என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு: கடந்த ஆண்டை போல வெப்ப அலை இருக்காது என தகவல்
    X

    தமிழகத்தில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு: கடந்த ஆண்டை போல வெப்ப அலை இருக்காது என தகவல்

    • தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவது ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    10 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்த மாதம் தொடர்ந்து வெப்பம் அதிகரிக்கும் என்று இருந்த நிலையில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருவது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தென் தமிழகத்திலும், உள் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் ஏற்படுவதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் இருக்காது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்ப அலை இருந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அதுபோல வெப்பத்தின் தாக்கம் இருக்காது. 44 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டு இருந்தது. இந்த மாதம் பரவலாக மழை பெய்யக்கூடும் என்பதால் வெயில் தாக்கம் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×