search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "struggle"

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காக்காப்பாளையம்:

    இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.

    இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    • மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தருமபுரி:

    தமிழகத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.

    இந்த வேலை நிறுத்தத்தையொட்டி இன்று மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், கடந்த 8 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வெளியிடாத முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும், நெல்லை, சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு கடந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகுதி 5 சதவீத உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 64 கிளைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.
    • பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவார பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் . எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாளான் குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள மீனவ கிராமங்களுக்குள்ளும் மழை வெள்ளத்தின்போது எண்ணெய் பரவி வீடுகளில் படிந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் பாழாகின. எண்ணெய் கழிவால் மீனவர்களும்,திருவொற்றியூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. எனினும் எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் சிலரும், திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்துகோரிக்கை விடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த எண்ணெய் கழிவு எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை பரவி உள்ளது. இதனால் அங்குள்ள மீனவ கிராமத்தினரும் நிவாரண உதவி கேட்டு போராட்டங்கள் அறிவித்து உள்ளனர்.

    கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை பெரும்பாலும் படகில் சென்று மீனவர்கள் மக்கு மூலம் எடுத்து அகற்றினர். அதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இதற்குள் எண்ணெய் கழிவுகள் தரையில் 3 அடி வரை சென்றுவிட்டது, எண்ணெய் கழிவுகளை அகற்ற எந்த வித நவீன எந்திரமோ, மாற்று ஏற்பாடோ செய்யப்படவில்லை. இதுவும் தற்போது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி எண்ணூர் துறைமுகத்தில் கடலில் 2 கப்பல்கள் மோதிக்கொண்டபோது பல டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இந்த எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து திரு வான்மியூர் வரை பரவியது.

    உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெய் கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்தது. அதனை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் கடல் நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் நவீன எந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக வாளிமூலம் எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் தற்போதும் எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்தவும் நவீன எந்திரம் எதுவும் இல்லாததால் எப்போதும் போல் மீனவர்களே படகில் சென்று மக்கு மூலம் எடுத்து பீப்பாய்களில் நிரப்பினர். இது பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மீண்டும் கேள்வியை எழுப்பி உள்ளது.

    2017-ம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் கசிவை படிப்பினையாக வைத்து கடலில் எண்ணெய் கலந்தால் அதனை எளிதில் பிரித்து எடுக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நவீன எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2017-ம் ஆண்டின் சம்பவத்திற்கு பிறகும் பாடம் கற்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல் அடுத்தடுத்து மழை வெள்ளம், எண்ணெய் கசிவு பாதிப்பில் இருந்து எண்ணூர் மற்றும் சுற்றி உள்ள மீனவ கிராமமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் தவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மொத்தத்தில் எண்ணூர் எண்ணெய் கசிவால் அப்பகுதியில் சுற்றுச்சூழல், கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இதுபோன்று எண்ணெய் கசிவு மற்றும் தொழிற்சாலை விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராத தொகை கோடிக்கணக்கில் இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மூடப்படும் நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்று தெரிகிறது. மேலும் இழப்பீடுகளும் வெளிநாடுகளைப் போல் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவததை தடுக்க எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்? விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து சமூகஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    மழை வெள்ளம், எண்ணெய் கசிவு அமோனியா வாயு கசிவு என அடுத்தடுத்து ஏற்பட்ட இன்னல்களால் எண்ணூர் பொதுமக்கள் சொல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை.கடலில் எண்ணெய் கலந்ததால் மீன்கள் இறந்து உள்ளன. மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித்து உள்ளது. ஆனால் இது எத்தனை பேருக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. . கடந்த 2017-ம் ஆண்டு எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் கடலில் கலந்த போது அதனை அகற்ற பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கலந்து உள்ளது. 2017-ம்ஆண்டுக்கு பிறகு அந்த எண்ணெய் விபத்தில் இருந்து எந்த பாடமும் படிக்காமல் அதே நிலையில் தான் நாம் உள்ளோம். எந்த பாதுகாப்பு உபகரணங்களும், எண்ணெய் தண்ணீரில் கலந்தால் அதனை அகற்ற தொழில் நுட்ப எந்திரங்களும் இதுவரை இல்லை. இது தொடர்பாக எந்த தெளிவான யோசனையும் இல்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் எங்கும் இல்லை என்றே தெரிகிறது. மீண்டும் இது போன்ற விபத்து ஏற்படாமல் இருக்க எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மீட்பு பணிகள் அனைத்தும் காகித அளவில்தான் உள்ளன. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், நடந்தால் அடுத்து எடுக்கவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ஏற்கனவே பாதிப்பில் இருந்த எண்ணூர் பகுதி மக்கள் இப்போது உரத்தொழிற்சாலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவால்மீண்டும் நிலைகுலைந்து உள்ளனர். அவர்களது உயிருக்கு பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. தொழிற்சா லைகள் சரியான முறைப்படி பாதுகாப்புடன் இயங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இங்கு தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது எதற்காக என்று தெரியவில்லை. இங்கு இது போன்ற தொழிற்சாலைகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசு நடத்துவதால் நடவடிக்கை இல்லையா? என்று புரியவில்லை. நமது நாட்டில் இதுபோன்ற தொழிற்சாலை விபத்துக்களில் எவ்வளவு பேருக்கு நிவாரண உதவிவழங்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    எண்ணெய் கசிவால் கடலில் உள்ள மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை எப்படி மீட்டெடுப்பார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது பற்றிய எந்த தெளிவான விளக்கமும் இதுவரை இல்லை.

