என் மலர்
நீங்கள் தேடியது "ரீல்ஸ் வீடியோ"
- சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் புகைப்படங்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கேமரா செல்பி ஸ்டிக் போன்ற உபகரணங்களை எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேட்டி எடுப்பது, நேரலை செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
உயர் பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க பயன்படுத்தப்படும் 'கேமரா செல்பி ஸ்டிக்' போன்ற உபகரணங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், சுப்ரீம் கோர்ட்டின் உயர் பாதுகாப்பு பகுதிகளுக்குள் ஊடகத்தினர் நுழைய ஒரு மாதம் தடை விதிக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரம் பணியமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார்.
- பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது இப்படித்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் சண்டிலா அருகே உள்ள முரார்நகரை சேர்ந்தவர் ஷீலு. இவருக்கும் அடமாவ் கிராமத்தை சேர்ந்த சாண்டீரா என்கிற பப்லு என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
புதுமண தம்பதிகள் இருவரும் அடமாவ் கிராமத்தில் 2 மாதங்கள் வசித்து வந்தனர். ஷீலு கர்ப்பிணியானார்.
இந்தநிலையில் வீட்டை விட்டு சென்ற பப்லு, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய தந்தை புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பப்லுவை தீவிரமாக தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பப்லு காணாமல் போனதற்கு ஷீலுதான் காரணம் என்று கணவர் குடும்பத்தினர் அவரை குற்றம் சாட்டினர்.
8 ஆண்டுகளாக பப்லு பற்றிய எந்த தகவலும் தெரியாமல், ஷீலு தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்தது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கிய ஷீலு, அதில் வரும் ரீல்ஸ்களை பார்த்து ரசித்து வந்தார். அதில் ஒரு வீடியோவில் மாயமான தனது கணவர் பப்லு இருப்பதை பார்த்தார். பல முறை அந்த வீடியோவை பார்த்து அதில் இருப்பது தனது கணவர்தான் என்பதை உறுதிப்படுத்திய ஷீலு, அதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பல்வேறு பகுதிகளில் தேடியபோது பப்லு, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் லூதியானா சென்று பப்லுவை தேடிப்பிடித்தனர். அப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமாகியது.
இதையடுத்து அவரை சொந்த கிராமத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு எதற்காக அவர் வீட்டை விட்டு ஓடினார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.
பப்லு ஓடிப்போனதற்கு 8 ஆண்டுகளாக பழியை சுமந்து வந்த ஷீலு, மீண்டும் தனது கணவரை ஏற்பாரா என்பதும் பின்னர்தான் தெரியவரும்.
- வீடியோ எடுப்பவர்களில் பலர், வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அம்பலவயல் நெல்லராச்சல் என்ற பகுதியில் அணை ஒன்று இருக்கிறது.
திருவனந்தபுரம்:
'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூகவலை தளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் தற்போதைய காலக்கட்டத்தில், அதுபோன்ற வலை தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் அதிகமானோர் வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அப்படி வீடியோ எடுப்பவர்களில் பலர், வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படி செயல்பட்டு அசம்பாவிதம் மற்றும் விபத்தில் சிக்குபவர்கள் ஏராளம். அப்படித்தான் ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அம்பலவயல் நெல்லராச்சல் என்ற பகுதியில் அணை ஒன்று இருக்கிறது. அந்த இடத்திற்கு வாலிபர்கள் சிலர் தடையை மீறி ஜீப்பில் சென்றனர். அவர்கள் 'ரீல்ஸ் வீடியோ' எடுப்பதற்காக அணைக்கு அருகில் உள்ள செங்குத்தான பகுதியில் தங்களின் ஜீப்பை ஓட்டிச் சென்றனர்.
அப்போது அவர்களது ஜீப், கட்டுப்பாட்டை இழந்து அணைக்குள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ஜீப்பில் இருந்த வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நள்ளிரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அதுபற்றி யாருக்கும் தெரியவில்லை.
அதே நேரத்தல் வாலிபர்கள் நள்ளிரவில் அணைப் பகுதிக்குள் காரில் சென்றதை பார்த்த சிலர், மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது தான், 'ரீல்ஸ் வீடியோ' எடுக்க முயன்றபோது வாலிபர்களின் ஜீப் அணைக்குள் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், அணையில் மூழ்கிக்கிடந்த ஜீப்பை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட அணைப் பகுதிக்குள் வாகனத்தில் அத்துமீறி சென்றது மட்டுமின்றி, ஆபத்தான முறையில் 'ரீல்ஸ் வீடியோ' எடுத்த பயீஸ், முகம்மது ரஹீன், முகம்மது நிஜாஸ், முகம்மது ஷாபி, முகம்மது ஷானிப் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த இடத்தில் சமீபத்தில் இதேபோன்று டிராக்டர் ஒன்று கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆக்ராவில் உள்ள யமுனை நதியில் வீடியோ ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தனர்.
- இறந்த ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனை நதியில் வீடியோ ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த ஆறு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று வயல்களில் வேலை செய்துவிட்டு அவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தனர். நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அவர்கள் முதலில் ஆற்றங்கரையில் விளையாடி ரீல்ஸ் வீடியோ எடுத்ததைக் கண்டனர்.
