search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant death"

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் படுத்திருந்தது.
    • யானை குறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் பீட் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் புளியங்குடி வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் படுத்திருந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவருடன் புளியங்குடி வனச்சரகர் கார்த்திகேயன், வனவர்கள் மகேந்திரன், குமார் மற்றும் களக்காடு முண்டந்துறை வன காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் முத்துகிருஷ்ணன், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, மற்றும் டாக்டர்கள் அருண்குமார், கருப்பையா, நெல்லை உதவி வன பாதுகாவலர் ஷா நவாஸ்கான் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அங்கு யானை கூட்டங்கள் திரண்டது. இதனால் யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் சோர்வடையாமல் இருக்க மருந்துகள் வழங்கிய வனத்துறை ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    மீண்டும் இன்று காலை அங்கு சென்றபோது யானைகள் கூட்டமாக அங்கு நின்றதால் பட்டாசு வெடித்து மற்ற யானைகளை கலைந்து போக செய்தனர். பின்னர் படுத்திருந்த யானையை பரிசோதித்தபோது அந்த யானை இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய அதன் உடலை இன்று அந்த பகுதியிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதன்பின்னர் யானையை அந்த காப்புக்காட்டிலேயே தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை டாக்டர்கள் கூறுகையில், யானைக்கு 40 வயதாகிவிட்டது. அதன் கால், உடல், வயிறு உள்ளிட்ட எந்த பாகங்களிலும் எவ்வித காயங்களும் இல்லை. ஒருவேளை அதன் பற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு சாப்பிட முடியாமல் யானை இறந்திருக்கலாம்.

    அவ்வாறு இல்லையெனில் கடைசி கால கர்ப்பம் நடந்திருக்க கூடும். அதாவது யானையின் வயிற்றில் குட்டி இருந்து, அதனை பெற்றெடுக்க முடியாமல் வலியில் யானை உயிரிழந்திருக்கலாம்.

    அல்லது அதன் ரத்தத்தில் ஏதேனும் விஷம் கலந்து இறந்ததா என்பதும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்த பின்னரே யானையின் இறப்புக்கு இறுதியான காரணம் தெரியவரும் என்றனர்.

    கோவை அருகே 3 யானைகள் பலியான விவகாரம் ரெயிலை அதிவேகமாக இயக்கினார்களா? என்ஜின் டிரைவர், உதவியாளரிடம் விசாரணை கோவை-02

    கோவை:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் உள்ளன. யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி இடம்பெயர்ந்து செல்வது வழக்கம்.

    வனப்பகுதி வழியாக கோவை-பாலக்காடு இடையே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரெயில்களை குறைந்த வேகத்தில் இயக்க என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஆனாலும் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மங்களூரில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்றடையும்.

    இந்த ரெயில் கோவை அருகே உள்ள போத்தனூர் நோக்கி நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டு இருந்தது. ரெயிலில் 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ரெயில் நவக்கரை தங்கவேல் காட்டுமூலை பகுதியில் வந்து கொண்டு இருந்த போது 2 குட்டிகளுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தை கடக்க முயன்றது.

    யானைகளை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். திடீரென யானைகள் தண்டவாளத்தை கடந்ததால் கண்இமைக்கும் நேரத்தில் யானைகள் மீது ரெயில் மோதியது. ரெயில் மோதிய வேகத்தில் 2 குட்டிகளுடன் கூடிய பெண் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கும் ரெயில்வே நிர்வாகத்துக்கு என்ஜின் டிரைவர் புகார் செய்தார். உடனடியாக வனத்துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து என்ஜின் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் தண்டவாளத்தில் இறந்து கிடந்த யானைகளை அப்புறப்படுத்தினர். நீண்ட நேரமாக ரெயில் நிறுத்தப்பட்டதால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். ரெயில் 3½ மணி நேரத்துக்கு பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு டிரைவர்கள் மாற்றப்பட்டு மீண்டும் சென்னைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. விபத்தை ஏற்படுத்திய ரெயில் என்ஜின் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர் விபத்தை ஏற்படுத்திய ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளரிடம் அறிவுறுத்தப்பட்ட வேகத்தில் சென்றார்களா? அல்லது அதிவேகமாக சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறனர்.

    கேரளாவில் கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான கஜராஜா யானை மரணமடைந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Dakshayani #Elephant
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏராளமான யானைகள் கோவில்களிலும், தனியாராலும் வளர்க்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் யானை காப்பகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளது. இங்கும் பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் உள்ள கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்க அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். கேரளாவில் உள்ள மன்னர் குடும்பமான திருவிதாங்கூர் ராஜகுடும்பம் சார்பில் 1950-ம் ஆண்டு கோடநாடு யானை காப்பகத்தில் இருந்து ஒரு பெண் யானை குட்டி வாங்கப்பட்டது.

    அந்த யானை குட்டிக்கு தாட்சாயினி என்று பெயர் சூட்டி ஆற்றிங்கல் திருவாராட்டு காவுக்கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்தனர். அதன்பிறகு அந்த யானை 1960-ம் ஆண்டு செங்கல்லூர் மகாதேவர் கோவிலுக்கு வழங்கப்பட்டது. பிறகு அங்கேயே தேவசம்போர்டு பராமரிப்பில் யானை தாட்சாயினி இருந்து வந்தது.



    இந்த நிலையில் 88 வயது ஆன நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி யானையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த யானை திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனம் கோடு மனமேல்குன்று பகுதியில் உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான யானை காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தாட்சாயினி யானை நேற்று பிற்பகல் மரணம் அடைந்தது. இந்த தகவல் கிடைத்ததும் திருவிதாங்கூர் ராஜகுடும்ப பிரதிநிதி அங்கு சென்று தாட்சாயினி யானைக்கு அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பக்தர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    தாட்சாயினி யானை பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் பத்மநாபசுவாமி கோவில் சாமி ஊர்வலம் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த சுவாமி ஊர்வலங்களில் பங்கேற்ற பெருமை பெற்றது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்த யானைக்கு ‘கஜராஜா’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் அதே ஆண்டு ஆசியாவிலேயே அதிக வயது உள்ள யானை என்ற சிறப்பையும் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தாட்சாயினி யானை இடம்பெற்றது.

    கேரள மக்களின் மனம் கவர்ந்த யானையாக வலம் வந்த தாட்சாயினின் மரணம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த காப்பகத்திலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Dakshayani 
    தேனி அருகே நிலச்சரிவில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக பலியானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே சின்னமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட ஹைவேவிஸ் மலைப்பகுதி. இங்கு யானை, மான், முயல் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்தது.

    இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்த விழுந்தன.

    இந்த நிலையில் மகாராஜா மெட்டு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் 1 வயது மதிக்கத் தக்க குட்டி ஆண் யானை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வனத் துறையினர் கூறுகையில் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. எனவே வனப்பகுதியில் ஈரப்பதமாக காணப்படுகிறது. உணவு தேடி வந்த யானை திசை மாறி நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம். அப்போது வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்துள்ளது.

    வனப்பகுதியில் யானை உள்பட வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்கு பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இறந்த யானை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    ×