    மேலும் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. இங்குள்ள தாவரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படிந்து இருந்ததை நாங்கள் பார்த்தோம். இதனால் சுற்றுச்சூழலின் சமநிலையே கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்த அலையாத்தி காடுகள் கடுமையான கடல் சீற்றம் மற்றும் சுனாமியின் போது பாதுகாப்பு அரணாக இருக்கும். அங்குள்ள விலங்குகள் மிகவும் முக்கியமானது.


    இதேபோல் பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத அளவில் இருந்தன.

    இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் அஜாக்கிரதையாக இருப்பதாகவே தெரிகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது. அபராத தொகையும் கூடுதலாக விதிக்க வேண்டும். அப்படியானால் தான் இது போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யோசித்து சரியான நடவடிக்கை எடுப்பார்கள். வெளிநாடுகளைப் போல் விபத்து ஏற்படும் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 2017-ம் ஆண்டு முதல் இதுவரை என்ன முயற்சி எடுத்து உள்ளோம்? இப்போதைய எண்ணெய் கசிவு பற்றி 2017-ம் ஆண்டு போல் பேசப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன.

    சென்னை:

    சென்னை, எண்ணூர் பெரியகுப்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழி ற்சாலையில் மூலப்பொருளான அமோனியா திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் உள்ள சிறு துறை முகத்திலிருந்து குழாய்கள் மூலமாக திரவ வடிவில் மைனஸ் 33 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் இத்தொழிற்சாலை சேமிப்பு தொட்டியில் சேகரி க்கப்பட்டு, உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழி ற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் குழாயில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு பரவியது.

    இதனால் அதனை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட 10 கிராம மக்கள் பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அவர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான மக்கள் அமோனியா வாயுவில் இருந்து தப்பிப்பதற்காக திருவொற்றியூர் டோல்கேட் வரை வந்து அந்த பகுதியில் தஞ்சம் அடைந்தனர். மேலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுமார் 60 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாயு கசிவை நிறுத்தினார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 நுரையீரல் நிபுணர்களை கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலையின் தரத்தை மதிப்பீடு செய்ய தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காற்றில் 0.57 பிபிஎம் அம்மோனியா வாயு கலந்திருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் வாயு கசிவின்போது, தொழிற்சாலை நுழைவு வாயிலில் 28 பிபிஎம் அம்மோனியா வாயு இருந்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 51 சதவீதம் அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அமோனியா வாயுவை சுவாசித்தவர்களுக்கு காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது. முதலில் அவர்களுக்கு தொண்டை எரிச்சலுடன் சளி தொற்று காணப்பட்டது. பின்னர் காய்ச்சல் ஏற்பட்டது. அமோனியா வாயுவை சுவாசித்த 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொழிற்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவில் பெண்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். சில ஆண்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே அமர்ந்திருந்தனர்.

    இன்று காலையில் மீண்டும் பொதுமக்கள் திரண்டு வந்து 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். உரத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டு இருந்தாலும், அதை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே குழாயில் ஏற்பட்ட கசிவால் அமோனியா கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட உயிரினங்கள் சுவாசிக்க முடியாமல் செத்து மிதக்கின்றன. மேலும் கடல் நீர் வெள்ளை நிறமாக மாறியதுடன் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.

    • 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
    • தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சடையனேரி குளம் உள்ளது.

    இந்த குளம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தினால் குளம் உடைந்து விவசாய தோட்டங்கள் மற்றும் அடப்பநல்லூர், செட்டியா பத்து, கூழையன் குண்டு, அருணாச்சலபுரம், தண்டு பத்து, அரசூர்பேட்டை, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டி விளை, பரமன்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    இதனால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் கிராம அதிகாரி கணேச பெருமாள் நேரில் பார்வையிட சென்ற போது வெள்ளாளன்விளை பொது மக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதால் கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து உடைந்த சடையனேரி குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் ஏராளமான கிராமங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். 

    • மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    • தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்தி கிராமத்தை அடுத்து அம்மாபாத்துரையில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.

