என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அவலாஞ்சியில் 24 மணிநேரத்தில் 35 செ.மீ. மழை பதிவு - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
- தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- அவலாஞ்சி அணை, அப்பர் பவானி, குன்னூர் ரேலியா அணை உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உயர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக மாவட்ட முழுவதுமே பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நீடித்தது.
இந்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நீரில் மூழ்கின.
தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குட்டைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை, அப்பர் பவானி, குன்னூர் ரேலியா அணை உள்பட அனைத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீலகிரியில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.






