search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
    • வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.

    தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

     பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

     இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    • கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது
    • பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது

    கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதம் முழுவதும் வெயில் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.

    பல உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள். கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




    வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதால், ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின் தேவை அதிகரிகரித்துள்ளது. இரவு நேரத்தில் மக்கள், 'ஏசி' சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே, மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

    இந்நிலையில் வெப்ப அலை வீசுவதால் தமிழகத்தின் மின்சார தேவை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சீரான மின் விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருகிறது.



    கடந்த 30 - ந்தேதி அதிகபட்ச மின் தேவை 20,701 மெகாவாட் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் மின் தேவை தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கோடை வெப்ப அலையின் தாக்கத்தால், தமிழ்நாட்டின் மின் தேவை 20,830 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் வெப்ப அலை காரணமாக நேற்று 2 -ந்தேதி முதல் மாநிலத்தின் மின் தேவை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

    • வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த சிரம்மத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீரை விநியோகித்து வரும் நிலையில், கோடை காலத்தில் வறட்சி நிலவும் என்பதால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

    இந்நிலையில், பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பொதுமக்கள் இடையே நிம்மதியடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது.
    • செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு சவாலாக இருக்கிறது. பள்ளிகள் விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கு வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது. வீட்டிலேயே குறைந்த செலவில் ஐஸ்கிரீம் கிடைந்ததால் எப்படி இருக்கும். அதைதான் நான் இப்போது சொல்ல போகிறேன். வாங்க அனைவரும் ஜில் என்று ஆகலாம்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி - 1

    கிரீம் மில்க் - 750 ml

    சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு முழு தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    * நறுக்கிய தர்பூசணி துண்டுகளை கரண்டி கொண்டு நன்கு நசுக்கி சாறு எடுக்க வேண்டும். (குறிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது)

    * பின்னர் அந்த சாரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் மாற்றில் அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு செய்ய வேண்டும்.

    * அந்த சாரானது ஒரு திக்கான கலவையாக வந்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். (குறிப்பாக 1 டம்ளர் சாறு அரை டம்ளர் வந்தவுடன்)


    * அடுத்ததாக கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹாண்டு மிக்சரை வைத்து அதை நன்கு மிக்ஸ் செய்து ஒரு திக்காக கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும். அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்யவேண்டும்.

    * சர்க்கரையும், மில்க் கிரீமும் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் தயாரித்து வைத்துள்ள தர்பூசணி திரவத்தை அதனுடன் சேர்த்து, பின்னர் அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து ஒரு நல்ல கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.

    * பின்னர் இதை ஒரு கண்ணாடி பவுல் அல்லது வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஃப்ரிசரில் 4 முதல் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.

    5 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் சுவையான ஐஸ்கிரிம் ரெடி. இந்த வெயிலுக்கு குடும்பமாக செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    • வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.
    • சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை.

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றுமு், நாளையும் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, மே 4ம் தேதி முதல் மே 6ம் தேத வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இன்று வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்தி வந்த நிலையில், திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.

    இந்நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால், சற்று வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல், ராசிபுரத்தில் வெளியில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு நடுவே திடீரென கோடை மழை பெய்தது.

    இதேபோல், சேலம் ஏற்காட்டில் சுட்டெரித்து வந்த வெயிலுக்கு இடையே கோடை மழை கொட்டியது.

    அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    • கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6ம் தேதி வரை விடுமுறை.
    • கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை விதிப்பு.

    கேரளாவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுத்து கேரள அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்துக்கு பிறகு கேரள அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

    மேலும், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் ஒத்திகை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

    • பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    கோவை:

    தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறை பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியிருப்பதாவது:-

    தினமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைய தண்ணீர் பருக வேண்டும், தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் பருக வேண்டும் என்ற நிலையில் இருக்கக் கூடாது. வெளியில் செல்லும் போதும், பயணத்தின் போதும் குடிநீரை தவறாமல் எடுத்துக் செல்லுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உடல் வெப்பத்தினை தணிக்கக் கூடிய ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை சாறு, இளநீர், மோர், பழச்சாறுகள், பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மெல்லிய தளர்வாக பருத்தியினால் ஆன வெளிர்நிற ஆடைகளை அணியலாம். மதிய நேரங்களில் வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பி போன்றவற்றை உபயோகப்படுத்தி நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை தவறாமல் அணிய வேண்டும்.

    நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த பகுதிகளில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளை தடுக்கவும், பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும், குளிர்ந்த காற்றை உள்ளே அனுமதிக்க இரவில் அவற்றை திறக்கவும். வெளியில் செல்வதாக இருப்பின் பகல் நேரத்தினை தவிர்த்து காலை அல்லது மாலையில் உங்கள் பணிகளை திட்டமிடவும்.

    கடுமையான வெப்பத்தின் காரணமாக யாரும் எந்த நேரத்திலும் வெப்ப அழுத்தம் மற்றும் வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம் என்பதால் கீழ்க்காணும் நபர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள், மனநோய் உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இதயநோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். குளிர்ந்த காலநிலை பகுதியில் இருந்து வெப்பமான காலநிலை பகுதிக்கு வரும் நபர்கள் தங்களது உடல், வெப்பமான சூழலிற்கு பழகுவதற்கு ஒருவார காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தனியாக வாழும் வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலம் தினசரி கண்காணிக்கப்பட வேண்டும். பகலில் கீழ்தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள். உடலை குளிர்விக்க மின்விசிறி, ஈரத்துணிகளை பயன்படுத்தவும்.

    வெப்பமான சூழலில் வெயிலில் செல்லும் காலஅளவு குறைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வெயிலின் கீழ் கடுமையான உடல் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும், கோடை கால கடுமையான வெப்பமான சூழ்நிலையில் பணிபுரிவோர் நேர இடைவெளி விட்டு பணிபுரிய வேண்டும்.

    பணிபுரியும் இடத்திற்கு அருகில் குளிர்ந்த குடிநீர் வழங்கப்பட வேண்டும், நீரோற்றமாக இருக்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் அதிகமாக அடிக்கடி தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

    பணிச்சூழலில் வெப்பநிலையை ஈரப்பதம் மற்றும் சரியான காற்றோட்டம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அந்த நபரை குளிர்ந்த சூழலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் போதுமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும், மதிய வேளைகளில் கடினமான செயல்களை தவிர்க்கவும்.

    மதியவேளையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும், சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்று வரும் பொருட்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறக்கவும்

    மது, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் அல்லது அதிகளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும். இவை அதிக நீர்ச்சத்தை இழக்க வழிவகுக்கும். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம். நிறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ உள்ளே வைத்து விட்டு செல்ல வேண்டாம். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம். சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் வாகனங்களை குழந்தைகள் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.
    • சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தில் பதிவாகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து மாலை வரை நீடிக்கிறது. மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து சுமார் 108 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. இந்தியா அளவில் வெயிலின் தாக்கம் 2-ம் இடத்தில் இருந்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    பெரும்பாலும் மக்கள் மதிய நேரம் வெளியே செல்லும்போது நெருப்பில் நடப்பது போல் இருப்பதால் அவர்கள் வெளியே நடமாடுவதை குறைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் நீர்சத்து உள்ள உணவு வகைகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் ஈரோட்டில் பெரும்பாலான இடங்களில் கம்மங்கூழ் மற்றும் ஜூஸ் கடைகள் அதிகளவில் உருவாகி வருகிறது.

    ஈரோட்டில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஒரு சில இடங்களில் மட்டுமே கம்மங்கூழ் கடைகள் இருந்தது. ஆனால் மக்கள் பகல் நேரங்களில் அதிகளவில் கம்மங்கூழ் மற்றும் ராகி கூழ் அருந்தி வருகிறார்கள். ஒரு சிலர் வீடுகளில் கூழ் செய்து அருந்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கூழ்கள் தேவை அதிகரித்து வருகிறது.

