என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போலீஸ் விசாரணைக்கு வந்ததை ரீல்சாக எடுத்து பதிவிட்ட 3 வாலிபர்கள்- மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
- 3 பேரின் முகவரியையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- கருமத்தம்பட்டி போலீசார் மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
நீலாம்பூர்:
கோவை மாவட்டம் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி பைக் ரேசில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து படையினரும், சம்பவ இடத்திற்கு சென்று, அதிவேகமாக வாகனத்தை இயக்கிய வாலிபர்களை பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன் மற்றும் தமிழ் நாதன் என்பதும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரின் முகவரியையும் பெற்றுக்கொண்ட போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர்கள், தாங்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றதையும் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த கருமத்தம்பட்டி போலீசார் மீண்டும் அந்த வாலிபர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வாலிபர்களின் பெற்றோர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததால் 3 பேரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
இதற்கிடையே வாலிபர்கள் 3 பேரும் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் இரு சக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதும், போலீஸ் வளாகத்தில் ரிலீஸ் பதிவிட்டு அதை பகிர்ந்ததும் தவறு என்பதை உணர்ந்துள்ளோம். எங்களை பார்த்து யாரும் இப்படி செய்யாதீர்கள் என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.






