என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 19-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
- சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதாவது 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக காணப்படும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி வரை இருக்கும். ஆந்திரபிரதேச கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தில் நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 101.4 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரையில் 101.3 டிகிரி, ஈரோட்டில் 101.1 டிகிரி கொளுத்தியது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினா விளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனி க்கோட்டை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, தானியமங்கலத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






