search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் அடிப்பட்டு யானை இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்
    X
    ரெயிலில் அடிப்பட்டு யானை இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்

    கோவை அருகே 3 யானைகள் பலியான விவகாரம் - என்ஜின் டிரைவர், உதவியாளரிடம் விசாரணை

    கோவை அருகே 3 யானைகள் பலியான விவகாரம் ரெயிலை அதிவேகமாக இயக்கினார்களா? என்ஜின் டிரைவர், உதவியாளரிடம் விசாரணை கோவை-02

    கோவை:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் உள்ளன. யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி இடம்பெயர்ந்து செல்வது வழக்கம்.

    வனப்பகுதி வழியாக கோவை-பாலக்காடு இடையே தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரெயில்களை குறைந்த வேகத்தில் இயக்க என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஆனாலும் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மங்களூரில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக சென்னை சென்றடையும்.

    இந்த ரெயில் கோவை அருகே உள்ள போத்தனூர் நோக்கி நேற்று இரவு 9 மணியளவில் வந்து கொண்டு இருந்தது. ரெயிலில் 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ரெயில் நவக்கரை தங்கவேல் காட்டுமூலை பகுதியில் வந்து கொண்டு இருந்த போது 2 குட்டிகளுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தை கடக்க முயன்றது.

    யானைகளை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார். திடீரென யானைகள் தண்டவாளத்தை கடந்ததால் கண்இமைக்கும் நேரத்தில் யானைகள் மீது ரெயில் மோதியது. ரெயில் மோதிய வேகத்தில் 2 குட்டிகளுடன் கூடிய பெண் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கும் ரெயில்வே நிர்வாகத்துக்கு என்ஜின் டிரைவர் புகார் செய்தார். உடனடியாக வனத்துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து என்ஜின் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் தண்டவாளத்தில் இறந்து கிடந்த யானைகளை அப்புறப்படுத்தினர். நீண்ட நேரமாக ரெயில் நிறுத்தப்பட்டதால் ரெயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். ரெயில் 3½ மணி நேரத்துக்கு பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு டிரைவர்கள் மாற்றப்பட்டு மீண்டும் சென்னைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. விபத்தை ஏற்படுத்திய ரெயில் என்ஜின் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர் விபத்தை ஏற்படுத்திய ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் உதவியாளரிடம் அறிவுறுத்தப்பட்ட வேகத்தில் சென்றார்களா? அல்லது அதிவேகமாக சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகிறனர்.

    Next Story
    ×