என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதுமலை தெப்பக்காடு முகாமில் சுதந்திர தினத்தன்று 55-வது பிறந்தநாளை கொண்டாடிய யானை சந்தோஷ்.
தமிழகத்திலேயே மிக நீளமான தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு
- கடந்த மாதம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை யானை சந்தோஷ் கொண்டாடியது.
- தெப்பக்காடு முகாமின் அடையாள திகழ்ந்த யானை சந்தோசின் மரணம் வனத்துறையினர், பாகன்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு யானையை பராமரிக்க தலா ஒரு பாகன், உதவியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் சிறு, சிறு பணிகள் செய்வதோடு தங்களுக்கு தேவையான பசுந்தீவனத்தை வனப்பகுதியில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.
இந்த முகாமின் அடையாளமாகவும், வனத்துறையினர் மற்றும் அனைத்து பாகன்களின் செல்லப்பிள்ளையாகவும் சந்தோஷ் என்ற 55 வயது யானை திகழ்ந்து வந்தது. இந்த யானை 5 வயதில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த மாதம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை யானை சந்தோஷ் கொண்டாடியது. அப்போது ராகி மற்றும் கொள்ளு கலந்து தயாரிக்கப்பட்ட கேக்கை வனத்துறையினர் வெட்டி யானை சந்தோசுக்கு வழங்கினர். இந்தநிலையில் வயது மூப்பால் உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வந்த யானை சந்தோஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள் உடல் கூறாய்வு செய்த பின் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தெப்பக்காடு முகாமின் அடையாள திகழ்ந்த யானை சந்தோசின் மரணம் வனத்துறையினர், பாகன்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே நீண்ட தந்தம் கொண்ட யானையாக சந்தோஷ் திகழ்ந்தது. சுமார் 1.5 மீட்டர் நீளம் கொண்ட தந்தங்களோடு யானைகள் முகாமில் கம்பீரமாக இந்த யானை வலம் வந்தது. தந்தங்கள் தரையை தொடும் அளவுக்கு நீளமாக இருந்ததால் யானை சந்தோசுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து தந்தங்களை அறுத்து நீளத்தை வனத்துறையினர் குறைத்திருந்தனர்.






