என் மலர்
கிரிக்கெட் (Cricket)

என்னை ஆல் ரவுண்டராக உருவாக்க முயற்சி- ஹர்ஷித் ராணா
- நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது.
- ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம்.
வதோதராவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 301 ரன் இலக்கை இந்திய அணி 49 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 29 ரன்கள் விளாசி (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
பின்னர் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான ஹர்ஷித் ராணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஒரு ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபடுவது எனது கடமையாகும். வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். இது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்ய களம் கண்ட போது, லோகேஷ் ராகுல் மிகவும் உதவிகரமாக இருந்தார். அதனால் நன்றாக கவனம் செலுத்தி ரன்கள் திரட்டினேன்.
ஒரு ஆல்-ரவுண்டராக 8-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் விருப்பம். அதனால் தான் வலைபயிற்சியில் என்னால் எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அதில் நான் கவனம் செலுத்துகிறேன். தேவைப்படும் போதெல்லாம் அணியின் பின்வரிசையில் என்னால் 30 முதல் 40 ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். என்னால் இதை செய்ய முடியும் என்று அணியும் நம்புகிறது.
விராட் கோலி களத்தில் நின்றது வரை 5-6 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்து விடும் போல் தோன்றியது. ஆனால் அவர் வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. கிரிக்கெட்டில் எதையும் கணிக்க முடியாது. எந்த நேரத்திலும் மாறும்.
ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் புதிய பந்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதற்கு தடுமாறுகிறார்களா? என கேட்கிறீர்கள். நீங்கள் என்ன கிரிக்கெட்டை பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் கூட முகமது சிராஜ் உண்மையிலேயே அருமையாக பந்து வீசினார்.
புதிய பந்தில் நாங்கள் அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினோம். கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால், மிடில் வரிசையில் விக்கெட்டுகளை சாய்ப்போம். அதைத் தான் நாங்கள் செய்தோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளன. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை.
இவ்வாறு ஹர்ஷித் ராணா கூறினார்.






