search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டுக்காடு"

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    மிச்சாங் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தின் போது திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 3,4,10, -ம் வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்தனர். ஆனால் அங்கு வசிப்ப வர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப் படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பழைய கரிகாட்டுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கானாத்தூர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புயல் மழையால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி பொருட்கள் சேதம் அடைந்தன. 4 நாட்களுக்கு மின்சாரம் தடைப்பட்டது. ஆனால் எங்களுக்கு நிவாரணத்தொகை வழங்காதது ஏன்? என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×