பின்னர் ரீல்ஸ் எடுக்க ஆழத்திற்குச் சென்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பல மணி நேரத்திற்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்த ஆறு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
- ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.
- இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய இளம் வயதினர் கைகளில் பெரும்பாலும் வைத்திருப்பது செல்போன் மட்டுமே. கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. செல்போன் நிச்சயம் இருக்கும். அதனை வைத்து தாங்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்கள் போன்றவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தனர்.
நாளடைவில் இந்த மோகம் சமூக வலைதளத்தில் வெளியிட வைக்கும் அளவிற்கு சென்றது. இதில் கிடைத்த வரவேற்பு இன்று ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர். இதில் சில உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
கடல் நடுவே உள்ள பாறையில் ஏறி நின்று சீறி வரும் அலைகளுடன் வீடியோ எடுப்பது. ரெயில் மற்றும் பஸ்களில் தொங்கியபடி படம் எடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது என அவர்களின் செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
இது போன்று ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ரீல்ஸ் எடுப்பது தொடர்ந்தே வருகிறது.
இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி ஆடிச்செல்லும் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது தான் ரீல்ஸ் மோகம் தலைதூக்கி உள்ளது.
அவர், ஓடும் ரெயிலின் படிக்கட்டில் முதலில் இறங்கி நிற்கிறார். பின்னர் படியில் நின்று கொண்டே சினிமா பாடலுக்கு நடனமாடுகிறார். பின்னர் திரும்பி நின்றபடி தொங்கிய நிலையில் செல்கிறார்.
கைகளை அசைத்த படியும், தலையை ஆட்டியபடியும் செல்லும் பெண், பல்வேறு முக பாவனைகளையும் காட்டிச் செல்கிறார். அதனை ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரை பின் தொடர்வோர் கூட கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை அகற்ற வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தங்களை அதிகமானோர் பின் தொடர வேண்டும் என்ற ஆசையில் உயிருக்கு ஆபத்தான முறையில் நூதன புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து ரிலீஸ் அடிப்படையில் பதிவிட்டு வரும் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருவதால், இது போன்ற சம்பவங்களை ஊக்குவிக்க கூடாது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- 3 பேரின் முகவரியையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- கருமத்தம்பட்டி போலீசார் மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி பைக் ரேசில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும், சம்பவ இடத்திற்கு சென்று, அதிவேகமாக வாகனத்தை இயக்கிய வாலிபர்களை பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன் மற்றும் தமிழ் நாதன் என்பதும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரின் முகவரியையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர்கள், தாங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றதையும் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த கருமத்தம்பட்டி போலீசார் மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வாலிபர்களின் பெற்றோர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததால் 3 பேரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
இதற்கிடையே வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதும், போலீஸ் வளாகத்தில் ரிலீஸ் பதிவிட்டு அதை பகிர்ந்ததும் தவறு என்பதை உணர்ந்துள்ளோம். எங்களை பார்த்து யாரும் இப்படி செய்யாதீர்கள் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
- பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும்.
- 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது.
சமூக வலைதளங்களில் அதிக லைக்குகளை பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு விதமான ரீல்ஸ் வீடியோக்களை தயாரித்து பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்களில் அவர்கள் உயிரை பணயம் வைத்து எடுக்கும் சாகச காட்சிகள் பயனர்களை வியப்பில் ஆழ்த்தினாலும், சில நேரங்களில் அவை விபரீதத்திலும் முடிந்து விடுகிறது.
இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக இளம்பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தில் இருந்து அந்தரத்தில் தொங்குவது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தின் மேற்பகுதியில் நிற்கும் இளம்பெண் ஒருவர் ஒரு வாலிபரின் கையை பிடித்துக்கொண்டு கீழே அந்தரத்தில் தொங்குவது போன்று காட்சி உள்ளது.
இதனை 2 இளைஞர்கள் வீடியோவில் பதிவு செய்வது போன்றும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் இதுபோன்ற சாகசங்களை தடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
- சாகசங்கள் சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது.
- 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிரபலம் ஆவதற்காகவே இளைஞர்களும், இளம் பெண்களும் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். அந்த வீடியோக்களுக்காக அவர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது.
அதுபோன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயன்று நூலிழையில் உயிர்தப்பிய காட்சி உள்ளது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது நண்பருடன் தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு ரீல்ஸ் செய்வதற்காக தயாராகும் காட்சிகள் உள்ளது. அப்போது பின்னால் தண்டவாளத்தில் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் அந்த பெண் ரீல்ஸ் உருவாக்குவதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் ரெயில் அந்த பெண்ணின் பக்கத்தில் வந்த போது ரெயில் என்ஜின் டிரைவர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து தள்ளினார். இதனால் அந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரெயில் என்ஜின் டிரைவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் ரீல்ஸ் வீடியோ தயாரித்த பெண்ணையும், அவரது நண்பரையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.






