search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "halt"

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சபரிமலை சீசனுக்காக இயக்கப்படும் தாம்பரம்-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் இடையே நவம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்படுகிறது.

    அய்யப்பன் கோவில் சீசனுக்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தமிழகத்தின் முக்கிய ஆன்மீக நகரங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஏற்கனவே எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரி மலை சிறப்பு ரெயிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிற்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோவில்களில் தரிசிக்கவும், சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழும் மலையாக செல்லும் நிலையில் ஆன்மீக விழாவுக்காக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பயணிகளும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    • நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்ப்பரப்பில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் பூலாம்பட்டி கதவனை பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பயணிகளின் பாதுகாப்பினை கருதி நேற்று முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மறுகரைக்கு செல்ல சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கோனேரிப்பட்டி கதவனை பாலம் வழியாக பயணிகள் ஆற்றினை கடந்து வருகின்றனர். வெள்ள அபாயம் குறையும் வரை தொடர்ந்து விசைப்படகு போக்குவரத்து நடைபெறாது எனவும், அதுவரை பயணிகள் பரிசல் மற்றும் இதர பயன்பாட்டின் மூலம் ஆற்றினை கடக்க முயற்சிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×