என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் வானிலை ஆய்வாளர்"

    • குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
    • 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.

    இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.

    இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

    • கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது.
    • இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால், டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இம்மாதத்தில் பருவமழை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான மழை நிகழ்வுகள் உருவாகும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கிழக்கு திசை காற்றினால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான சூழல் ஆரம்பிக்கிறது. கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், வருகிற 15-ந்தேதிக்கு பிறகு அடுத்தடுத்த மழை நிகழ்வுகள் உருவாகி பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் அதிகம் இருக்கிறது.

    அதன்படி, 15-ந் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களிலும், 20-ந்தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும்.

    இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.

    இது சமீபத்தில் கடந்து சென்ற 'டிட்வா' புயலை போல நல்ல மழையை கொடுக்கக் கூடிய புயல் சின்னமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளது.
    • காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மழை தொடர்பாக அவர் கூறியதாவது:

    காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விழுப்புரத்தில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட வட கடலோர, வட தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வட தமிழக மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டாவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலையில் இன்று பிற்பகல் வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை தீபம் ஏற்றும் நேரத்தில் மழையின் தீவிரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.
    • வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    தற்போது புயலின் வேகம் அதிகரித்து 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக நகர வாய்ப்பு உள்ளது. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் முறையே 60 கி.மீ. மற்றும் 30 கி.மீ. தூரத்தில் மையம் கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக எதிர்பார்த்த மழை பெய்யாதது ஏன்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டிட்வா புயல் இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.

    * இலங்கையில் இருந்து வெளியே கடல் பகுதிக்கு வந்த பிறகு வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.

    * வறண்ட காற்றின் ஊடுருவல் மற்றும் காற்று முறிவே மழை குறைந்ததற்கு காரணம்.

    * தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். இருந்த போதிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம்.
    • வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு 11 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 30ம் தேதி சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் சென்னையில் இந்தாண்டு புயல் ஆபத்தும் இருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை இந்தாண்டு காலக்கட்டத்தில், குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலங்களில் வலி மண்டலம் மற்றும் கடல் சார்ந்த அமைப்புகளை பார்க்கும்போது, நமக்கு லா நினோ உருவாக வாய்ப்புள்ளது.

    இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD) பொறுத்தவரையில் எதிர்மறை ஐஓடி நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் லா நினா ஆண்டுகளாக அமைந்திருக்கிறது. 2023ம் ஆண்டில் மட்டும் எல் லினோ ஆண்டுகளாகவும் அமைந்துள்ளது.

    இந்த லா நினா மற்றும் அதன் காரணிகளை பார்க்குமபோது, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடகிழக்கு பருவமழை சற்று தாமதமடைந்தாலும், பருவமழை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தீவிர மழை பொழிவு இருக்கும். தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம், புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழை பொழிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லா நினா:

    பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள தண்ணீர் சில பகுதிகளில் சூடாகவும், சில பகுதிகளில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இது உலகெங்கிலும் உள்ள வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

    இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல் நினோ மற்றும் லா நினா வானிலை நிகழ்வுகள் ஆகும்.

    எல் நினோ:

    எல் நினோ பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடலின் வெப்பநிலையை வழக்கத்தை விட சூடாக்குகிறது, குறைந்தது 0.5 டிகிரி அதிகரித்தால் எல் நினோ உருவாகியதாக அறிவிக்கப்படும்.

    • தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • அவலாஞ்சி அணை, அப்பர் பவானி, குன்னூர் ரேலியா அணை உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உயர்ந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக மாவட்ட முழுவதுமே பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நீடித்தது.

    இந்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.

    தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை, அப்பர் பவானி, குன்னூர் ரேலியா அணை உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீலகிரியில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும்.
    • நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச் 1 முதல் மே 31-ந் தேதி வரையிலான காலக்கட்டமே தமிழகத்திற்கு கோடைகாலமாகும். தற்போது ஏப்ரல் வரையிலான காலத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது.

