட்டிகளில் 60 விக்கெட்டுகள்

    2025-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த வீரர்களின் (விக்கெட் கீப்பர்கள் தவிர்த்து) பட்டியலிலும் இந்திய வீரர் இடம் பிடித்துள்ளார். அதன்படி முதல் இடத்தில் அபிஷேக் ஷர்மா உள்ளார். அதனை தொடர்ந்து நிசாகத் கான், எஸ்ஆர் முக்கமல்லா ஆகியோர் 21 கேட்ச்களுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.


    அபிஷேக் சர்மா (இந்தியா) - 21 கேட்ச்கள் (21 போட்டிகள்)

    நிஜகத் கான் (காங்காங்) - 21 கேட்ச்கள் (21 போட்டிகள்)

    முக்கமல்லா (அமெரிக்கா) - 21 கேட்ச்கள் (21 போட்டிகள்)

    ஜெய்ஸ்வால் (இந்தியா) - 20 கேட்ச்கள் (குறிப்பிடப்பட்டது)

    முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 19 கேட்ச்கள் (19 போட்டிகள்)

    • அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது .
    • இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார். 

    இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மீண்டும் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்தார். லாரா வால்வார்த் 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 -0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வால்வார்த் தொடர் நாயகி விருதை வென்றார்.

    இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் லாரா வால்வார்த் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    • மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுகிறார்.
    • டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நாளை முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2 அல்லது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் அவர்கள் விளையாடும் போட்டிகளில் அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொடரின் ஒரு லீக் போட்டியில் மும்பை - சிக்கீம் அணிகள் நாளை மோதுகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை அணியில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

    அதேசமயம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியில் விராட் கோலி பங்கேற்கிறார். விராட் கோலியை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க, மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்க கூடாது என கர்நாடக அரசு அம்மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கோலி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
    • முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டித் தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் பெறுவார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

    இதே போல் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் களம் காணும் சீனியர் வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500-ம் அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைளுக்கும் ஜாக்பாட் அடிக்கிறது. அவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரூ.25 ஆயிரமும், 20 ஓவர் போட்டிக்கு ரூ.12,500-ம் வழங்கப்பட உள்ளது.

    நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், அதுவே முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கேப்டன் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் காயம் காரணமாக கடைசி 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். மேலும் ஹெசில்வுட் ஏற்கனவே காயத்தில் இருப்பதால் அவரும் இடம் பெறவில்லை.

    4வது ஆஷஸ் டெஸ்டுக்கான ஆஸ்திரேலியா அணி:-

    ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லெபுசென், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

    கராச்சி:

    12-வது இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது. 172 ரன்கள் குவித்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

    இளையோர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியதும் அந்த வெற்றியை திருவிழா போல் அவர்கள் கொண்டாடினர். நேற்று அதிகாலை தாயகம் திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு சீனியர் வீரர்களுக்கு கொடுப்பது போன்று தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தான் இளம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1 கோடி (இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் அவர்களை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து விருந்தளிக்க உள்ளார். முன்னதாக அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நவ்வி தலா ரூ.16 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

    ×