search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National News"

    • ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை, இந்திய விமானப்படையில் பழுதுபார்ப்பதற்காக கௌச்சர் விமான ஓடுளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை பாதுகாப்புப் படைகளின் MI-17 ஹெலிகாப்டரில் பழுதடைந்த தனியார் ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதிக எடை மற்றும் அதிவேக காற்று காரணமாக MI-17 ஹெலிகாப்டர் சமநிலையை இழக்கத் தொடங்கியது. இதனால், விபத்தை தவிர்க்க ஹெலிகாப்டர் கீழே இறக்கிவிடப்பட்டது. அது லிஞ்சோலியில் உள்ள மந்தாகினி ஆற்றின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

    ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் யாருக்கும் காயமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு கேதார்நாத் கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    • விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் மண்டலம், குட்ல வல்லேருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மந்திரி கொள்ளு ரவீந்திரன், கலெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கங்காதரராவ் ஆகியோர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரகசிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய கேமரா பொருத்தியதாக பிரகாசம் மாவட்டம், புல்லல செருவு, அடுத்த கனிகரியை சேர்ந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவரும் அவருக்கு உதவி செய்ததாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


    அவர்களிடம் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நீங்களா கேமராக்களை பொருத்தினீர்கள் என கிண்டல் அடித்து கோஷமிட்டனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுடன் கல்லூரி முழுவதும் அதே நவீன கேமராக்களை கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் எந்த கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் விடுதிக்கு சென்றனர்.

    • விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்காள தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும்.
    • பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முழு நாடும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

    பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்-அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இது குறித்து இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி., கங்கனா ரனாவத் சமீபத்தில் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால், வங்காள தேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும்" என்று பேசியிருந்தார்.

    இந்நிலையில், கங்கனா ரனாவத் பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    "அவர் (ரனாவத்) ஒரு பெண். நான் அவரை மதிக்கிறேன். ஆனால் அவர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் என்று நான் உணர்கிறேன். படித்தவர் இல்லை. கல்வியறிவு பெறவில்லை, மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்று நான் உணர்கிறேன். அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அவர் பெண்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முழு நாடும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்றார்.

    மேலும், பெண்களின் பாதுகாப்பு மிக முக்கியமான பிரச்சனை என்று குறிப்பிட்ட வதேரா, அதற்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் வலியுறுத்தினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
    • பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதை அடுத்து அவருக்கு பலமுறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

    இடையில் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மே மாதம் 10-ந்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊழலில் சிக்கியிருப்பதாகவும், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும், இதன் மூலம் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக டெல்லி பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், "அரசியலமைப்பு நெருக்கடி" தொடர்பாக ஆம் ஆத்மி அரசை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் குழு நேற்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    இதற்கிடையே பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    • கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார்.
    • உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து 2 வயது குழந்தை கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. சுமார் 14 மாதங்களாக குழந்தை கடத்தியவருடன் வளர்ந்த நிலையில், தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்தது. பின் குற்றவாளியும் அழுதார்.

    ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குழந்தையை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த புதன்கிழமை அன்று குழந்தையையும், கடத்தியவரையும் கண்டுபிடித்தனர்.

    கைதான தனுஜ் சாஹர் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் உறவினர் ஆவார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்தியதாக கூறப்படுகிறது. கைதான தனுஜ் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். அவர் உத்தரபிரதேசம் மாநிலம் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். ஆனால் தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தனுஜ் முன்பு உ.பி காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் இருந்தவர் என்பதால் போலீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த அவர், தலைமறைவாக இருந்த காலத்தில் மொபைல் போனை பயன்படுத்தவில்லை.

    பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக அவர் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இருப்பினும் காவல்துறையினரின் தீவிர தேடலுக்குப் பிறகு தனுஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது.
    • ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன.

    குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து விஸ்வாமித்ரி நதியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் மட்டுமின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலைகளையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

    விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 10 முதல் 15 அடி நீளமுள்ள பல முதலைகள் சாலைகள், பூங்காக்கள், குடியிருப்புகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வலம்வருகின்றன. கடந்த ஐந்து நாட்களில் 10 முதலைகளை மீட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    10 முதலைகளில் 2 முதலைகள் வனபகுதியில் விட்டதாகவும், 8 முதலைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஆற்றின் நீர்மட்டம் குறையும் போது அவற்றை விடுவிப்போம் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.




     மேலும் விஸ்வாமித்ரி ஆற்றில் 300 சதுப்புநில முதலைகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆற்றின் நீர் மட்டம் அதன் அபாய கட்டமான 37 அடியிலிருந்து 12 அடியாக குறைந்து இன்று காலை 24 அடியாக இருந்தது.

    எவ்வாறாயினும், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பொதுவான நிகழ்வாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மழைக்காலத்திலும், முதலைகள் ஆற்றின் பாதுகாப்பான எல்லைகளை விட்டு வெளியேறி, வெள்ளம் நிறைந்த தெருக்களில், நகரின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. ஜூன் மாதம், நான்கு முதலைகள் மீட்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டன, ஜூலை மாதத்தில் அந்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    விஸ்வாமித்ரி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து முதலைகளை மீட்கும் பணி ஆண்டு முழுவதும் தொடரும். அதே வேளையில், மழைக்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • கல்லூரியில் நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விடுதி கழிவறையில் (Washroom) இருந்த கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது. தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் கழிவறைக்கு செல்லவே பயப்படுகின்றன. அங்கே செல்வதையே தவிர்த்து விடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார்? என்பதுதான் மாணவிகளின் கேள்வியாக உள்ளது.

    • ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள்.
    • விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உயிர் நாடியாகக் கருதப்படும் புறநகர் ரெயில் சேவையானது, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஆபத்தானதாக முடிகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ரெயிலை பிடித்து வேலைக்கு செல்ல அவசர அவசரமாக புறப்படுவதால் ரெயில்களில் இருந்து விழுந்து அல்லது தண்டவாளத்தில் ஏற்படும் பிற விபத்துகளால் பயணிகள் பலியாவது வாடிக்கையாகி வருகிறது.

    பயணிகளின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இப்பிரச்சனையை மிக தீவிரமான பிரச்சனையாக கருதி கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக்கோரி, யத்தின் யாதவ் என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கடந்த 2023-ல் 2,590 பயணிகள் ரெயில் தண்டவாளத்தில் தவறி விழுந்து இறந்தனர்; ஒவ்வொரு நாளும் ஏழு பேர் பலியாகின்றனர். இதே காலகட்டத்தில் 2,441 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விபத்துகளில் 1,650 பேரும், மேற்கு ரெயில்வே பிரிவில் 940 பேரும் உயிரிழந்துள்ளனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கானது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அமித் போர்கர்ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'மும்பையின் நிலைமையை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.

    இவ்விஷயத்தில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேயின் உயர் அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், எதையும் செய்ய முடியாது என்று கூறக்கூடாது.

    ஆடு, மாடுகளைப் போல பயணிகளை ஏற்றிச் செல்கிறீர்கள். இவ்வாறு பயணிகள் பயணிக்க நிர்பந்திக்கப்படுவது மிகவும் வெட்கக்கேடானது. எனவே மேற்கு மற்றும் மத்திய ரெயில்வேயின் பொது மேலாளர்கள், இவ்விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள் எட்டு வாரங்களுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இதையடுத்து இவ்வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மும்பையின் புறநகர் ரெயில்களில் கடந்த ௨௦ ஆண்டுகளில் 51,000-க்கும் மேற்பட்டோரும், தினசரி 7 பேரும் உயிரிழப்பதாக மேற்கு ரெயில்வே மற்றும் மத்திய ரெயில்வே ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் தரவுகளை சமர்ப்பித்துள்ளன.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது மற்றும் ரெயில் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவை அதிக இறப்பு எண்ணிக்கைக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளன. மற்ற காரணங்களாக மழைக்காலங்களில் நீர் தேங்குவது, தண்டவாளங்களில் குப்பை தீப்பிடிப்பது, பிளாட்பாரங்கள் மற்றும் ரெயில் ஃபுட்போர்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் ஆகியவை என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
    • சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    டெல்லியில் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் ரவிக்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதைக் காணமுடிகிறது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது.

    நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

    இந்தூரில் நடந்த ஒரு யோகா நிகழ்வில் தேசபக்தி பாடலில் உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, இந்தியக்கொடியைப் பிடித்தபடி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் இளையவர் 17 வயது மட்டுமே.

    • பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஐதராபாத் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
    • பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இதன் மூலம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 (Hurun India Rich Listers 2024) அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை 'ஆசியாவின் பில்லியனர் தலைநகரம்' ஆக மாறியுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

    மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் அதிகரித்து, பட்டியலில் அதன் மொத்த எண்ணிக்கை 386 ஆக உள்ளது.

    முதல் நகரங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லி உள்ளது. இது 18 புதிய கோடீஸ்வரர்களை சேர்த்துள்ளது. அதன் பணக்கார பட்டியல் எண்ணிக்கை 217 ஆகக் கொண்டுள்ளது.

    இதற்கிடையில் ஐதராபாத் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து பெங்களூருவை முதன்முறையாக பின்னுக்குத்தள்ளி பணக்காரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    17 புதிய கோடீஸ்வரர்களின் வளர்ச்சியால் ஐதராபாத்தில் மொத்த எண்ணிக்கையை 104 ஆகக் கொண்டுள்ளது. பெங்களூரு 100 பணக்காரர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

    முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நகரங்களில் சென்னை (82), கொல்கத்தா (69), அகமதாபாத் (67), புனே (53), சூரத் (28), குருகிராம் (23) ஆகியவை அடங்கும்.

    • தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
    • மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்.எம்.வி. லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அன்று நவ்யஸ்ரீ, தனது தோழியான ஐஸ்வர்யாவை போனில் தொடர்பு கொண்டு திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். இதனால் நவ்யஸ்ரீ-யை சந்தித்து பேசுவதற்காக ஐஸ்வர்யா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யா, மற்றொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ, பிரச்சனையான திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார். அதில் நவ்யஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து மூவரும் இரவு உணவு அருந்தி விட்டு அனில் புறப்பட்டு சென்றதும், ஐஸ்வர்யா, நவ்யஸ்ரீ வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த ஐஸ்வர்யா நடந்த விவரங்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவ்யஸ்ரீ மீது சந்தேகம் கொண்ட கிரண், இரவு நேரத்தில் சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×