search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் போராட்டம்"

    • போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 820 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கவுண்டம்பாளையம் அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது36) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு ஆதரவாக ஆலாந்துறை அரசு பள்ளியை சேர்ந்த 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளி எதிரே உள்ள சிறுவாணி சாலையில் திரண்டனர்.

    பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஆசிரியர் ஆனந்தகுமார் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மிகவும் நல்லவர்.

    அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்(பொறுப்பு) கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாணவ, மாணவிகள் ஆசிரியரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறியபடியே போராட்டத்தை கைவிட மறுத்து கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

    இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அங்கிருந்து எழுந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்றனர்.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் அங்கு விரைந்து வந்தார்.

    அவர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து நேராக பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்ல முயன்றார்.

    அப்போது மாணவர்கள் பள்ளிக்குள் வர மறுத்தனர். போலீசார் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒருவழியாக மாணவர்களை உள்ளே அழைத்து சென்ற போலீசார் அவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்தனர். அவர்களுக்கு பேரூர் டி.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

    மாணவர்களின் போராட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இவர்கள் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • விடுதி காப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதி பெண் குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

    தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டியில் அரசு மாணவியர் விடுதி ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் 56 மாணவிகள் தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவிகள் அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி சுற்று வட்டார கிராமப் பகுதியில் உள்ள பட்டியல் இன ஏழை மாணவிகள் அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் தாங்கள் இருக்கும் அரசு விடுதியில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாததால், அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விவசாய கிணற்றில் இருந்து பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்து வந்து விடுதியில் குளித்து வருவதாக கூறப்படுகிறது.

    கழிப்பிட வசதி இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதி முட்புதர்கள். ஓடை போன்ற பகுதிகளுக்கு சென்று காலைக்கடனை கழித்து வரும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அவதி அடைந்த பள்ளி மாணவிகள் இன்று காலை 8.30 மணியளவில் அடிப்படை வசதிகளை எங்கள் விடுதிக்கு செய்து கோரி கூறி திடீரென விடுதி முன்பு உள்ள நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் தரையில் அமர்ந்து காலி பக்கெட்டுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மாணவிகளின் பரிதாப நிலை அறிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவிகளுக்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று விடுதி காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து விடுதி மாணவிகள் கூறியதாவது:-

    அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம், இது குறித்து விடுதி காப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் காலை கடனை கழிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே உடனடியாக அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு அடிப்படை செய்திகளை செய்து தர வேண்டும் என்று முறையிட்டனர்.

    தகவல் அறிந்து வந்த விடுதி காப்பாளர் சித்ரா இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ இன்ஸ்பக்டர் லதா நேரில் சென்று மாணவியரின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக மாணவிகளுக்கு உறுதியளித்தார். இன்று காலை திடீரென பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெற்றோர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
    • போலீசாரின் பேச்சுவார்தையடுத்து கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுற்று பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    பள்ளி தலைமை ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சாந்தி மாணவிகளை துன்புறுத்தி வருவதாக கூறியதால், ஆத்திரம் அடைந்த மாணவி களின் பெற்றோர்கள் சிலர் தலைமை ஆசிரியையிடம் நேரில் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று காலை பள்ளி வந்த மாணவிகள் தலைமை ஆசிரியை மீது தவறான புகார் கொடுத்துள்ள தாகவும், அவருக்கு ஆதரவாக பெற்றோர்களை கண்டித்து பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவி களிடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் சமரசம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார்.
    • தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்து 3 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

    குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக புகார் கூறிய மாணவிகளை தலைமை ஆசிரியை மிரட்டியதுடன் கணவரை வைத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுப்பதாகவும், முட்டிபோட வைத்து கொடுமை படுத்தியதாகவும் புகார் கூறினர். இதனால் தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும். வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் மோகன், சந்தோஷ்குமார், மற்றும் வருவாய்துறையினர், போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து தலைமை ஆசிரியையும் மாணவிகளிடம் என்மீது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினார். தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு பக்கங்களை தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்டு செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர்.
    • திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது.

    பழமையான கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் குருசுகுப்பத்தில் உள்ள என்.கே.சி. பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 பள்ளிகளும் ஷிப்ட் முறையில் இயங்கி வந்தது. என்.கே.சி. பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளி இயங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இந்த ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை சவரிராயலு வீதியில் உள்ள திரு.வி.க. ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    திரு.வி.க. பள்ளி மாணவர்கள் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு மாற்றி ஷிப்ட் முறையில் இயக்க முடிவு செய்தனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் வீரமாமுனிவர் பள்ளிக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தினர். அதேபோல வீரமாமுனிவர் பள்ளி மாணவர்களும் ஷிப்ட் முறையில் பள்ளி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று பள்ளி திறந்த போது சுப்பிரமணிய பாரதியர் பள்ளி மாணவிகள் திரு.வி.க. பள்ளிக்கு சென்றபோது பள்ளி நடைபெறவில்லை. பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.

    இன்று திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளிக்கு இடம் இல்லாத நிலைக்கு சுப்பிரமணிய பாரதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தள்ளப்பட்டனர்.

    இதையடுத்து மாணவிகள் கல்வித்துறை நோக்கி பெற்றோர்களுடன் செல்ல முயற்சித்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்து கம்பன் கலையரங்கில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டம் குறித்து தெரிந்த பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மாணவிகளை ஊர்வலமாக வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கத்துக்கு சமூக அமைப்பினர் அழைத்து வந்தனர். இதனிடையே நேரு எம்.எல்.ஏ. திரு.வி.க. பள்ளிக்கு சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்த நேரு எம்.எல்.ஏ. மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நேரு எம்.எல்.ஏ. அங்கிருந்து விலகிச்சென்றார். மாணவிகள் போராட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. புஸ்சி வீதி, அண்ணாசாலை, கடலூர் வழியாக வந்த வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அப்போது மாணவிகள், சரமாரியாக கேள்வி எழுப்பினர். தங்களுக்கு தனியாக பள்ளி வளாகம் வேண்டும், ஷிப்ட் முறையில் பள்ளியை நடத்தக்கூடாது என கேட்டனர். இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், 2 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார்1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மாணவிகளை அமைதிபடுத்த கல்லூரி நிர்வாகத்தினர் கடும் முயற்சி மேற்கொண்டனர்.
    • அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து தாளாளரை முற்றுகையிட்டு அடிப்படை வசதி செய்யகோரி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதனால் மாணவிகளை அமைதிபடுத்த கல்லூரி நிர்வாகத்தினர் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

    இதனையடுத்து அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து மாணவிகளும் பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் காரணமாக எட்டையாபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்குச் சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவை தாண்டிய பிறகு, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். பல்கலைக்கழக மாணவிகளை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக தகவல் பரவியது. அதை கேள்விப்பட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியதும், அதை அந்த வாலிபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அந்த வாலிபரின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஒரு மாணவியை தவிர, பிற மாணவிகள் ஆபாசமாக வீடியோ எடுக்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் நல இயக்குனர் அரவிந்த் சிங் காங் மறுத்தார்.

    பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவி மனிஷா குலாதி, பல்கலைக்கழக வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

    மேலும், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், இவ்விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு முழுவதும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

    ×