search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎஸ் அழகிரி"

    • அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.
    • பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

    பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் எங்கே வளர்ந்து இருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறேன் என்று சொன்னார்கள் வேலை தந்தார்களா?

    விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக ஆக்குகிறேன் என்று சொன்னார்கள் செய்தார்களா, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் போடப்படும் என்று சொன்னார்கள் போட்டார்களா, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்தார்களா, அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் வந்துள்ளதா, எந்த வகையில் இந்தியாவின் பொருளாதார முன்னேறி இருக்கின்றது.

    மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 15 கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். அதனை ஐ.நா. மன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

    உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோலையும், டீசலையும் விற்பது மோடி அரசாங்கம் தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவினுடைய பொருளாதாரம் சீரழிந்து உள்ளது.

    அதனால் தான் அவர்கள் மற்றதை பேசுவதை விட்டுவிட்டு ராமர் கோவில் கையில் எடுத்துள்ளனர். ராமருக்கு கோவில் கட்டக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எல்லாருமே ராமருடைய பக்தர்கள் தான்.

    வட இந்தியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கூட ராமர் கோவிலை கட்டுங்கள் என்று தான் சொல்கிறார்கள். மசூதியை இடித்து விட்டு ராமருக்கு என்று தனியாக கோவில் கட்ட வேண்டாம் என்று தான் அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. கட்சிகள் சொன்னது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் இருக்கிறது. இன்றைக்கு மோடி கட்டி உள்ளது 3201-வது கோவில் அவ்வளவு தான்.

    பாபர் மசூதி இருந்த இடத்திற்கு 3 கிலோ மீட்டருக்கு அப்பால் தான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ஏன் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    மக்களை திசை திருப்புவதற்காக எல்லாவற்றிலும் பொய் சொல்கின்றனர்.

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு எல்லா இடத்திலும் ஏராளமான மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். கோவில் கட்டுவதால் இன்றைக்கு தேர்தலில் யாரும் ஜெயித்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது.
    • சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. உடனே அங்குள்ள அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள். சென்னையில் ஒரு தொகுதி வாங்கி கொடுத்தால் என்ன? சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இது இயல்பு.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    • மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    • சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938-ல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள்.

    அதேபோல, 1939-ல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து பிரிட்டிசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கியபோது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும்போது, 'தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்" என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது.

    அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக்கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை ஆர்.என்.ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப்போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்டபோது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள்.

    150 ஆண்டு கால பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை வழியில் போராடித்தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத்தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர்.

    சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கறைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமாமிர்த தொண்டைமான் சிலையை இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: -

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியது இந்துக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. இந்துக்களை நாங்கள் தான் வளர்த்தோம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்துக்கள் தாங்களாகவே வளர்ந்தார்கள்.


    மனைவியை கூட கவனிக்க முடியாத பிரதமர், ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறு. அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.
    • எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2014 மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்கு ஜனவரி 22-ந் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகத்தை தன்னை மையப்படுத்தி நிகழ்த்துவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முனைப்பு காட்டுகிறார்.

    சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் மோடி இன்று வருகை புரிகிறார். ஆனால், அதேநேரத்தில் ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியினுடைய ஆன்மீக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.


    உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த மக்களவை உறுப்பினர்கள் ரூபாய் 37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வெள்ள பகுதிகளை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் தர முடியாது என்று ஆணவத்தோடு பேசியதை அனைவரும் அறிவார்கள்.

    எனவே, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறார். இதை மூடி மறைக்கிற வகையில் பிரதமர் மோடியின் ஆன்மீக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் படுதோல்வி அடைவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
    • 35 பேர் கொண்ட தேர்தல் குழுவின் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை :

    இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.


    35 பேர் கொண்ட தேர்தல் குழுவின் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் குழுவில் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரிஅனந்தன், மணிசங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், தங்கபாலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார்.
    • தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலேயே எத்தகைய உத்தியை கையாண்டாலும் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த முடியாத ஒரே மாநிலமாக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் எக்கு கோட்டையாக தமிழகம் விளங்குகிறது.

    இந்நிலையில் நடைபயணம் என்ற போர்வையில் உல்லாச பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு கிற வகையில் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை கூறி வருகிறார். தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்றும் பேசியிருக்கிறார். தமது முதுகு தனக்கு தெரியாது என்பதால் இத்தகைய கருத்தை அவர் கூறியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும்.

    தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை ஒன்றிய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை 100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இதற்கான விளக்கத்தை தருவாரா? தொலைக்காட்சி ஊடகங்கள் மைக்கை நீட்டினால் விளம்பரத்திற்காக எத்தகைய அவதூறையும் பேசிவிடலாம் என்று அண்ணாமலை நினைத்தால் அதிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அதற்குரிய விளக்கத்தை கூற தவறுவாரேயானால் மக்கள் மன்றத்தில் அவர் பதில் கூறியே ஆக வேண்டும்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த போது அன்றைய நிதி அமைச்சர் பொருளாதார நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கடன் சுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பல்ல. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்ற வேண்டு மென்ற பொறுப்புணர்ச்சியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் அவர் பணியாற்றி வருகிறார்.

