search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப அலை"

    • வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்.
    • நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

    நியூயார்க்:

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.

    ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:-

    வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

    வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது.

    வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார். வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
    • வடக்கு மாகாண பகுதிகள் தான் கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    மெக்சிகோ:

    மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது.

    கடந்த 3 வாரங்களாக உடலில் நெருப்பை அள்ளி போட்டது போல வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இருந்த போதிலும் கடும் புழுக்கத்தால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கொளுத்தும் வெயிலுக்கு வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. வடக்கு மாகாண பகுதிகள் தான் இந்த கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    • நாடெங்கும் வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    • பல்வேறு மாநிலங்களின் வெப்ப அலை நிலவரம், தேவையான வினியோக பொருட்கள், ஆஸ்பத்திரிகளின் படுக்கை கட்டமைப்பு பற்றி சுகாதாரத்துறை மந்திரி விளக்கினார்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களான உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இன்னும் பல மாநிலங்களிலும் வெயில் தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறது. தினமும் சராசரியாக 108 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி வருகிறது.

    இந்த வெயிலால் வெப்ப அலைகளும் தாக்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பல்வேறு வெப்ப நோய்களின் தாக்குதலுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.

    இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    நாடெங்கும் இந்த வெப்ப அலைகளை சந்திப்பதற்கான தயார் நிலை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கிறபோது விரைவான நடவடிக்கை எடுக்கவும் என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    வெப்ப அலைகளினால் மக்களின் ஆரோக்கியம் லேசான அளவில் மட்டுமே பாதிக்கக்கூடிய அளவில் பார்த்துக்கொள்ள ஆராய்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. வெப்ப அலைகளை எதிர்கொள்வதில் குறைந்த, நடுத்தர நீண்டகால செயல் திட்டங்கள் என்ன என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய தேசியத்திட்டத்தின்கீழ், வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்புகள் குறித்து தினமும் எல்லா மாநிலங்களிலும் கண்காணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    பல்வேறு மாநிலங்களின் வெப்ப அலை நிலவரம், தேவையான வினியோக பொருட்கள், ஆஸ்பத்திரிகளின் படுக்கை கட்டமைப்பு பற்றி சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா விளக்கினார்.

    வெப்ப அலையை எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படுகிற உடல்நல பாதிப்புகளை சந்திக்க உதவுவதற்காகவும் பீகாருக்கும், உத்தரபிரதேசத்துக்கும் மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெளிந்து போனது.
    • இதைக்கண்ட ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

    லக்னோ:

    வட இந்தியாவின் சில மாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் - பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரெயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரெயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.

    இதனால் அந்த ரெயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    அப்போது தண்டவாளங்கள் சீர்குலைந்து இருப்பது தெரியவந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரெயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப் லைனில் பிற ரெயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார்.

    பைலட்டின் சாமர்த்தியத்தால் ரெயில் விபத்து தடுக்கப்பட்டதால், அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது.
    • இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

    இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்தியாவின் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் இந்த விபரங்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான வெப்பம் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் டெல்லியின் வெப்ப நிலை 114 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இது மிக அதிக வெப்பநிலை ஆகும்.

    இதுபோல நாட்டின் பல முக்கிய நகரங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற வெப்பம் காரணமாக இந்தியாவில் பல ஆயிரம் பேர் பலியானதையும் விஞ்ஞானிகள் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்தியாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்தியாவின் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தால் இவர்களின் உழைப்பு பாதிக்கப்படும். இது நாட்டின் தொழில் வளத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது.
    • அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

    இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * 2030-ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியாவில் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.

    * இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 2040-ம் ஆண்டுவாக்கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.

    * அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார்பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.

    * மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

    * போக்குவரத்தின்போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி) அளவுக்கு ஏற்படலாம்.

    * தற்போதைய அளவுடன் ஒப்பிடுகையில் 2037-ம் ஆண்டுக்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை வீசி வருகிறது.
    • இந்த வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    லண்டன்:

    ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் வெப்பம் தகிக்கிறது. லண்டனில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி அங்குள்ள மக்களை அதிர வைத்தது.

    இந்நிலையில், போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

    தற்போது நிலவும் வெப்ப நிலை குறித்து வானியல் நிபுணரான டைய்லர் ராய்ஸ் கூறுகையில், 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000 பேர் வரை பலியாகினர். 1757-ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பா அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    • கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
    • கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது.

    ஷாங்காய்:

    சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஷாங்காய் நகர் ஜூலை 5 முதல் தொடர்ந்து ஆறு நாட்களாக மிக அதிக வெப்பநிலையைக் காண்கிறது.

    கடுமையான வெப்பநிலை அதிகரித்து வருவதால், ஷாங்காய் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடுமையான வெப்பத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்குதலை தவிர்க்கவும், நண்பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பகல் நேரங்களில் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும், அதிக வெப்பநிலையில் வெளியே வரும் தொழிலாளர்கள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், அங்குள்ள வானிலை ஆய்வு மையம், மாகாணத்தின் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த வாரம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக, சீனா மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டது. நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 39 அல்லது 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது.

    ×