    தென் மாவட்டங்களை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகி வந்தது. மேலும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக மழையும் பெய்துள்ளது.

    தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும். அதாவது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வெப்பநிலை குறைவாக இருக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை சற்று குறையும். காரணம் மேற்கு திசை காற்று வலுவாக வீசும் என்பதால் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்.

    இதே வேளையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். அதாவது கிழக்கு திசை கடல் காற்று வீசுவது நின்று மேற்கு திசை காற்று வீச தொடங்கும். வறண்ட மேற்கு திசை காற்று வீசும் என்பதால் சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.

    மேலும் மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.ஆனால் கடந்த ஆண்டை போல இருக்காது.

    மழையை பொறுத்தவரை மே மாதம் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமழை பெய்யும். குறிப்பாக மே 1-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான காலத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய உள் மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு கோடைமழையை எதிர்பார்க்கலாம். கொங்கு மாவட்டங்களிலும் மே மாதத்தில் நல்ல மழை பெய்யும்.

    தென் மாவட்டங்களை பொறுத்தவரை மே முதல் 2 வாரத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பதிவாகும். அதே வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளான விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாவில் இயல்பை விட அதிகமழை பெய்யும்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு உள்ளது. முதல் 2 வாரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக இருந்தாலும் மே 3,4 வாரங்களான அதாவது மே 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலான காலத்தில் தென் மாவட்டங்கள் ஓரளவு நல்ல மழையை பெறும்.

    மேலும் வெப்பநிலை அதிகமாக உள்ள நாட்களில் நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம்.
    • மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும்.

    தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    தூத்துக்குடியை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு. விருதுநகர், மதுரை மாவட்டத்திலும் மழை எதிர்பார்க்கலாம்.

    சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, கோதையாறு, சிவகிரி, புளியங்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி-மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.

    • தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவது ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்த மாதம் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும் என்று இருந்த நிலையில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தென் தமிழகத்திலும், உள் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் ஏற்படுவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் இருக்காது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல வெப்பத்தின் தாக்கம் இருக்காது. 44 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு இருந்தது. இந்த மாதம் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பதால் வெயில் தாக்கம் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'எல் நினோ' என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது

    'எல் நினோ' கால நிலை முடிவுக்கு வந்தது. வரும் தென்கிழக்கு பருவமழைக்குப் பின் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    'எல் நினோ' என்பது பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக, உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு. இதனால் அதீத மழை, திடீர் புயல், கடுமையான வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்

    கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை மிக அதிகமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாததால் காவிரியில் நீர் வரத்து வெகுவாக குறைந்தது.

    மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

    அவர் தனது X பக்கத்தின் பதிவில் "எல் நினோவிற்கு குட் பை. வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.


    • தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு.
    • கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

    ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்பத்தூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் தற்போதுள்ள வெப்ப நிலை நீடிக்கும். கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். 5 அல்லது 10 நிமிடங்கள்தான் மழை பெய்யும். கன்னியாகுமரி, சேலம், ஏற்காடு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு. கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் 36, 38 டிகிரி செல்சியஸ் அளவிலேயே உள்ளது. மே முதல் வாரத்தில் இருந்து மேற்கு திசை காற்று, தரைக்காற்று கடலோர மாவட்டங்களுக்கு வரக்கூடும் என்பதால் வெப்பம் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும். காவிரி டெல்டா பகுதிகள் உள்பட வடதமிழகம், தென் தமிழக பகுதியிலும் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கத்தரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும். சுட்டெரிக்கும் வெயில் தாக்கக்கூடும். எனவே வரும் நாட்களில் வெப்ப அலை அதிகம் வீசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    • கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.
    • குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக பட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கி டையே இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்ச ரிக்கையும் விடுத்துள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தையொட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் வருகிற 21-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத் தில் மேலும் மழை பெய்யுமா? என்பது தெரிய வரும்.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்க கடலில் உருவாகும் குறைந்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி ஹாட் ஸ்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த வார மும் மழை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ×