search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
    • வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரம் காட்டி வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது.

    இதில் 18 தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து, அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதிவி யேற்றுக் கொண்டார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதேபோன்று மக்களவை தொகுதி தேர்தலில் 2 எம்.எல்.ஏ.க்.கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதாவது செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.

    இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.


    கேரள மாநிலத்தை பொறுத்தவரை வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. வழக்கமாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே அந்த 3 தொகுதிகளும் காலியாக இருக்கின்றன. இதனால் அந்த தொகுதிகளுக்கு விரைவிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும் இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் வேட்பாளர்கள் தேர்விலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

    வயநாடு தொகுதியில் கடந்த 2019 மற்றும் தற்போது நடந்துமுடிந்த தேர்தல் என இரு மக்களவை தேர்தல்களிலுமே ராகுல்காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அதனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிபெறுவார் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    அவருக்கு எதிராக செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை களமிறக்குவதில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க. தீவிரம் காட்டுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜாவையே போட்டியிட வைக்க அக்கட்சி விவாதித்து வருகிறது.

    பா.ஜ.க. சார்பில் சோபா சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரம்யா ஹரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப், பா.ஜ.க. சார்பில் டாக்டர் சரசு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாலக்காடு தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தங்களது கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    அந்த தொகுதியில் இரு கட்சிகளின் சார்பிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் பணியை விரைவு படுத்தும் வகையில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தயாராக இருக்கின்றன.

    • குறை பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.
    • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள பள்ளித்தாழம் பகுதியில் வசிப்பவர் அமர் பதுர் சவுத் (வயது 45). நேபாளத்தை சேர்ந்த இவர், தனது குடும்பத்தினருடன் புலம் பெயர்ந்து கேரளாவில் வசித்து வந்தார்.

    இவரது மகன் ரோஷன் சவுத் (20). இவரது மனைவி பார்வதி (21). இவருக்கு குறை பிரசவத்தில் 7-வது மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை திடீரென மாயமானது.

    இந்த நிலையில் தனது குழந்தையை கணவர் மற்றும் அவரது பெற்றோர் தான் கொன்று புதைத்து விட்டனர் என்று போலீசில் பார்வதி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், தான் கர்ப்பத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியடையவில்லை.

    இதனால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். இதற்காக சில மருந்துகளையும் கொடுத்தனர். இதன் காரணமாகவே எனக்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அதன்பிறகும் அவர்கள் கோபம் குறையாமல் குழந்தையை கொன்று விட்டனர் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அமர் பதுர் சவுத், அவரது மனைவி மஞ்சு, மகன் ரோஷன் சவுத் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பார்வதியிடம் விசாரணை நடத்தியபோது அவர், ரோஷணுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயநாடு, ரேபரேலி இரண்டு தொகுதியிலும் ராகுல் வெற்றி.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி.

    பாராளுமன்ற தேர்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றாா்.

    விதிகளின்படி ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    வயநாடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது.

    தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி தோ்வு செய்தது.

    இந்நிலையில், தோ்தல் செலவுகளுக்காக ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் தலைமை கட்சி நிதியில் இருந்து வழங்கியது தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்த கிஷோரி லால் சா்மா, கேரளத்தின் ஆழப்புழையில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழகத்தின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் ஆகியோரும் தலா ரூ.70 லட்சம் பெற்றுள்ளனா்.

    இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் நடிகை கங்கனா ரணாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளா் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    தோ்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் மூத்த தலைவா்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனா்.

    வேட்பாளருக்கான தோ்தல் பிரசார செலவுக்கு உச்சவரம்பு இருந்தாலும், அரசியல் கட்சிகளுக்கு அத்தகைய வரம்பு இல்லை. வேட்பாளா்களுக்கான செலவு வரம்பை பாராளுமன்ற தோ்தலுக்கு ரூ.70 லட்சத்தில் இருந்து ரூ.95 லட்சமாகவும், சட்டமன்ற தோ்தலுக்கு ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாகவும் மத்திய அரசு கடந்த 2022-ல் உயா்த்தியது.

    • வயநாடு பேரழிவால் ஒரு வார ஓணம் கொண்டாட்டத்தை கேரள அரசு ரத்து செய்தது.
    • இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

    அங்கு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இதுவரை 231 உடல்களும், 206 உடல் பாகங்களும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

    நிலச்சரிவில் வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் வார கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வயநாடு பேரழிவால் ஓணம் வார கொண்டாட்டத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இந்த சமயத்தில் வயநாடு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    • பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம்.
    • மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. அது மட்டுமின்றி மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

    அதே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன? என்பது தெரிவில்லை. அவர்களை தேடும் பணி 20 நாட்களுக்கு மேலாக நடந்தது. ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 1,200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இறுதிக்கட்டமாக நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியவர்களை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமானோர் என்ன ஆனார்கள்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர தொடங்கினர். கட்டுப்பாடுகளில் சிறிது தளர்வு அமல்படுத்தப்பட்டதால் அவர்களின் வருகை அதிகரித்தது.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பாதி இடிந்தநிலையில் இருப்பதால், அவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிலச் சரிவு பாதித்த இடங்களை பார்ப்பதற்கு வருகிறார்கள்.

    அதனை தடுக்கும் விதமாக முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வயநாடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ கூறியிருப்பதாவது:-

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பல்வேறு படைகளை சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார் வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லலாம். மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்க்ப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • கடந்த 30 ஆம் தேதி வயநாட்டில் பயங்கர பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கிகள் EMI பிடித்தம் செய்ததற்கு மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

    • கேரள மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
    • கேரளாவிற்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு .

    வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. நேற்று ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இருவரும் தேநீர் அருந்தி நிதி உதவி வழங்கினர்.

    இதற்கு முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

    இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடையாளம் காணப்படாத 401 உடல்கள், உடல் உறுப்புக்கான டி.என்.ஏ. பரிசோதனை முடிந்துள்ளது.
    • மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. நள்ளிரவு வேளையில் அரங்கேறிய இந்த கோரம் காரணமாக வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உறக்கத்திலேயே மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, தன்னார்வலர்கள் என பலதரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரைப் பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

    இதற்கிடையெ, அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நேற்று நிறைவடைந்தது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.
    • மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி 16-வது நாளாக இன்று நீடிக்கிறது.

    கண்டுபிடிக்காமல் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விரிவான தேடுதல் பணி கடந்த 9-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    சூரல்மலை பகுதியில் நேற்று பிற்பகலில் கனமழை கொட்டியது. இதனால் சாலியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராணுவ வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் மூழ்கியது.

    இதனால் அந்த வழியாக மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல ராணுவவீரர்கள் அமைத்திருந்த பெய்லி பாலம் மூடப்பட்டது. இந்த மழையால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடிய மர்த்தும் பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கி உள்ளது.


    நிலச்சரிவில் சிக்கி பலியான பலரது உடல்கள் சிதைந்து உருக்குலைந்த நிலையிலும், பலரது உடல்கள் துண்டுதுண்டாகிய நிலையிலும் மீட்கப்பட்டதால் பலியான பலரை அடையாளம் காண முடியவில்லை. இதனால் அந்த உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று அந்த பணி நடைபெற்றது. அடையாளம் காணப்படாத 401 உடல்கள்-உடல் உறுப்புகளுக்கான டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்தது. இதுகுறித்து கேரள மாநில வருவாய்த் துறை மந்திரி ராஜன் கூறிய தாவது:-

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 401 உடல்கள்-உடல் பாகங்களின் டி.என்.ஏ. பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 52 உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்துள்ளதால் அவை கூடுதல் பரிசோதனை செய்யவேண்டும். மீதமுள்ள 349 பேரில் 194 உடல் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுடையது.

    மீதமுள்ள உடல் உறுப்புகள் 54 நபர்களுடையது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. டி.என்.ஏ. சோதனைகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 248 உடல் உறுப்புகள் 121 ஆண்களுக்கும், 127 பெண்களுக்கும் சொந்தமானது.

    நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களில் 1,505 பேர் 12 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 566 பேர், குழந்தைகள் 368 பேர் ஆவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலச்சரிவில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை வாடகை வீடுகளுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ6ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    உறவினர்களின் வீடுகளுக்கு மாறுபவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வாடகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர்மேலாண்மை துறை வெளியிட்டுள்ள உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர்.
    • மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருக்குமரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவிகள் நபிஷா, சுபிக்ஷா.இருவரும் வாவிபாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். அதற்காக 2 பேரும், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர். அவ்வாறு பெற்ற நிதியை இன்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர். மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

    • கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
    • முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979-ம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை கேரளா வழக்கமாக கொண்டுள்ளது. கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

    அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத்துறையிடம்தான் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணை கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதி மன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.

    அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கி வருகிறது.


    இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சமீபத்திலே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்.பி. உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.

    இதுகுறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதலமைச்சர் தயாரா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.

    இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.

    அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம்.

    ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி. வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×