    இதனால் ஈரோடு மாநகரில் கூழ் கடைகள் அதிகரித்து வருகிறது. பஸ் நிலையம் பகுதியில் 10-க்கு மேற்பட்ட கடைகள் வியாபாரிகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளில் ஏராளமான மக்கள் வந்து கம்மங்கூழ் வாங்கி பருகி வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, சத்தி ரோடு, பன்னீர் செல்வம் பார்க் பகுதி, வீரப்பன்சத்திரம், ரெயில் நிலையம் உள்பட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கம்மங்கூழ் கடைகள் வழக்கத்தை விட அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஈரோடு மூலப்பட்டறை அருகே வ.உ.சி. பார்க் பகுதி, சேலம் ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய இடங்களில் கம்மங்கூழ் கடைகள் அதிகரித்து உள்ளது. அந்த பகுதியில் 1 கடை மட்டுமே இருந்தது. தற்போது அங்கு பல கடைகள் உருவாகி உள்ளது. அங்கு கம்மங்கூழ், ராகி கூழ், மோர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வழக்கத்தை விட வியாபாரம் அதிகரித்து உள்ளது.

    மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் சிறிய சந்துகள் உள்பட எங்கு பார்த்தாலும் கம்மங்கூழ் கடைகள் உள்ளது. இதனால் கம்மங்கூழ் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சாத்துக்குடி, தர்பூசணி உள்பட நீர் சத்துள்ள பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் ஈரோட்டில் கரும்பு ஜூஸ் கடைகளும் அதிகளவில் உள்ளது. இந்த கடைகளில் மக்கள் அதிகளவு வந்து கரும்பு ஜூஸ்களை பருகி வருகிறார்கள்.

    • புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.
    • சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலே முடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.

    சமூக ஆர்வலரான இவர் சில நாட்களாக தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியை பின்புறம் கட்டி அதில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் புதுச்சேரி நகர பகுதியில் வலம் வருகிறார்.

    இதனை கடும் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்தை சீரமைக்கும் போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று வெப்பத்தை தணிக்கும் வகையில் அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை கொடுத்து வருகிறார்.

    இவருடைய சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.
    • மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது.

    மணிலா:

    தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது.

    நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் வெப்ப தாக்கம் காரணமாக பிலிப்பைன்சில் இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    • பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில வினாடிகள் லேசான தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவாகி வரும் நிலையில், கணிசமாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரி யவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர்.நேற்று முதல் சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு வெளியில் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.
    • செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பொதுமக்கள் இந்த பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ள என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என தெளிவாக கூறியுள்ளார்.

    கோடை வெயில் சுட்டெரித்து வரும் இக்கால கட்டத்தில் பொது மக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கப்படும் என்று இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள், வழிமுறைகள் விவரம் வருமாறு:-

    சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், விவசாயிகள், பயணிகள், காவல் துறையினர், வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யக் கூடியவர்கள், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குழந்தைகள், குறிப்பாக பச்சிளம் குழந்தைகள், நோய் வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் மிகுந்த கவனமுடன் வெயிலில் செல்லாமல் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள், போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும். மேலும் ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம்.

    பொதுமக்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ். கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


    மேலும் கோடை வெயில், வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பயணத்தின் போது குடிநீரை எடுத்து செல்லவும், ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கலாம். பருவகால பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருங்கள், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும், வெளியில் செல்லும் போது காலணிகளை அணியவும், மதிய நேரத்தில் குடை பிடித்து செல்ல வேண்டும்.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குறிப்பாக மதியம் 11 மணி முதல் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். வெயில் காலங்களில் வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    சிறு குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்கவும்.

    வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யுங்கள். வெப்பத்தால் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவுங்கள், குழப்பமான மன நிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவுங்கள். மருத்துவ உதவிக்காக காத்திருப்பவர் களுக்கு 108 மூலம் உதவி செய்யவும், வெயிலில் பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகள் மேல் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். மருத்துவ உதவி தேவைப்படுவோர் 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

    ×