    ஒன்றிய அரசுக்கு ரூபாய் 1 வரியாக வழங்கினால் 29 பைசா தான் திரும்பி வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இதற்கு நேரிடையாக பதில் கூறாமல் நிர்மலா சீதாராமன் விதண்டாவாதங்களை பேசி வருகிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இயற்கை பேரிடரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களின் துயரத்தில் எந்த பங்கையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சக பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பா.ஜனதாவை பொறுத்தவரை எதிர்பாராத மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார்கள்.
    • அ.தி.மு.க.வை பொறுத்தவரை நம்பகத்தன்மையுடனும், உண்மையுடனும் இல்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ்-தி.மு.க. மிகவும் நெருக்கமாக உள்ளது. அதேபோல் எங்கள் தலைவர் ராகுலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

    எனவே தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் எழாது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே எண்ணிக்கை குறையாமலும், அதே தொகுதிகளையும் மீண்டும் கேட்டுப்பெற வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் வலியுறுத்துவோம்.

    இதுவரை ஒரே தரப்பினர்தான் மீண்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது மற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்துகிறது.

    எனவே வருகிற தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதுவரை தேர்தலில் போட்டியிடாத இளைஞர்கள்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மேலிடத்தில் வலியுறுத்துவோம்.

    பா.ஜனதாவை பொறுத்தவரை எதிர்பாராத மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் ஏமாற்றத்தையே தமிழக மக்கள் பரிசாக வழங்குவார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை நம்பகத்தன்மையுடனும், உண்மையுடனும் இல்லை. பா.ஜனதாவுடனான அவர்கள் நிலைப்பாடு என்ன? என்பது தெரியவில்லை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்கள்? என்பதையும் தெரிவிக்கவில்லை. இன்னும் இரு கட்சிகளுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாகவே தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்தது.
    • இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. அரசு அமைந்த கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அதை எதிர்த்து தமிழக முதலமைச்சர் குரல் கொடுப்பதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. அதேபோல, பிரதமர் மோடி உரையாற்றும் போது உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ்நாட்டைப் பற்றி பேசாமல், தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை என்று மனசாட்சியே இல்லாமல் உண்மைக்கு புறம்பாக பேசியிருக்கிறார்.

    தகவல் அறியும் உரிமைச் சட்ட தரவுகளின்படி அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 22 மொழிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பா.ஜ.க. அரசு எத்தகைய கடுமையான பாரபட்சத்தை பின்பற்றுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    இந்திய பொருளாதாரம் 2024-ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்திக் காட்டுவேன் என்று பெருமைபட பேசியிருக்கிறார். இந்தியா வளர வேண்டுமென்று விரும்புவதில் தவறில்லை. ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    2014-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்தது. தற்போது 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 82.71 ஆக சரிந்துள்ளது.

    இதன்படி 40 சதவிகிதம் ரூபாயின் மதிப்பு குறைந்து உள்ளது. அதுமட்டு மல்லாமல் 2023 நிலவரப்படி மத்திய பா.ஜ.க. அரசின் மொத்த கடன் 165 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு மதிப்பில் 60 சதவிகிதம். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி. கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 65 லட்சம் கோடி கடனை அதிகமாக பெற்று இந்தியாவை கடன்கார நாடாக மாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார பேரழிவுக்கு தான் வித்திடுகிறாரே தவிர, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

    இதையெல்லாம் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி தமது சாதுர்யமான மேடை பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விஜயகாந்த் ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர்.
    • மக்கள் நலத்திட்டங்களை ஆண்டுதோறும் கட்சியின் சார்பாக சிறப்புடன் தொடர்ந்து செய்து வந்தவர் விஜயகாந்த்.

    சென்னை:

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், புரட்சிக் கலைஞருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற பெரும் கலைஞராக அவர் திகழ்ந்தார். அதேபோல, அரசியலில் கால் பதித்து புதிய பாதையில் பயணித்து தனக்கென தனி வாக்கு வங்கியை திரட்டி, அதன்மூலம் பல அரசியல் மாற்றங்களுக்கு கருவியாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த்.

    விஜயகாந்த் ஏழை, எளிய மக்கள் மீது மிகுந்த அன்பும், பரிவும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர். மக்கள் நலத்திட்டங்களை ஆண்டுதோறும் கட்சியின் சார்பாக சிறப்புடன் தொடர்ந்து செய்து வந்தவர்.