    இங்கு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். கல்லூரி விடுதியில் சேர்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்ற போதும் மாணவிகளிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விடுதியில் மாணவிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவிகள் தெரிவிக்கையில், தற்போது இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளோம். மாணவிகளுக்கு ரேசன் அரிசியில்தான் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. பல நேரங்களில் சுகாதாரமற்ற முறையில் உண்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    குடிநீர் இல்லாததால் வெளியில் இருந்து மாணவிகள் தண்ணீர் கேன்கள் விலை கொடுத்து வாங்கி வருகிறோம். கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. நாப்கீன்கள் வைக்கும் எந்திரம் சுகாதாரமான முறையில் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமையலர், தூய்மை பணியாளர்கள், காவலாளிகள் ஆகியோர் இருந்தும் அவர்களது பணியை முறையாக செய்யவில்லை. விடுதி அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இலவச விடுதியில் இவ்வாறுதான் இருக்கும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர்.

    எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனிடையே மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு தாங்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்ததை அடுத்து விடுதி திறக்கப்பட்டது. மாணவிகள் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பாத்துரை போலீசார் மற்றும் ஆத்தூர் தாசில்தார் வடிவேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    • 1900 ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு வேலை செய்து வருகின்றனர்.
    • மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என கூறி ஆஸ்தான மண்டபம் அருகே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி கோவில் வளாகங்கள், பக்தர்கள் தங்கும் அறைகள், கழிப்பறைகள், வைகுந்தம் சமையலறை உள்ளிட்டவைகளை பராமரிக்கபட்டு வருகின்றன.

    இதற்காக 1900 ஒப்பந்த பணியாளர்கள் துப்புரவு வேலை செய்து வருகின்றனர்.

    சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் இ.எஸ். ஐ, பி.எப் பிடித்தம் போக மாதந்தோறும் ரூ.9,600 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் அந்த நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்கள் 2 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என கூறி ஆஸ்தான மண்டபம் அருகே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அலுவலர் தேவி, வி.ஜி.ஓ நந்தகிஷோர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஏற்கனவே 2 மாத சம்பளம் வழங்காமல் உள்ள சுலப் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கடந்த மாதம் 15, 16-ந் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.
    • சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் அடுத்த பூமாண்ட கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூரணி (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து உள்ளார்.

    வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த நிலையில் பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்து உள்ளனர்.

    மேலும் சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர். இந்நிலையில் பூரணி கர்ப்பமானார். அப்போதும் அவரைப் பார்க்கவிடாமல் மதன்குமார் வீட்டார் தடுத்து விட்டனர்.

    பூர்ணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி திடீரென பூரணிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் பூரணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பூரணி பெற்றோர் மகளை பார்க்க சென்றபோதும் மகன் குமார் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி பார்க்க விடாமல் செய்துவிட்டனர்.

    இதனை அடுத்து பூரணி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் பூரணியின் உடல் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரதே பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 15, 16-ந் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன் குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு பூரணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென முற்றுகையிற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பூரணி பெற்றோர் கூறும்போது, எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது. எனது மகள் சாவில் மதன்குமார் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

    கிட்டத்தட்ட மதன்குமார் குடும்பத்தினர் தலைமறைவாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. போலீசார் அவர்களை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எஸ். பி. அலுவலகத்தில் திடீரென கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பூரணி உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பூரணி உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

    • அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
    • தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் கடந்த 20 ஆண்டு காலமாக 47 சுய உதவி குழுக்கள் மூலமாக 753 தூய்மை தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக அனைத்து சுய உதவிக்குழு தூய்மைத் தொழிலாளர்களையும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகவும், தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் பணி வழங்க மாட்டோம் என்றும் அறிவித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த அக்டோபர் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அனைத்து தூய்மை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

    இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொழிலாளர் துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் டவுன் தாசில்தார் விஜயலெட்சுமி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, தொழிலாளர் துறை துணை ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சங்க தலைவர்களும், சுய உதவிக்குழு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் வேலை வழங்கப்படும், ஒப்பந்த பத்திரத்தில் யாரிடத்திலும் கையெழுத்து வாங்கப்படமாட்டாது என்றும், இதன் அடிப்படையில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்வது என்றும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் தற்போது மாநகராட்சியில் அனைத்து சுய உதவிக்குழு தொழிலாளர்களும் மீண்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணி செய்ய முடியும். அப்போது தான் வேலை வழங்க முடியும் என்று கூறி இன்று முதல் அனைத்து சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கும் வேலை வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறி இன்று தூய்மை பணியாளர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யூ. செயலாளர் முருகன், மோகன் ஆகியோர் தலைமையில் வேலை வழங்க கோரி இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
    • கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆலை அரவை தொடங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.

    ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    உடனடியாக அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், தங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்பு அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்பு வழக்கம்போல ஆலைகள் செயல்பட தொடங்கியது.

    இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    ×