search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெப்ப அலையால் உருகிய தண்டவாளம் - டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு
    X

    வெப்ப அலையால் உருகிய தண்டவாளம் - டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

    • உத்தர பிரதேசத்தில் வெப்ப அலையால் ரெயில் தண்டவாளம் வளைந்து நெளிந்து போனது.
    • இதைக்கண்ட ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தார்.

    லக்னோ:

    வட இந்தியாவின் சில மாநிலங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பக் காற்று வீசுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் - பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரெயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரெயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.

    இதனால் அந்த ரெயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரெயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரெயிலை இயக்காமல் நிறுத்தினார். உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    அப்போது தண்டவாளங்கள் சீர்குலைந்து இருப்பது தெரியவந்தது. கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரெயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப் லைனில் பிற ரெயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது.

    இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த லக்னோ கோட்ட ரெயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார்.

    பைலட்டின் சாமர்த்தியத்தால் ரெயில் விபத்து தடுக்கப்பட்டதால், அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×