    விஜயகாந்த் அவர்களது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், தே.மு.தி.க. கட்சியினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
    • இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகமெங்கும் கொண்டாப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    கவலைகள் மறந்து, இன்பம் புகுந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடி மகிழும் என தருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் கிறிஸ்தவப் பெருமக்கள் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் திகழும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    'நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்' என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    கிறிஸ்துவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், 1951-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2023-ல் மக்கள்தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

    எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் அனைவரது வாழ்விலும் இனிமை தங்கவும், மகிழ்ச்சி பெருகவும், செல்வம் சேரவும், ஆரோக்கியம் கூடவும், எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    கிறிஸ்தவத்தை, உலகெங்கும் வாழும் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள மகத்தான பேராளுமையே இயேசு பெருமான் ஆவார். அவரை நினைவு கூர்ந்து இந்நாளில் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதாவது, உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    காங்கிரஸ் சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.:-

    மானுடர்களுக்கு இயேசு பிரான் அருளிய அற்புதமான போதனைகளை கடைபிடித்து நாட்டில் அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், வன்முறை ஒழிந்திடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பொங்கிடவும், சாதி, மத, இன வேற்றுமைகளை மறந்து நல்லிணக்கம் பேணிக்காப்பதற்கு இந்நன்நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்று அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இயேசுபிரான் விரும்பியதைப் போல, இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் தொடங்கி உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிறிஸ்து இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அனைவரும் அன்பினை பகிர்ந்து இந்த நாளை குதூகலத்துடன் கொண்டாடுவோம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் என்பது மத பேதமின்றி அனைவருக்கும் ஒற்றுமையுடன் கொண்டாடும் பண்டிகை. இந்த ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    வரலாறு காணாத பெருமழையால் பெருந்துயரம் கண்ட மக்களின் வாழ்வியல் சூழல் மாறி, இயல்புநிலை திரும்பவும், மகிழ்ச்சி பெருகவும் இனிய கிறிஸ்துமஸ் தினத்தில் எல்லாம் வல்ல இயேசுகிறிஸ்து ஆசிர்வதிக்கட்டும். உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ்:-

    பிறரிடம் நாம் அன்பை எதிர்ப்பார்ப்பதுபோல் நாமும் பிறரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே இயேசு பிரானின் கட்டளை. இதன் அடிப்படை மகத்துவத்துவத்தை உணர்ந்து அனைத்து மத மக்களின் ஆதரவோடு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த இந்நன்னாளில் அனைவரிடத்தும் அன்பை போதிப்போம், ஆன்மீகத்தை உணர்த்துவோம்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    அனைவரிடமும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இந்த திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    இயேசுபிரான் போதித்த அன்பு, பாவ மன்னிப்பு போன்ற அகிம்சை கொள்கைகளை கடைபிடித்து சகோதரத்துவம், ஒற்றுமையுடன் வாழ்தல் போன்று உயரிய லட்சியங்களோடு நாம் அனைவரும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். மனிதநேயம் தழைக்கவும், அன்பு, பாசம், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகள் வளரவும் நாம் அனைவரும் மனித உணர்வோடு ஒன்றுபட்டு வாழ இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:-

    இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி புயல், பெருவெள்ளம், உடமையிழப்பு உயிரிழப்பு ஆகியவற்றைச் சந்திக்கும் அவலங்கள் மக்களுக்கு நேரிட்டன! உலக ரட்சகரும் தேவமைந்தனுமான இயேசு கிறிஸ்து பிறந்த நாளில், துயருற்ற மக்கள் யாவரும் துயர்நீங்கி, அமைதியும் ஆறுதலும் பெற்று இயல்பு வாழ்க்கை வாழ நாம் அனைவரும் அவரைத் துதித்து, இனி வரும் காலங்கள் இனிதாக அமைந்திட வேண்டி நிற்போம்! அனைவருக்கும் எனது அன்பு கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    இயேசுபிரான் இவ்வுலகில் தேவகுமாரனாக அவதரித்த திருநாள்தான் கிறிஸ்துமஸ் நன்நாள். இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. உலகமெங்கிலும் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்துமஸ் திருநாள் உற்சாகத்தோடும் பக்தி பெருக்கோடும் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் நம்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் முத்தையா மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், நிலதரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.மார்டீன் ஆகியோர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.
    • செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவசர அழைப்பின் பேரில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சென்று வந்ததை பெரிது படுத்துகிறார்கள். ஒரு முதலமைச்சர் எங்கிருந்தாலும் சரி, நடக்க வேண்டிய பணிகள் நடக்கும். மழை தொடங்கியதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார்.

    இது போன்ற குற்றச்சாட்டை சொல்ல கூடியவர்கள் மணிப்பூரில் 6 மாத காலம் கலவரம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பிரதமர் மோடி ஒரு முறை கூட அங்கு சென்றதும் இல்லை. அதுபற்றி பேசியதும் இல்லை.


    இதை போன்ற தலைமையை வைத்துக் கொண்டு பேசுவது கண்மூடித்தனமாக தமிழக அரசு மீது வெறுப்பை காட்டுவதாகத்தான் அர்த்தம்.

    தமிழகத்துக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக எதுவும் ஒதுக்கவில்லை. தர வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளார்கள். தற்போது ஏற்பட்ட பெரும் சேதத்துக்கு தனியாக நிவாரணம் தர வேண்டும்.

    நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக் குறைவும் இல்லை. அவர் பேச்சு வழக்கில் பேசுவது போல் பேசி உள்ளார். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். சொல்ல வேண்டியதையே சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×