search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm"

    • புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இல்லை:
    • இதனால் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்தது. இதையடுத்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையைக் கடந்தது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன.

    ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். இதேபோல் புளோரிடா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினாவில் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஹெலன் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.

    புளோரிடா, ஜார்ஜியா, கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தன. பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
    • இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையேயுள்ள வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இது மத்திய ஆந்திராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் ஒடிசாவில் ஒருசில இடங்களில் இனிவரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


    வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை.
    • யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது.

    பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்தநிலையில் யாகி புயல் மியான்மர் நாட்டை தாக்கியது. புயல் காரணமாக மியான்மரில் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகி உள்ளதாகவும், 80-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    அங்கு சிக்கியுள்ளவர் களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மத்தியப் பகுதிகளிலும், கிழக்கு ஷான் மாநிலத்திலும், தலைநகரான நய்பிடாவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    புயல்-வெள்ளம் காரணமாக சுமார் 2.40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வெள்ளத்தால் 24 பாலங்கள், 375 பள்ளி கட்டிடங்கள், ஒரு புத்த மடாலயம், 5 அணைகள், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

    மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு வெளிநாடு உதவ வேண்டும் என்று ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கு வெளிநாடு களைத் தொடர்பு கொள்ளு மாறு அதிகாரிகளுக்கு ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

    சென்னை:

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை கணிப்பின் படி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று இன்று மாலைக்குள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை ஒடிசா புரி மற்றும் சத்தீஷ்கர் இடையே கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் புயல் காலை 8 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குயதாகவும், மேலும் 11 மணி அளவில் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் வேளையில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி உள்ளது.

    இதனால் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    • வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.
    • ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    மதுரை:

    தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 20-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மூலம் 47 சதவீத மழை கிடைத்து வருகிறது. சராசரியாக 90 சென்டி மீட்டர் மழை வரை இந்த பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழையின் போது வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.

    இதனால் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயல் சேதம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் அதி கன மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்வதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் இந்த பருவ மழையின் போது பெரும் சேதமடைகிறது. பருவ நிலைகளை முன்கூட்டியே கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே சென்னை, காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

    ஆனாலும் சில சமயங்களில் இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் கனமழை மற்றும் புயல் காரணமாக அதிக பாதிப்புகளை தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது ஆனாலும் இது தொடர்பாக இந்திய மாநில மையம் சரியான முன்னெச்சரிக்கை உத்தரவுகளை மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பருவ காலநிலைகளை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வசதியாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் அதிநவீன ரேடார்களை அமைக்க மாநில பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது .

    இதற்கான டெண்டர் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை புதிய ரேடாரர்களை அமைக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இந்த அதிநவீன ரேடார்கள் மின்காந்த அலைகள் மூலம் பருவ, காலநிலையில் நிலவும் திட மற்றும் திரவ மூலக்கூறுகளின் தன்மைகளை துல்லியமாக ஆராய்ந்து மழை மற்றும் புயலின் தன்மையை முன் கூட்டியே துல்லியமாக கணிக்க முடியும். மேலும் இந்த ரேடார்கள் புயல் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் மையம் கொள்ளும் பகுதிகள், கடக்கும் பகுதிகளையும் துல்லியமாக கணித்து எச்சரிக்கை செய்யும்.

    இது தொடர்பாக இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்தியூஜாய் மோகபத்ரா கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவும் பட்சத்தில் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து முழுமையாக தடுக்க முடியும். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் எஸ்-பாண்ட், எக்ஸ்-பாண்ட் வகையான 2 ரேடார்களும், காரைக்கால்-ஸ்ரீஹரிகோட் டாவில் எஸ்-பாண்ட் ரேடார்களும் நிறுவப்பட்டு உள்ளன.

    கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஒரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். மேலும் ராமநாத புரத்தில் நவீன புதிய ரேடார் நிறுவப்படுவதால் கிழக்கு கடலோர பகுதிகள்,தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பருவ நிலை மாற்றங்களை முன் கூட்டியே கணிக்க முடியும். எஸ்-பாண்ட் வகை ரேடார் கள் மூலம் 500 கிலோமீட்டர் சுற்றளவையும், எக்ஸ்-பாண்ட் ரேடார்கள் மூலம் 150 கிலோமீட்டர் சுற்றளவையும் கணிக்க இயலும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது உள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் நிலவும் பருவ நிலைகளை கண்காணிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தவிர்க்க வசதியாக ராமநாதபுரத்தில் அமைகின்ற ரேடார் மூலம் கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதிலும் பருவ நிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க இயலும். மேலும் ஏற்காட்டில் நிறுவப்படும் ரேடார் மூலம் வட மேற்கு மற்றும் வடபகுதி மாவட்டங்களின் நிலவும் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க இயலும் என்று இந்திய வானிலை மைய மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிநவீன 2 ரேடார்கள் ராமநாதபுரத்திலும் ஏற்காட்டிலும் நிறுவ மாநில பேரிடர் மேலாண்மை துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளை தடுக்கவும், பொது மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்கவும் பேருதவியாக இருக்கும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.
    • முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் கண்டறியும் வகையில் 450 இடங்களில் இ.டபிள்யூ.எஸ். எனும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவிகளை அமைக்கும் பணிகளை பேரிடர் மேலாண்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    நெல்லை மாநகராட்சி மூலமாக கேபாசிட்டிஸ் என்னும் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தாமிரபரணி, ராமநதி மற்றும் கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கினை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.

    தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த கருவிகள் விரைவில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவிகள் தாமிரபரணி, கடனா, ராமநதி வழித்தடங்களான கோபாலசமுத்திரம், கோவில்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆலடியூர், பொட்டல்புதூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், முறப்பநாடு, சேரன்மகாதேவி, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் அமைகிறது.

    இதன் மூலம் ஆறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும்? எப்போது வரும்? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    இந்த தகவல்கள் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, முக்கிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதில் சேரன்மகாதேவி மற்றும் கொக்கிரகுளத்தை தவிர மற்ற இடங்களில் கருவி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இந்த கருவியில் காமிரா, சென்சார் வசதி, சோலார் பேனல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் அமைப்பது குறித்து கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றது.
    • சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது.

    அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

    ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

     கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவந்தபுரம் தற்பொழுது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இந்த எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை கடலோர மற்றும் மலை மாவட்ட மக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகனமழையின் போது 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாகனங்கள் பயணிக்க கலெக்டர் தடை விதித்துள்ளார்.

    நீர்வீழ்ச்சி, நீர்நிலைகள் தொடர்பான சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகனமழை எச்சரிக்கையால், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதை அடுத்து, அதை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

    தொடர் மழையால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது.

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.
    • இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வெயில் தாங்காமல் சென்னை வாசிகள் சில்லென இருப்பதற்கு சுற்றுலா தளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையே குழுகுழுவென்று மாறிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அப்பப்ப மழை பெய்த வண்ணம் தான் உள்ளது. மற்ற தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதால்  சென்னையில் வானம் மந்தமாகவும் மேக மூட்டதுடனே காணப்படுகிறது. இவ்வளவு நாள் சுட்டெரித்த வெயிலிற்கு அடுத்து  மழை பெய்வதால் சென்னை மக்களுக்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இன்று அதிகாலை சென்னையில் பெருமபாலான இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

     

    நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

     

    • 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

    சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

    • புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர்.
    • புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர்.

    இதனால் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5000 மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் துறைமுகங்களில் 8 நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கட்டது.

    இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    முன்னதாக மீன்வளத்துறையினர் தடையை நீக்குவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்குச் செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் தண்ணீர், உணவு பொருட்களை சேகரித்து வந்த நிலையில் நேற்று இரவு கடலுக்குச் செல்ல விதித்த தடையை நீக்கியதால் இன்று அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.

    ×