என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரிக்கும் - டெல்டா வெதர்மேன்
- குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
- 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.
இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.
இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.






